தென்னை மரத்தில்..  தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்’ என்ற பழமொழிக்கு உதாரணமாகிவிட்டது,

பீகார் சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தல் ரிசல்ட்டை வைத்து, நாடு முழுவதும் பெரும் திட்டங்களைச் செயல்படுத்த தயாரான காங்கிரஸ், தமிழகத்திலும்கூட கூட்டணி மாற்றத்துக்குத் தயாரானது.

அந்த நம்பிக்கையில்தான் கே.எஸ்.அழகிரியில் தொடங்கி ராஜேஷ்குமார் வரையில் சீனியர் கதர்கள் பலருமே, “எங்களுக்குக் கூடுதல் சீட்டுகள் வேண்டும். அதிகாரத்தில் பங்கு வேண்டும்…” என்று கோஷமிட்டனர்.

ஆனால், தேர்தல் முடிவுகள் ரிவர்ஸாகி, பீகாரில் காங்கிரஸ் தூக்கி எறியப்படவும், தமிழகத்தில் அவர்களின் கனவு கலைந்துபோயிருக்கிறது.

“என்னென்ன பேச்செல்லாம் பேசுனீங்க… இப்ப கூடுதல் சீட் கேளுங்க, பார்ப்போம்…” என்று ஹேப்பி மூடில் துள்ளிக் குதிக்கிறார்கள் தி.மு.க-வினர்!

அது ஒருபுறமிருக்க, “காங்கிரஸ் கூட்டணிக்கு வருமா, வராதா… அப்படி வந்தால், தேஜஸ்வியைக் குழப்பியதைப்போல நம்மையும் குழப்பிவிடுவார்களோ..?” என்று தனது கூட்டணி முன்னெடுப்பில் ஓரடி பின்வாங்கி, குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது த.வெ.க கூடாரம்.

இதற்கிடையே, ஃபுல் எனர்ஜியில் தி.மு.க-வைக் குறிவைக்கத் தயாராகிறது பா.ஜ.க மேலிடம். வழக்குகளைச் சந்தித்திருக்கும் அமைச்சர்களின் பட்டியலெல்லாம் எடுக்கப்படுவதோடு, பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷிடம் சில அசைன்மென்ட்டுகளும் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன.

இப்படி, பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் பலமாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், அது குறித்து விரிவாக விசாரித்தோம்..

எகிறிய எதிர்பார்ப்பு… வீழ்ந்த காங்கிரஸ்!

ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் காலம்தொட்டு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியாக உருமாறியது வரையில் கடந்த நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களாகத் தொடர்கிறது தி.மு.க – காங்கிரஸ் உறவு.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், அடுத்து வந்த 2011 தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. 2016-ல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்த சமயத்தில், 41 தொகுதிகளைக் கேட்டுப்பெற்றார். ஆனால், வெறும் எட்டுத் தொகுதிகளில்தான் காங்கிரஸால் வெற்றிபெற முடிந்தது.

அதையே காரணமாக வைத்து, அடுத்து வந்த 2021 தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை மட்டும் ஒதுக்கியது தி.மு.க. அவற்றில், 18 தொகுதிகளில் வென்றிருக்கும் காங்கிரஸ், வரும் தேர்தலில் கூடுதல் சீட்டுகளை எதிர்பார்க்கிறது. அதில்தான் பஞ்சாயத்தும் வெடித்தது

நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் சிலர், “கடந்த மார்ச் மாதம், சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்,

‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு ஏற்றவாறு நாம் சீட் பெற வேண்டும்’ என்று முழங்கினார். முன்னாள் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி, ‘சாறை அவர்கள் குடிக்கிறார்கள்… சக்கையை நாங்கள் பார்க்கிறோம்.

இந்த முறை அரசாங்கத்தில் பங்குபெற விரும்புகிறோம்’ என்று நேரடியாகவே அதிகாரத்தில் பங்கு முழக்கத்தை முன்வைத்தார்.

அதில் உற்சாகமடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தி.மு.க கூட்டணியில் கூடுதல் சீட்டுகளுக்காக கோஷங்களை எழுப்பினர்.

கரூரிலும் கன்னியாகுமரியிலும் இரு கட்சியினரிடமும் முரண்பாடு ஏற்பட்டு, மோதல்களும் வெடித்தன.

