இயற்கையின் விந்தைகளில் ஒன்றாகக் கருதப்படும் அமூர் வல்லூறு ஒன்று, எவ்வித ஓய்வுமின்றி தொடர்ச்சியாகப் பறந்து, 6 நாட்களில் 6,100 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து கென்யாவைச் சென்றடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் பறவையியலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் (குறிப்பாக மணிப்பூர் அல்லது நாகாலாந்து) இருந்து தனது பயணத்தைத் தொடங்கியதாகக் கருதப்படும் இந்த வல்லூறு, அரபிக்கடலைக் கடந்து ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள கென்யாவை அடைந்துள்ளது.

இந்த நீண்ட பயணத்தின் போது இப்பறவை எங்கும் தரை இறங்கவோ, ஓய்வெடுக்கவோ இல்லை என்பது விசேடம்சமாகும்.

இந்த அரிய வகை வல்லூறுகளின் இடப்பெயர்வு முறைகளை ஆராய்வதற்காக, ஆராய்ச்சியாளர்களால் அதன் உடலில் பொருத்தப்பட்டிருந்த செய்மதி கருவி மூலமே இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் தரவுகள் மூலம், அது பயணித்த வேகம் மற்றும் வழித்தடம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இப்பயணத்தின் மிகக் கடினமான பகுதி அரபிக்கடலைக் கடப்பதாகும். எவ்விதத் தரைத் தொடர்பும் இல்லாமல், காற்று மற்றும் வானிலை மாற்றங்களை எதிர்த்து, ஒரு சிறிய பறவை இவ்வளவு பெரிய தூரத்தை இடைவிடாமல் கடப்பது இனத்தின் வலிமையை எடுத்துக் காட்டுகிறது.

இவை தென்கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு சீனாவில் இனப்பெருக்கம் செய்கின்றன.

குளிர் காலத்தில் இவை ஆப்பிரிக்கா நோக்கிப் பயணிக்கின்றன. வழியில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சிறிது காலம் தங்கி, தங்கள் பயணத்திற்குத் தேவையான ஆற்றலை உணவின் மூலம் சேகரித்துக் கொள்கின்றன.

இவை கென்யாவைக் கடந்து இவை தென்னாப்பிரிக்காவைச் சென்றடையும்.

புறாவை விடச் சற்று சிறியதாக இருந்தாலும், இவை உலகின் நீண்ட தூரம் பயணம் செய்யும் வலசைப் பறவைகளில் ஒன்றாகும்.

 

Share.
Leave A Reply