மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. ஜெமிமா ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்கள் எடுத்தார்.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணிக்காக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 93 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்தார்.

லிட்ச்ஃபீல்ட் தனது ஆட்டத்தில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வரலாறு படைத்த ஜெமிமா மற்றும் ஹர்மன்பிரீத்

ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா இணைந்து 167 ரன்கள் எடுத்தனர்.

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மோசமாகவே இருந்தது. இரண்டாவது ஓவரில் ஷபாலி வர்மாவை 10 ரன்களுக்கு இழந்தது.

இதையடுத்து ஸ்மிருதி மந்தனா, ஜெமிமாவுடன் இணைந்து இந்திய அணியின் சரிவை சரிசெய்ய முயன்றார். இருப்பினும், 10 வது ஓவரின் இரண்டாவது பந்தில் அவர் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் ஜெமிமா முழு வீச்சில் களமிறங்கினார். இருவரும் அரைசதங்களை எட்டியது மட்டுமல்லாமல், நிலையான ரன் விகிதத்தையும் கொண்டிருந்தனர்.

ஜெமிமா 56 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார், அதே நேரத்தில் ஹர்மன்பிரீத் கவுர் 65 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு முன்பாக, 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டிருந்தனர். இருப்பினும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனது சதத்தை எட்டத் தவறி, 89 ரன்கள் எடுத்து பெவிலியனுக்குத் திரும்பினார்.

ஆனால் ஜெமிமா இறுதி வரை இருந்தார், தனது அணியை வெற்றிக்கு வழிநடத்திய பின்னரே பெவிலியனுக்குத் திரும்பினார். ஜெமிமா 134 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஆட்டத்தில் 14 பவுண்டரிகள் அடங்கும்.

தீப்தி சர்மா 24 ரன்களும், ரிச்சா கோஷ் 26 ரன்களும், அமன்ஜோத் கவுர் 15 ரன்களும் எடுத்தனர்.

ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக, இந்திய அணி 2005 மற்றும் 2017 -ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இருப்பினும், இதற்கு முன்பு இரண்டு முறையும் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஏமாற்றத்தை சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி

நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சிறப்பாக இல்லை. ஆறாவது ஓவரின் முதல் பந்தில் அலிசா ஹீலியை கிராந்தி வீழ்த்தினார். ஹீலி ஐந்து ரன்கள் எடுத்தார்.

ஆனால் பின்னர் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆஸ்திரேலிய அணிக்கு பலம் சேர்த்தனர். லிட்ச்ஃபீல்ட் 77 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும், அவர் 119 ரன்களில் அமன்ஜோத் கவுரின் பந்தில் ஆட்டம் இழந்தார்.

லிட்ச்ஃபீல்ட் மற்றும் பெர்ரி இணைந்து 155 ரன்கள் சேர்த்தனர், ஆனால் எலிஸ் பெர்ரியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

எலிஸ் பெர்ரி 77 ரன்கள் எடுத்து போது ராதா யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் ஆஷ்லே கார்ட்னர் 46 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியை 300 ரன்களைத் தாண்டி முன்னேற செய்தார். அவர் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

சரணி மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும், கிராந்தி கவுர், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

நவம்பர் 2-ம் தேதி மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Share.
Leave A Reply