தி.மு.க – காங்கிரஸ் உறவில் விரிசல் அதிகரித்த வேளையில்தான், கரூர் துயரச் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்காக, த.வெ.க தலைவர் விஜய்க்கு போனில் ஆறுதல் சொன்னார் ராகுல் காந்தி.

அவரின் நம்பிக்கையைப் பெற்ற கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி, கே.சி.வேணுகோபால் என்று சீனியர்கள் பலரும் த.வெ.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் பேசிவந்தனர்.

அதையொட்டி, த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி அமையப்போவதாக எதிர்பார்ப்புகளும் எகிறின. ‘அந்தக் கூட்டணி அமைகிறதோ, இல்லையோ… அந்தப் பரபரப்பை வைத்தே தி.மு.க-விடமிருந்து கூடுதல் எண்ணிக்கையில் சீட்டுகளைப் பெறலாம்…’ என்று கணக்கெல்லாம் போடப்பட்டது

.ஆனால், அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் சல்லடையாக்கிவிட்டது பீகார் தேர்தல் முடிவு.

அங்கு, 61 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் ஆறு இடங்களிலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடிந்தது.

ஒவைசியின் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா போன்ற சின்னக் கட்சிகள்கூட தலா ஐந்து இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன.

பீகாரில் காங்கிரஸ் அடைந்திருக்கும் வீழ்ச்சியால், ‘புதிதாகக் களத்துக்கு வந்திருக்கும் த.வெ.க-வை நம்பி நாம் போகக்கூடாது…’ என்று தி.மு.க சார்புள்ள கதர்களெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

மறுபுறம், `நாம் வளர வேண்டுமென்றால், த.வெ.க கூட்டணிக்குச் செல்ல வேண்டும்’ என்று பாரம்பர்ய காங்கிரஸார் சொல்கிறார்கள்.

இப்படியான சூழலில், த.வெ.க-வைக் காரணம் காட்டி தி.மு.க-விடம்கூட கூடுதல் எண்ணிக்கையில் சீட்டுகள் பெற முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்றனர் பரிதவிப்புடன்.

ஹேப்பி’ தி.மு.க… கொண்டாடும் உடன்பிறப்புகள்!

காங்கிரஸ் சந்தித்திருக்கும் இந்த வீழ்ச்சியை, சமூக வலைதளங்களில் தி.மு.க-வினர் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

‘தமிழ்நாட்டுல எத்தனை சீட் கேட்ட..?’ என்று தி.மு.க கேட்பதுபோலவும், அதற்கு `117 தொகுதிகள்’ என்று காங்கிரஸ் பதிலளிப்பதுபோலவும் பதிவிட்டு, ‘பீகாரில் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறீர்கள். அதே எண்ணிக்கையில்தான் தமிழகத்திலும் சீட் ஒதுக்கப்படும்’ என்று தி.மு.க பதிலளிப்பதுபோல, கிண்டலும் கேலியுமாக சமூக வலைதளங்களில் ‘ட்ரோல்’ செய்திருந்தார்,

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மகனான சாய் லட்சுமிகாந்த். காங்கிரஸ்காரர்களின் கடும் எதிர்ப்பால், தன் பதிவை அவர் நீக்கி விட்டாலும், அவர் மனநிலையில்தான் பெரும் பாலான தி.மு.க தொண்டர்கள் இருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், “சமீபகாலமாக, காங்கிரஸ்காரர்கள் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல..

அந்தக் கட்சியின் சிறப்பு செயற்குழுவில், ‘இன்றைய சூழலில் தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறோம். நாளை என்னவாகும் என்பது தெரியாது. கட்சி மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ, அதையொட்டி நடப்போம்…’ என்று கிரிஷ் சோடங்கர் பேசியதைத் தொடர்ந்து, முதல்வரே கொஞ்சம் ஜெர்க் ஆனார்.

அதனால்தான், பெரும்பாலான காங்கிரஸாரே பங்கேற்காத விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண நிகழ்வில் முதல்வரே பங்கேற்றார்.

‘ராகுல் காந்திக்கு நான் மூத்த அண்ணன். அவர் என்மீது காட்டும் அன்புக்கு அளவில்லை…’ என்று பாசமழையைப் பொழிந்தார். ஆனாலும், கதர்கள் அடங்கவில்லை.

