பெங்களூருவில் டாக்டர் ஒருவர் மனைவிக்கு கூடுதல் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்துவிட்டு தனது காதலிக்கு மெசேஜ் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் மகேந்திர ரெட்டி மற்றும் கிருத்திகா ரெட்டி. கணவன் மனைவியான இருவரும் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திடீரென டாக்டர் கிருத்திகா உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரை அவரின் கணவர் மகேந்திர ரெட்டி உடனே மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் மருத்துவமனையில் கிருத்திகா ரெட்டி இறந்து போனார்.
உடனே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கிருத்திகாவின் உடம்பு உருப்புகளில் Propofol எனப்படும் ஒருவகை மயக்க மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மகேந்திர ரெட்டியின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது மயக்க மருந்து மற்றும் இன்ஜெக்சன் டியூப் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் டாக்டர் மகேந்திரா கைது செய்யப்பட்டார்.
`உனக்காகத்தான் மனைவியை கொன்றேன்’- காதலிக்குத் தகவல் சொன்ன கணவன்
தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி கிருத்திகா இயற்கையான முறையில் இறந்தது போன்று மகேந்திரா காட்டியிருக்கிறார்.
ஆனால் டாக்டர் மகேந்திராவின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது அவர் தன் மனைவியைக் கொலை செய்திருப்பதை ஒப்புக்கொண்டிருந்தது தெரிய வந்தது.
பேமெண்ட் ஆப் ஒன்றின் மூலம், தான் காதலிக்கும் பெண்ணிற்கு மகேந்திரா மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் ‘உனக்காகத்தான் என் மனைவியைக் கொலை செய்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் கூறுகையில்,”இதுவரை சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையில் பார்க்கையில் பெண் டாக்டரின் கொலையில் அவரின் கணவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
பெண் டாக்டரை ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர் டாக்டர் மகேந்திராதான். பெண் டாக்டரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது”என்று கூறினார்.
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.

