கா சா மீது இரண்டு வருடங்கள் யுத்தத்தை முன்னெடுத்தும் ஹமாஸை முற்றாக அழிக்கவோ சரணடையச் செய்யவோ, மக்களை வெளியேற்றவோ இஸ்ரேலால் முடியவில்லை. வான், கடல், தரை என அனைத்து பகுதிகளும் சுற்றி வளைக்கப்பட்டு 23 இலட்சம் மக்களைக் கொண்ட 365 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான காசா மீது போரை முன்னெடுத்தும் யுத்தத்தின் ஊடாக பணயக் கைதிகளை விடுவிக்கவும் கிடைக்கவில்லை.
ஆனால் இக்கொடூர யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளும், இழப்புக்களும் முழு உலகையுமே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கின. காசாவில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 1 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளனர். காசாவையே சுடுகாடாக மாற்றியுள்ளது இப்போர்.
நிலங்கள் கைப்பற்றப்பட்டு காசாவில் ஹமாஸின் செல்வாக்கு பிரதேசங்கள் சுருங்கிய போதிலும் அவர்களது பலம் குறைந்ததாகத் தெரியவில்லை என்கின்றனர் போரியல் நிபுணர்கள். அவர்களது செல்வாக்கு நிலப்பகுதி சுருங்கச் சுருங்க மரணங்களும் காயங்களும் அதிகரிக்கலாயின.
அது உலகளாவிய எதிர்ப்பையும் கோபத்தையும் இஸ்ரேலுக்கு தேடிக் கொடுத்தது. நட்பு நாடுகளே இஸ்ரேலை எதிர்க்க ஆரம்பித்தன.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்வைத்து இஸ்ரேல் — ஹமாஸுக்கு இடையில் 2025.10.10 முதல் இரு தரப்பினரும் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கச் செய்ததோடு மறுநாள் முதல் அது நடைமுறைக்கும் வந்தது.
என்றாலும் யுத்த நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுக்கவே செய்கிறது. அதன் வெளிப்பாடாக கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் காசாவில் 241 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 609 பேர் காயமடைந்துள்ளனர் என்று மஆன் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தில், இத்திட்டம் ஏற்கப்பட்டவுடன் முழு அளவில் மனிதாபிமான உதவிகள் (தண்ணீர், மின்சாரம், மருந்துப் பொருட்கள், கட்டிட நிர்மாணப் பொருட்கள்) உடனடியாக காசாவுக்கு அனுப்பப்படும் என்றும் எகிப்து பகுதியின் ரபா கடவை திறக்கப்படும் என்றும் நாளொன்றுக்கு 600 மனிதாபிமான உதவி ட்ரக்குகள் காசாவுக்குள் அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இத்திட்டம் நடைமுறைக்கு வந்து நாளை 10 ஆம் திகதியுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இருந்தும் ரபா கடவை திறக்கப்படவுமில்லை.
தினமும் 600 மனிதாபிமான உதவி ட்ரக்குகள் காசாவுக்குள் அனுமதிக்கப்படவுமில்லை. கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,203 மனிதாபிமான உதவி ட்ரக்குகள் காசாவுக்குள் அனுப்பப்பட்டுள்ளன.
அவற்றில் மனிதாபிமான உதவிகளைக் கொண்டவை 2,564 ட்ரக்குகளாகும். அத்தோடு 639 வணிக லொறிகளும், 84 லொறிகளில் டிசலும், 31 லொறிகளில் சமையல் எரிவாயுவும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 145 ட்ரக்குகள் மாத்திரமே காசாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இது இணக்கம் காணப்பட்ட 600 ட்ரக்குகளில் 24 சதவீதம் மாத்திரமேயாகும் என்றும் காசா ஊடக அலுவலகம் குறிப்பிட்டிருக்கிறது.
இந்நிலையில் ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டத்தினது சிரேஷ்ட பேச்சாளர் அபீர் எடெஃபா, இப்போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து காசாவில் உதவி விநியோகங்கள் அதிகரித்துள்ள போதிலும், அங்கு அனுப்பப்படும் உணவு மற்றும் பிற உதவிகளின் அளவு போதுமானதாக இல்லை.
காசா மக்கள், குளிர்கால மாதங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். அதனால் காசாவுக்குள் செல்ல நாளாந்தம் அனுமதிக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். மக்கள் இன்னும் பசியால் அவதிப்படுகிறார்கள், தேவைகள் அதிகமாக உள்ளன. எங்களுக்கு முழு அணுகல் தேவை என்று கோரியுள்ளார்.
இதேவேளை காசாவுக்குள் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட தங்குமிடப் பொருட்களைக் கொண்டு வருமாறு மனிதாபிமான உதவி நிறுவனங்கள் முன்வைத்த 23 கோரிக்கைகளை இஸ்ரேலிய அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக நோர்வே அகதிகள் கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
அத்தோடு மனிதாபிமான உதவிக்குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்திய பணிப்பாளர் ஏஞ்சலிடா கரேடா, குளிர்காலமும் மழைக்காலமும் காசா மக்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
காசா மக்களை அவற்றில் இருந்து பாதுகாக்கவென எங்களிடம் மிகவும் குறைந்தளவு வசதியே தற்போதுள்ளது. அதனால் தங்குமிடப் பொருட்களை காசாவுக்குள் போதியளவில் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்பின் திட்டத்துக்கு அமைய யுத்த நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும் காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதில் நெருக்கடிகளும் தாமதங்களும் நீடிப்பது தெளிவாகிறது.