அநியாயத்துக்குக் கொக்கரித்தார்கள்… பீகாரில் விழுந்த அடியைத் தொடர்ந்து, இப்போது சப்த நாடியும் அடங்கிப் போயிருக்கிறார்கள்.

‘நான் ஒருபோதும் ஆட்சியில் பங்கு வேண்டும் எனச் சொல்லவில்லை. தி.மு.க கூட்டணியில் நாங்கள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். ஜனநாயகத்தின் காவலராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.

த.வெ.க-வுடன் கூட்டணி தொடர்பாக எந்த அதிகாரபூர்வச் சந்திப்பும் நடக்கவில்லை…’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தடாலடி விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறார்.

‘தி.மு.க-வுடனான கூட்டணியைப் பறிகொடுத்துவிடக் கூடாது’ என்று காங்கிரஸ் கட்சியிலுள்ள பலருமே பதறுகிறார்கள்.

 

செல்வப்பெருந்தகை-தமிழக முதல்வர் ஸ்டாலின்

பீகார் தோல்விக்குப் பிறகு, தி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லும் எண்ணம் இல்லை காங்கிரஸ் கட்சிக்கு. அதைத்தான், தன் பேட்டியில் செல்வப்பெருந்தகை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்.

சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில், ‘நீங்கள் பீகாரில் தேஜஸ்வி யாதவுடன் அனுசரித்துப்போயிருந்தால், உங்களுக்குத் தோல்வி வந்திருக்காது. நாங்கள் கொடுக்கும் எண்ணிக்கையில் போட்டியிடுங்கள்…’ என்று காங்கிரஸை அடக்கும் அளவுக்கு, தி.மு.க-வின் கையை ஓங்கச் செய்திருக்கிறது பீகார் ரிசல்ட்” என்றார்கள் குஷியாக.

குழப்பத்தில் த.வெ.க… குலைத்துப்போட்ட ரிசல்ட்

பீகார் ரிசல்ட்டின் எதிரொலியாக, த.வெ.க-வில் குழப்பங்கள் கருமேகங்களாகச் சூழ்ந்திருக்கின்றன.

‘காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று த.வெ.க கண்டிருந்த கனவு, மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியிருக்கிறது.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “தி.மு.க-வுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் த.வெ.க., ‘காங்கிரஸ் கட்சியுடன் அணி சேர்ந்தால், சிறுபான்மைச் சமூகத்தினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குகளை வளைத்துவிடலாம்’ என்று கணக்கு போட்டனர்.

அதனால்தான், அந்தக் கூட்டணியை மலைபோல விஜய் நம்பியிருந்தார். எஸ்.ஐ.ஆருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டபோது, அதற்குக் கண்டனமெல்லாம் தெரிவித்திருந்தார்.

கூட்டணிக்காக அ.தி.மு.க வலிய வந்தபோதும், அதை விஜய் ஏற்கவில்லை. காங்கிரஸ் மீதே கண்ணாக இருந்தார்.

ஆனால், கூட்டணி மலர்வதற்கான வாய்ப்புகளை பீகார் தேர்தல் முடிவுகள் குலைத்துப்போட்டுவிட்டன.

‘பீகார் படுதோல்விக்குப் பிறகு, தி.மு.க-விடமிருந்து பிரிந்து நம்முடன் காங்கிரஸ் வருமா…’ என்ற குழப்பம் த.வெ.க-வுக்கு வந்துவிட்டது.

‘வராவிட்டால் அடுத்து என்ன செய்வது… யாருடன் கூட்டணி அமைப்பது…’ என்பதையும் அவர்கள் ஆலோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதேசமயம், பீகாரில் தேஜஸ்வி யாதவை காங்கிரஸ் படுத்திய பாட்டையெல்லாம் விஜய் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

‘ஒருவேளை கூட்டணி அமைந்துவிட்டால், அதேபோல நம்மையும் உருட்டிக் கலக்கிவிடுவார்களோ…’ என்கிற குழப்பமும் த.வெ.க-வுக்கு வந்துவிட்டது…” என்றனர்.

குறிவைக்கும் பா.ஜ.க… பீகார் எதிரொலி!

