”பெரிய சத்தமொன்று வந்தது. நான் கதவை திறந்தேன். கதவை திறந்தவுடன் பூகம்பம் போல தோன்றியது. ஒரு வீடு அப்படியே உள்ளே புதையுண்டது. அந்த வீடு உள்ள போனதை நான் கண்ணால கண்டேன்” என இலங்கை கண்டியில் நிகழ்ந்த மண்சரிவிலிருந்து இறுதி நொடியில் உயிர் தப்பிய ரஷிம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அலவத்துகொடை – ரம்புக்கேஹெல்ல பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாரியதொரு மண்சரிவு சம்பவம் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிபிசி தமிழ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றது.
ரஷிம்
“நாங்கள் உடனே வெளியில் வந்தோம். நாங்கள் பள்ளிக்கு அருகில் வந்தவுடன்தான் ஆகப் பெரிய மண்சரிவொன்று வந்தது. பெரியதொரு மண்சரிவு அது. பெரியதொரு சத்தம் கேட்டது. என்னுடைய வீட்டை கட்டி நான்கு மாதம்தான் ஆனது. என்னுடைய லாரி வாகனம் எல்லாம் போய்ட்டது.” என்று ரஷிம் கூறினார்.
ரம்புக்கேஹெல்ல கிராமமானது, முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு மலைப் பகுதியாகும். கண்டி – மாத்தளை பிரதான வீதியின் அலவத்துகொடை நகர் பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது.
நடந்தது என்ன?
நேற்று முன்தினம் நள்ளிரவு கடும் மழை பெய்துள்ளது. அப்போது திடீரென பாரிய சத்தமொன்று கேட்டுள்ளதுடன், ஒரு சில நொடிகளில் வீடொன்று மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.
இந்த வீடு மண்ணுக்குள் புதையுண்டு ஒரு சில நிமிடங்களில் மற்றுமொரு பாரிய சத்தம் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்தே, மலைப் பகுதியில் பாரியதொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 40 பேர் வரை அந்த வீடுகளில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
எனினும், போலீஸார் மற்றும் கிராம சேவகரின் மதிப்பீட்டில் அந்த விடயம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வீடுகள் மாத்திரமன்றி, வீடுகளிலிருந்து வாகனங்கள் கூட மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.
ரம்புக்கேஹெல்ல பிரதேசத்தின் பாதி பகுதியே மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.
தமது சொந்தங்களை தேடும் நோக்கில் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் மண்ணை அங்காங்கே தோண்டி தோண்டி தேடுகின்றனர்.
நேற்று அதிகாலை முதல் தேடுதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 9 பேரின் உடல்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாவது தமது உறவுகளை தாம் கண்டுபிடிப்போம் என்ற எதிர்பார்ப்புடன் இளைஞர்கள் தேடி வருகின்றனர்.
மண்ணில் புதையுண்ட வீடொன்றில் வேலை செய்த லெட்சுமி
மக்கள் கூறுவது என்ன?
கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பௌத்த விகாரைகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அவதானிக்க முடிந்தது.
ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளுக்கு உதவிகளை வழங்கிய போதிலும், தமக்கு பூரண ஒத்துழைப்பு இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் அந்த பிரதேச மக்கள்.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பாரியளவில் நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நீர் ஊடறுத்து செல்லும் இடங்களில் மண் சிறிது சிறிதாக சரிந்து வருவதை அவதானிக்க முடிந்தது.
மண்ணில் புதையுண்ட வீடொன்றில் வேலை செய்த லெட்சுமி என்பவர் கண்ணீர் மல்க, காணாமல் போனோர் தொடர்பில் பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
”அவர்கள் எல்லாருமே நல்ல மனிதர்கள். வசதிமிக்கவர்கள். பெரிய பெரிய வீடுகள் இருந்தன. நல்ல குடும்பங்கள். ஒரு வீட்டில 5 பேர் முதல் 8 பேர் வரை இருந்தார்கள். வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்து வீடுகளைக் கட்டினார்கள். அந்த இடத்தில் இருந்தவர்கள் எல்லாம் சொந்தக்காரர்கள். எல்லாரும் இறந்து விட்டார்கள்,” என்றார் லெட்சுமி.
தாஷிப்
உடல்களை எடுக்க முயற்சிக்கின்ற போதிலும், எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேசத்தைச் சேர்ந்த தாஷிப் தெரிவிக்கின்றார்.
”இரவு 12 மணிக்கு தான் மண்சரிவு நடந்தது. எல்லாம் பெரிய பெரிய வீடுகள். எல்லாம் போய்விட்டது” என தாஷிப் தெரிவிக்கின்றார்.
மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இன்றைய தினம் வானிலை சாதகமான நிலையில் காணப்பட்ட போதிலும், மீட்பு பணிகளை உரிய வகையில் முன்னெடுக்க முடியாத நிலைமையை பிரதேச மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.


ரஷிம்
இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாஷிப்