கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் பதிவான அதி கூடிய மழைவீழ்ச்சி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் எனப் பதிவாகியுள்ளது என்று யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இந்த கன மழையின் தாக்கத்தால் 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) வரை மழை குறையும் சாத்தியம் உள்ளதாகவும், ஆனால் வரும் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு–கிழக்கு மாகாணங்களில் மீண்டும் மழை தீவிரமாகும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
கடற்தொழிலாளர்கள் தொடர்பில் சூறாவளி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், மழையுடன் இடி–மின்னல் தாக்க வாய்ப்பு அதிகமுள்ளதால் கடல் பயணங்கள் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் அதிக எச்சரிக்கை அவசியம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