த.வெ.க குழம்பி நிற்கும் நிலையில், பா.ஜ.க தெளிவாக சில ‘மூவ்’களைச் செய்யத் தொடங்கியிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை எதிர்கொண்டிருக்கும் துறைகளின் அமைச்சர்களையும், சொத்துக்குவிப்பு வழக்குகள், அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டிருக்கும் தி.மு.க-வினரையும் நெருக்குவதற்குத் தயாராகிறது டெல்லி.

<அது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மையக்குழு உறுப்பினர்கள் சிலர், “தி.மு.க-வில், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, சக்கரபாணி, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு 25 முதல் 40 தொகுதிகள் வரை பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு, முத்துசாமி, மூர்த்தி போன்றவர்களுக்கும் ‘டார்கெட்’ அளித்திருக்கிறது தி.மு.க மேலிடம்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கொங்கு மண்டலத்திலுள்ள 23 தொகுதிகள் பொறுப்பாக அளிக்கப்பட்டிருக்கின்றன.

இவர்களைத் தேர்தல் சமயத்தில் முடக்குவதுதான் டெல்லியின் டார்கெட். அந்த அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள், புகார்களெல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன. நவம்பர் கடைசி வாரத்திலிருந்தே டெல்லியின் நகர்வுகள் வேகமெடுக்க ஆரம்பித்துவிடும்.

அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் அடுத்தடுத்து பாயலாம். இதற்கிடையே, தமிழக பா.ஜ.க தலைவரான நயினார் நாகேந்திரனின் சிபாரிசில், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பொறுப்பு மாநிலத் துணைத் தலைவரான ஜெயபிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க-வின் பல்ஸ் அறிந்தவரான ஜெயபிரகாஷ், அந்தக் கட்சியிலிருக்கும் முக்கியஸ்தர்கள் பலரையும் ‘ஆஃப்’ செய்வதற்கான வேலையைக் கையில் எடுத்திருக்கிறார்.

தனக்கு அறிமுகமான சிட்டிங் அமைச்சர்களிடம், ‘ஏன்ணே டெல்லியைப் பகைச்சுக்கறீங்க… தி.மு.க ஆட்சி அமைச்சாலும், அடுத்த மூணு வருஷமும் பா.ஜ.க-தான் மத்தியில இருக்கப்போகுது. உங்களுக்குக் குடைச்சல் குடுக்கணும்னு அவங்க முடிவு பண்ணிட்டா, நிச்சயம் நெருக்கடிதான்.

பேசாம உங்க தொகுதியை மட்டும் பாருங்க…’ என்று பேசிவருகிறார். தி.மு.க-விலிருக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க-வுக்குள் இழுக்கும் வேலைக்காக, நூறு ஸ்வீட் பாக்ஸுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அந்தப் பொறுப்பும் ஜெயபிரகாஷிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பா.ஜ.க தலைவரான நயினார் நாகேந்திரன்

அதற்கிடையே, `வெற்றிபெறுவதற்கு அ.தி.மு.க-வுடனான கூட்டணி மட்டும் போதாது. த.வெ.க-வின் துணையும் அவசியம்’ என்று ஆலோசித்திருக்கும் டெல்லி, த.வெ.க-வுக்கும் தூது விட்டிருக்கிறது.

அடுத்த மாதத்திலிருந்து பல ட்விஸ்ட்டுகள், அதிரடிகளை எதிர்பார்க்கலாம்” என்றனர்.

பீகார் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் அரசியல் தட்பவெப்பத்தையே மொத்தமாக மாற்றியமைத்திருக்கிறது.

பல கட்சிகளின் எதிர்பார்ப்புகளும் கனவுகளும் கலைந்துபோயிருக்கின்றன. ‘காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடருமா… அல்லது புது முயற்சியாக த.வெ.க-வுடன் கூட்டணி அமையுமா..?’ என்ற கேள்விகள், ஏற்கெனவே இருந்த குழப்பங்களை மேலும் அதிகரித்திருக்கின்றன.

இதற்கிடையே, தி.மு.க-வின் வியூகங்களை உடைப்பதற்கு உண்டான வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறது பா.ஜ.க.

அந்த வகையில், அறிவாலயத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கெல்லாம் குறிவைத்திருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு சுமார் 90 நாள்களே எஞ்சியிருக்கும் நிலையில், இனி பல அதிரடிக் காட்சிகளைத் தமிழகம் காணலாம்!.

-ஆனந்த விகடன்-

Share.
Leave A Reply