இலங்கையில் உருவாகி வரும் கடும் கடன் நெருக்கடியின் சுமை நேரடியாக சாதாரண மக்கள்மீதே திணிக்கப்படவுள்ளதாக வேன்கார்ட் சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட எச்சரித்துள்ளார். மொத்த அரசு செலவினமான 8,980 பில்லியன் ரூபாவில், 4,495 பில்லியன் ரூபா கடன் வட்டி செலுத்துதலுக்கே பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
அந்நியச் செலாவணி கையிருப்பும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு 6,091 மில்லியன் டொலர் இருந்த கையிருப்பு, இந்த ஆண்டு செப்டம்பரில் 6,243 மில்லியனாக உயர்ந்தாலும், ஆண்டு முடிவுக்கு முன் இலக்காக வைக்கப்பட்டுள்ள 7,174 மில்லியனை அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
செல்ல வேண்டிய சீனா, இந்தியா, IMF மற்றும் உள்நாட்டு வங்கிக் கடன்களை கழித்தபின் பயன்படுத்தக்கூடிய கையிருப்பு வெறும் 1,014 மில்லியன் டொலர்களாக மட்டுமே உள்ளதாகவும், இறுதியில் இந்த முழுச் சுமையும் மக்கள்மீதே விழும் எனவும் அவர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு இல்லையென கூறிய அவர், அந்த எதிர்ப்பை மக்களிடையே உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

