நுவரெலியா – இராகலை பிரதான வீதியில் கந்தப்பளை, எஸ்கடேல் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
மண்ணில் புதையுண்டவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இந்த பகுதியில் பெய்து வந்த கடும் மழை காரணமாக மீட்பு பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலையிலேயே இன்றைய தினம் வானிலை வழமைக்கு திரும்பி மழை இல்லாத காரணத்தால் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதுவரையில் மண்ணில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்தும் மீட்பு பணிகளை பொலிஸாரும் பொது மக்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியை, தரம் 9 தரம் 6 கல்விபயிலும் இரண்டு மகன்கள் மற்றும் வயோதிப பெண் ஒருவர் என நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

