இந்தியாவின் தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று பேர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த இளைய சகோதரிகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த எல்லையா என்பவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.

அவர்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே உள்ள தாண்டூரில் கடந்த 02 ஆம் திகதி இரவு நடைபெற்றது. மூத்த மகளின் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று இருந்தனர்.

திருமணம் முடிந்தபின் நேற்று (03) காலை தாண்டூரிலிருந்து இளைய சகோதரிகளான இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் நந்தினி, இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் சாய்பிரியா, பிளஸ் டூ படிக்கும் தனுஷா ஆகியோர் விபத்தில் சிக்கிய பேருந்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர்.

இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியது.

இந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

Share.
Leave A Reply