சபரிமலை கோவிலின் கருவறை வாயிலில் உள்ள இரண்டு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு (இந்தப் புகைப்படத்தில் உள்ள) அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தென் இந்தியாவின் புகழ்பெற்ற இந்து கோவிலான கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரு பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. காரணம், அந்தக் கோவிலின் சில சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல கோவில்களில், பெரும்பாலும் பக்தர்களின் நன்கொடை மூலம், சிலைகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள் பொருத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் சபரிமலை கோவிலில் இந்த திருட்டு நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தங்கம் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்துள்ளது. போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன்னாள் உதவி பூசாரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை கண்காணித்து வரும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர் விசாரணைகளை நடத்தி வருகிறது. அடுத்த அமர்வு புதன்கிழமை நடைபெற உள்ளது.

சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

திருடு போனது என்ன?

சபரிமலை கோவிலின் கருவறை வாயிலில் உள்ள இரண்டு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சபரிமலை கோவிலின் சிறப்பு ஆணையரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பல பகுதிகளில் சிலைகளில் இருந்து தங்கம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் செப்டம்பர் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அதன் பின்னர் வெளியான பல நீதிமன்ற உத்தரவுகளில், நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி மற்றும் கே.வி. ஜெயகுமார், கோவில் அதிகாரிகள் சமர்ப்பித்த பதிவுகள், பழைய மற்றும் புதிய புகைப்படங்கள் மற்றும் எஸ்ஐடி சேகரித்த பிற ஆவணங்களை ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் இதனை ‘ஐயப்பனின் புனித நகைகள் திருடப்பட்டது தொடர்பான விசித்திரமான வழக்கு’ என விவரித்துள்ளனர்.

சிலைகளின் பழுது பார்க்கும் பணிகளைப் பற்றிய முழுமையான கோப்புகள் மற்றும் பதிவுகளை சமர்ப்பிக்க கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டபோது, “உண்மையில் ஒரு தேனீ கூட்டின் மீது கைவைக்கிறோம் என்பதைக் கூட நாங்கள் உணரவில்லை” என்று நீதிபதிகள் கூறினர்.

ஆவணங்களின்படி, சபரிமலை கோவிலுக்கு யுனைடெட் ப்ரிவரீஸ் நிறுவனம் மூலம் விஜய் மல்லையாவால் சுமார் 30.291 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

1998-1999 காலக்கட்டத்தில் இந்த தங்கம் கோவில் ஆபரணங்கள் மற்றும் வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அதன்படி துவாரபாலகர்கள் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களிலும் 1.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம், கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB), துவாரபாலகர் சிலைகள் மீதான தங்க கவசத்தை செப்பனிடுவதற்காக, வெளியே எடுக்க உன்னிகிருஷ்ணன் போட்டி என்பவருக்கு அனுமதி அளித்தது. உன்னிகிருஷ்ணன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர் மற்றும் கோவிலின் முன்னாள் உதவி பூசாரியும் கூட.

இரண்டு மாதங்களுக்கு பிறகு கவசங்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டபோது அவற்றின் எடை பரிசோதிக்கப்படவில்லை.

ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் அவை மிகவும் இலகுவாக இருந்ததாக தெரியவந்தது. எஸ்ஐடி குழுவின் அடுத்தகட்ட விசாரணையில், சிலைகள் வைக்கப்படும் மேடைகள் மற்றும் கதவுகளின் சட்டகங்களிலிருந்தும் தங்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2019 முதல் இதுவரை சுமார் 4.54 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

, ஐயப்பன் கோவிலில் மாதவிடாய் வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

சிலைகளை கோவிலுக்கு வெளியே கொண்டு செல்ல உன்னிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டது மிகவும் அபூர்வமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது, ஏனெனில் பொதுவாக செப்பனிடும் பணி கோவிலுக்குள் தான் செய்யப்படுகிறது.

