கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள தங்களது மறைந்த தாயின் பரணில் சுத்தம் செய்துகொண்டிருந்த அந்த மூன்று சகோதரர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

பழைய செய்தித்தாள்களின் குவியலுக்கு அடியில், அவர்களது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்தனர். முதன்முதலில் வெளியான சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகங்களில் அதுவும் ஒன்று.

சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் (Man of Steel) சாகசங்கள் குறித்த ஜூன் 1939-இல் வெளியான முதல் பதிப்பின் அசல் புத்தகம் அது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அது மிகவும் சிறப்பாக எந்த சேதமும் இல்லாமல் இருந்தது.

தற்போது இதுவே உலகின் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகமாகச் சாதனை படைத்துள்ளது. ஏலத்தில் இது 9.12 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் 82 கோடி ரூபாய்) விற்பனையாகியுள்ளது.

வியாழக்கிழமை இவ்விற்பனையை நடத்திய டெக்சாஸைச் சேர்ந்த ‘ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ்’ நிறுவனம், இதனை ‘காமிக்ஸ் சேகரிப்பின் உச்சம்’ என்று வர்ணித்துள்ளது.

அந்த மூன்று சகோதரர்களும், 2024ஆம் ஆண்டில், வீட்டின் பரணில், சிலந்தி வலைகள் சூழ்ந்திருந்த ஓர் அட்டைப் பெட்டிக்குள், பழைய செய்தித்தாள்களுக்கு அடியில் ‘சூப்பர்மேன் #1’ உள்ளிட்ட ஆறு காமிக்ஸ் புத்தகங்களைக் கண்டெடுத்ததாக ஹெரிடேஜ் நிறுவனம் கூறியுள்ளது.

ஏல நிறுவனத்தைத் தொடர்புகொள்வதற்கு முன் அவர்கள் சில மாதங்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் தொடர்புகொண்ட சில நாட்களிலேயே, ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லான் ஆலன் அவர்களைச் சந்தித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாத அந்தச் சகோதரர்கள், 50 மற்றும் 60 வயதுகளில் உள்ளவர்கள். “அதிக மதிப்புள்ள காமிக்ஸ் புத்தகங்களைத் தான் சேகரித்து வைத்திருப்பதாக அவர்களின் தாயார் பலமுறை கூறியுள்ளார், ஆனால் அவற்றை அவர்களுக்குக் காட்டியதே இல்லை,” என்று ஆலன் தெரிவித்தார்.

“பொதுவாக, ‘எனது காமிக்ஸ் புத்தகங்களை அம்மா தூக்கி எறிந்துவிட்டார்’ எனப் பிள்ளைகள் புகார் சொல்வார்கள். அந்தக் கதைகளுக்கு நேர்மாறான ஒரு சுவாரஸ்யமான கதை இது,” என்கிறார் அவர்.

“பெரும் பொருளாதார மந்தநிலைக்கும் இரண்டாம் உலகப் போரின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், தானும் தனது சகோதரனும் வாங்கிய காமிக்ஸ் புத்தகங்களை, அந்தத் தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்,” என்று ஹெரிடேஜ் நிறுவனம் கூறியது.

வடக்கு கலிஃபோர்னியாவின் குளிர்ந்த காலநிலை, அந்தக் காமிக்ஸ் புத்தகத்தின் பழைய காகிதங்களைப் பாதுகாப்பதற்கு மிகவும் ஏதுவாக இருந்துள்ளது என ஆலன் குறிப்பிட்டார்.

“ஒருவேளை இந்த காமிக்ஸ் புத்தகங்கள் டெக்சாஸில் உள்ள ஒரு வீட்டின் பரணில் இருந்திருந்தால், அவை பாழாகியிருக்கும்,” என்றும் அவர் கூறினார்.

காமிக்ஸ் புத்தக ஏலத்தில் புதிய சாதனை

புத்தகத்தின் இந்தச் சிறப்பான நிலை காரணமாக, காமிக்ஸ் புத்தகங்களை மதிப்பீடு செய்யும் நிறுவனமான சிஜிசி (CGC), இந்த ‘சூப்பர்மேன் #1’ புத்தகத்திற்கு 10-க்கு 9.0 என்ற மதிப்பீட்டை வழங்கியது. இது ‘8.5’ என்ற வேறொரு புத்தகத்திற்கு வழங்கப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

சூப்பர்மேன் #1 புத்தகம், வாங்குபவருக்கான கட்டணம் உட்பட 9 மில்லியன் டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனையானது. இதன் மூலம், இதற்கு முன் அதிக விலைக்கு விற்கப்பட்ட காமிக்ஸ் புத்தகத்தின் சாதனையை விட 3 மில்லியன் டாலர் அதிக விலைக்கு விற்றுப் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.

சூப்பர்மேனை முதன்முதலில் அறிமுகப்படுத்திய 1938ஆம் ஆண்டு படைப்பான ‘ஆக்ஷன் காமிக்ஸ் எண் 1’ (Action Comics No. 1), கடந்த ஆண்டு 6 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

பரணின் பின்பகுதியில் காமிக்ஸ் புத்தகங்கள் கொண்ட அந்தப் பெட்டி பல ஆண்டுகளாக யாருடைய கவனத்திற்கும் வராமல் இருந்தது என, அந்த மூன்று சகோதரர்களில் இளையவர் கூறியதாக ஏல நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பல ஆண்டுகள் கடந்த நிலையில், வாழ்க்கையில் தொடர்ச்சியான இழப்புகளையும் மாற்றங்களையும் குடும்பம் சந்தித்து வந்தது. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளே முக்கியமானதாக மாறியதால், ஒரு காலத்தில் அக்கறையுடன் எடுத்து வைக்கப்பட்ட காமிக்ஸ் பெட்டி நினைவில் இருந்து மறைந்தது. கடந்த கிறிஸ்துமஸ் வரை அது அப்படியே இருந்தது,” என அந்தச் சகோதரர்களில் இளையவர் கூறியுள்ளார்.

“இது காமிக்ஸ் புத்தகங்கள், அதன் பழைய காகிதங்கள் பற்றிய கதை மட்டுமல்ல. கடந்த கால வாழ்வின் மற்றும் குடும்பத்தின் நினைவுகள், எதிர்பாராத வழிகளில் மீண்டும் நம்மை வந்தடையும் என்பதற்கான ஒரு சான்று இது.”

Share.
Leave A Reply