இவை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய மனிதாபிமான நெருக்கடியாகும். இருந்த போதிலும் அவற்றை விடவும் காசாவுக்குள் சர்வதேச நிலைப்படுத்தல் படை (ஐ.எஸ்.எப்.)யை அனுப்பி வைப்பதில் அமெரிக்கா குறியாக இருப்பதாகத் தெரிகிறது.
ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தின் 15ஆவது பிரிவில், ‘அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நிலைப்படுத்தல் படை பலஸ்தீன பொலிஸாரைப் பயிற்றுவித்து இஸ்ரேல் மற்றும் எகிப்து எல்லையைப் பாதுகாக்கும்’ என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் அமெரிக்கா 20 அம்ச திட்டத்தின் ஏனைய எல்லா விடயங்களையும் விட சர்வதேச நிலைப்படுத்தல் படையை அனுப்புவதற்கான முயற்சிகளுக்கே இப்போது முன்னுரிமை அளித்திருக்கின்றது.
இந்நிலையில் துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடன், காசாவுக்கு படையினரை அனுப்புவது குறித்து முடிவு செய்வதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வரையறை மற்றும் நோக்கத்தை ஏனைய கூட்டாண்மை நாடுகளும் பார்க்க விரும்புகிறது. காசாவுக்கு இத்தகைய படையை அங்கீகரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் அவசியம் என்று கூறியுள்ளார்.
இவ்வாறான சூழலில் கட்டாரில் நடைபெற்ற சமூக அபிவிருத்திக்கான உலக மாநாட்டில் பங்குபற்றிய ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசாவில் எந்தவொரு நிலைப்படுத்தும் படையையும் ஈடுபடுத்துவதற்கு அங்குள்ள பலஸ்தீனர்களைக் கையாள முழுமையான சர்வதேச சட்டபூர்வத்தன்மை அவசியம். நிலைப்படுத்தும் படைக்கான சட்டபூர்வ ஆதாரமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகாரம் உள்ளது என்றுள்ளார்.
அந்தவகையில் சர்வதேச நிலைப்படுத்தல் படையை காசாவுக்கு அனுப்புவதற்கான அங்கீகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பெற்றிடவென மூன்று பக்கங்கள் கொண்ட வரைவொன்றை தயாரித்துள்ள அமெரிக்கா, கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பு நாடுகளதும் பிரதிநிதிகளது பார்வைக்கும் அதனை வழங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வரைவின்படி, இருவருட காலத்துக்கு ஐ.நா. ஆணையின் கீழ் செயற்படும் சர்வதேச நிலைப்படுத்தல் படையை காசாவில் நிலைநிறுத்த அங்கீகாரம் பெறப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பொதுமக்களைப் பாதுகாக்கவும், மனிதாபிமான உதவிகளின் ஓட்டத்தை மேற்பார்வையிடவும், இஸ்ரேல் மற்றும் எகிப்துடனான எல்லைகளில் பாதுகாப்பு வலயங்களை அமைக்கவும், அரசு சாரா நிறுவனங்களை இராணுவமயமாக்கவும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படும் பலஸ்தீன பொலிஸாருக்கு பயிற்சி அளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் இப்படைக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
அதாவது, காசாவின் பாதுகாப்புச் சூழலை உறுதிப்படுத்தவும், பயங்கரவாதம் மற்றும் தாக்குதல் உட்கட்டமைப்பை அழிப்பதும் தடுப்பதும், அரசு சாராத ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நிரந்தரமாக நீக்குவதும் அதில் உள்ளடங்கும் என்று இவ்வரைவு குறிப்பிடுகிறது.
இது அமைதி காக்கும் படையாக அன்றி ஹமாஸின் ஆயுதங்களைக் கட்டாயப்படுத்தி களையும் படையாக இருக்கும் என்றும் ஜனவரி முதல் இப்படை காசாவில் செயற்படும் என்றும் அமெரிக்க அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா தயாரித்துள்ள வரைவுக்கு அமைய அமைக்கப்படும் காசா அமைதி சபையுடன் கலந்தாலோசித்து சர்வதேச நிலைப்படுத்த படை அமைக்கப்படும் என்றும் இச்சபைக்கு தானே தலைமை தாங்குவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் ட்ரம்ப்.
இவரது (ட்ரம்ப்) தற்போதைய நகர்வுகள் பலஸ்தீன படையினருக்கு பயிற்சி அளிக்க உருவாக்கப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் படையினரிடம் காசாவின் அனைத்து விவகாரங்களையும் கையளிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகிறதா? என்ற ஐயத்தைத் தோற்றுவித்திருக்கிறது.
அதனால் தான் ஜோர்தான் போன்ற பிராந்திய நாடுகள், ஹமாஸை வலுக்கட்டாயமாக நிராயுதபாணியாக்குவதில் நிலைப்படுத்தல் படை பங்கேற்கக்கூடாது என்றும், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டவுடன் பலஸ்தீன பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில் ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான அபூ மூஸா மர்ஸுக், காசாவுக்குள் சர்வதேச படை அனுப்பப்படும் திட்டத்தை நிராகரித்திருக்கிறார்.
தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில், காசாவின் பாதுகாப்புப் படை பலஸ்தீனர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துறையை நிர்வகிக்கும் குழுவின் தலைமை பலஸ்தீனத்திடம் இருக்க வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் உள்ளது என்று கூறியுள்ளார்.
ஆகவே ட்ரம்ப் நிர்வாகத்தின் விருப்பத்திற்கு அமைய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச அங்கீகாரத்துடன், காசாவுக்குள் சர்வதேச படை அனுப்பப்படுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