அதே போல், “விலைமதிப்பு மிக்க பொருட்களை அவரிடம் ஒப்படைக்கும்போது”, கோவில் வாரியம் அதனை வெறும் ‘செம்பு தகடு’ என பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செப்பனிடும் பணிக்குப் பிறகு சுமார் 474.9 கிராம் தங்கத்தை வைத்துக்கொள்ள உன்னிகிருஷ்ணனை அனுமதித்தது பெரும் தவறு என கோவில் வாரியத்தை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

உன்னிகிருஷ்ணன் கோவில் வாரியத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், “ஒரு தெரிந்த அல்லது உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக” அந்த “மீதமுள்ள தங்கத்தை” பயன்படுத்த அனுமதி கேட்டிருந்ததை நீதிமன்றம் குறிப்பிடுகிறது.

“இது மிகவும் கவலைக்குரியது. இதில் உள்ள முறைகேடுகளின் தீவிரத்தையே இது வெளிப்படுத்துகிறது” என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் சபரிமலை ஒன்றாகும்.

 

குற்றம்சாட்டப்பட்டவர்களின் மறுப்பு

உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். பிபிசி-யால் அவரிடம் நேரில் பேச முடியவில்லை.

ஆனால் கைது செய்யப்பட்ட பிறகு, நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போது, அங்கே காத்திருந்த செய்தியாளர்களை நோக்கி “என்னை சதி செய்து இதில் சிக்க வைத்துள்ளனர்” என்று உன்னிகிருஷ்ணன் கூச்சலிட்டார்.

“உண்மை வெளிவரும். இந்தச் சதியில் என்னை சிக்க வைத்தவர்கள் சட்டத்தின் முன் நிற்க வேண்டி நேரம் வரும். எல்லாமும் வெளிச்சத்திற்கு வரும்,” என்று அப்போது அவர் கூறினார்.

கடந்த சில நாட்களில், போலீசார் கோவில் வாரியத்தின் இரண்டு அதிகாரிகளை கைது செய்துள்ளனர். தேவசம் வாரிய தலைவர் பி.எஸ். பிரசாந்த் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிபிசி அவரை தொடர்புகொள்ள முயன்றபோதும் அவர் எந்த அழைப்புகளுக்கும் அல்லது குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்கவில்லை.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போதைய வாரியத்திற்கு இந்த விவகாரத்துடன் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியிருந்தாலும், “விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்றும், “குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்” என்றும் கூறினார்.

இந்த விசாரணையை ஆறு வாரங்களில் முடிக்க எஸ்ஐடி-க்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், “இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் — அவர்கள் எந்த பதவியில், எத்தகைய செல்வாக்குடன் அல்லது சமூக அந்தஸ்துடன் இருந்தாலும் — அவர்களை அடையாளம் காண்பதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும்” நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.
சபரிமலை, இந்தியா, இந்து கோயில், தங்க திருட்டு, நீதிமன்றம், கேரளா

அரசியல் சர்ச்சைகளும் போராட்டங்களும்

இந்த வழக்கு, கேரள மாநிலத்தில் அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள், கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

“சுமார் 5 கிலோ தங்கம் திருடப்பட்டுள்ளது,” என்று கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான வி.டி. சதீசன் பிபிசியிடம் தெரிவித்தார்.

“நீதிமன்றமே அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது எனக் கூறியுள்ளது.” என்றார்.

சதீசன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள், ‘கடவுளின் பொக்கிஷங்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தவறுக்கு மாநில கோவில் விவகாரத்துறை அமைச்சர் வி.என். வசவன் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்’ எனக் கோரியுள்ளனர்.

அமைச்சர் வசவன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, எதிர்க்கட்சியின் ராஜினாமா கோரிக்கையை நிராகரித்துள்ளார். “நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணையை மேற்கொள்ளும் உயர்மட்ட போலீஸ் குழுவுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க உள்ளோம்,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

“1998 முதல் இன்றுவரை கோவிலில் நடந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் மக்கள் அறிந்து கொள்ளட்டும். எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை,” என்றும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply