இதோ இன்னும் ஆறே மாதங்களில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. கொள்கை முரண்கள், மொழிப் பிரச்னை, மாநில நலன்கள் எனப் பல்வேறு பின்னணியில்… பல கட்சிகள், பலவிதமான சூழல்களில், தேர்தல் களங்களில் மோதியிருக்கின்றன.

கூட்டணி வியூகங்கள், புதுமையான வாக்குறுதிகள், எதிர்பாராத திருப்புமுனைகள், புதிய கட்சிகளின் வருகை என… இதுவரை தமிழகம் சந்தித்த எல்லாத் தேர்தல்களுமே தனித்துவம் வாய்ந்தவைதான்.

2026-ல் இன்னும் புதுவிதமான தேர்தல் களத்தை தமிழ்நாடு காணவிருக்கிறது.

இதுவரையில், இருமுனைத் தேர்தல்களையும், மும்முனைத் தேர்தல்களையும் கண்ட தமிழ்நாடு தேர்தல் களம், இந்த முறை நான்குமுனைத் தேர்தலைச் சந்திக்கப்போகிறது!

இதுவரை 15 சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்த தி.மு.க-வின் தலைமையில் ஓர் அணி.

இதுவரை 11 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்ட அ.தி.மு.க-வின் தலைமையில் ஓர் அணி. வழக்கம்போல, பெரும் பலத்துடன் இவ்விரு கட்சிகளும் களத்தில் நேரடியாக மோதும் சூழலில், ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வந்திருக்கிறோம்’ என்று களமாடிவரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி,

மூன்றாவது முறையாகச் சட்டமன்றத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ளவிருக்கிறது. `ஜென் Z’ என்ற புதிய தலைமுறை இளைஞர்களின் ஆதரவுடன், முதன்முறையாகத் தேர்தல் களத்துக்கு வருகிறது நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்.’

இன்றைய தமிழக அரசியல் சூழலைப் பொறுத்தவரை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது.

அதை அப்படியே தக்கவைத்து, 2021போலவே 2026-லும் வெற்றிபெற்று ஆட்சியைத் தொடர வேண்டுமென்று தி.மு.க விரும்புகிறது.

இன்னொரு புறம், தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்று துடிக்கும் பா.ஜ.க-வுடன், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் கைகோத்து வெற்றிபெற நினைக்கிறது.

பலம் வாய்ந்த இந்த இரு அணிகளை எதிர்த்து, நா.த.க-வும், த.வெ.க-வும் தனித்தனியாகக் களத்தில் இறங்கப்போகின்றன. இன்னும் நான்கைந்து மாதங்களில், இந்த ‘கூட்டணி’, ‘தனித்து’ என்கிற முடிவுகள் மாறி, காட்சிகள் முற்றிலும் மாறலாம். களத்தின் தன்மையும் மாறலாம்.

இந்த நிலையில், எந்தக் கட்சியை ஆதரிப்பது, யாருக்கு வாக்களிப்பது என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு வாக்காளருக்கும் அவசியம்.

அதற்கு, நிகழ்கால அரசியல் மட்டுமன்றி, கடந்தகால அரசியல் வரலாற்றையும் அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் நிலவிய அரசியல் சூழல், முதல் நாடாளுமன்ற, மாகாண சட்டமன்றத் தேர்தல்கள், அதற்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள்,

-அவற்றில் பங்கேற்ற கட்சிகள், அந்தக் கட்சிகளுக்குத் தலைமை தாங்கிய தலைவர்கள், அந்தத் தேர்தல்களில் எழுந்த முக்கியப் பிரச்னைகள் என அனைத்தையும் ஒன்று திரட்டித் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அதற்காகத்தான், இந்த தேர்தல் ரீவைண்ட் தொடர்!

காங்கிரஸ் Vs கம்யூனிஸ்ட்!

சுதந்திர இந்தியாவுக்கு இப்போது 78 வயது. 1947-க்குப் பிறகு சுதந்திர நாடாக இந்தியா மாறியிருந்த காலகட்டத்தில், மத்தியிலும், மாகாண சட்டமன்றங்களிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றது.

பிரதமராக ஜவஹர்லால் நேருவும், கவர்னர் ஜெனரலாக மூதறிஞர் ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியாரும் இருந்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஷ்யாம் பிரசாத் முகர்ஜி தலைமையிலான ஜன சங்கம் (இன்றைய பா.ஜ.க), டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான அகில இந்தியப் பட்டியல் சமூகக் கூட்டமைப்பு,

ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை களத்தில் இருந்தன.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரு கட்சிகளுமே சுதந்திரத்துக்காகப் போராடி, உயிர்த் தியாகங்களைச் செய்தவை.

ஆனால், ‘சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி’ என்ற இமேஜ் காங்கிரஸுக்கே இருந்தது.

அதனால், காங்கிரஸ் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரது வெற்றி உறுதி என்ற அளவுக்கு காங்கிரஸுக்குச் செல்வாக்கு இருந்தது.

அன்றைய சென்னை மாகாணம்!

சென்னை மாகாணம், இன்றைய தமிழ்நாடு, கர்நாடகாவின் பெல்லாரி, தெற்கு கன்னடம், உடுப்பி, ஆந்திராவின் கடற்கரை, ராயலசீமா, கேரளாவின் மலபார் ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வருவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, 1947, மார்ச் 23-ம் தேதி, சென்னை மாகாண முதல்வராகப் பதவியேற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்,

சுதந்திரத்துக்குப் பிறகும் 1949, ஏப்ரல் 6-ம் தேதி வரை முதல்வராக இருந்தார்.

அவருக்குப் பிறகு, பி.எஸ்.குமாரசாமி ராஜா முதல்வராக வந்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று பல்வேறு சிறைக் கொடுமைகளுக்கு ஆளான கம்யூனிஸ்ட்டுகள், சுதந்திரத்துக்குப் பிறகும் வேட்டையாடப்பட்டார்கள்.

காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தியதாலும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாலும் கம்யூனிஸ்ட்டுகளை காங்கிரஸ் அரசு ஒடுக்கியது.

குறிப்பாக, 1948-ம் ஆண்டு கொல்கத்தாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2-வது அகில இந்திய மாநாடு முடிந்த பிறகு, கம்யூனிஸ்ட்டுகள் மீது காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கடும் அடக்குமுறைகளை ஏவினர்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாகாணங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தேடித் தேடி கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சேலத்தில் ஒரு ஜாலியன்வாலா பாக்!

சிறைகளில் அடைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளை, போலீஸார் குண்டாந்தடிகளால் தாக்கி எலும்புகளை உடைத்தனர்.

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். 1949-ம் ஆண்டு, கடலூர் சிறையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.கே.கோபாலன், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரைக் குறிவைத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதில், நான்கு பேர் உயிரிழந்ததுடன், 190 பேர் காயமடைந்தனர். 1950-ம் ஆண்டு, பிப்ரவரி 11-ம் தேதி சேலம் சிறையில் பெரும் கொடூரம் நிகழ்ந்தது.

சிறைவாசிகளாக இருந்த 22 கம்யூனிஸ்ட்டுகளைக் காவல்துறையினர் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றனர்.

அதை ஜாலியன்வாலா பாக் சம்பவத்துடன் ஒப்பிட்டு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சி 1946 தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு காற்றில் பறக்கவிட்டதால், மக்கள் மத்தியில் ஆட்சிமீது அதிருப்தி உருவாகியிருந்தது.

சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய அரிசிப் பஞ்சம், காங்கிரஸ் ஆட்சிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதைச் சமாளிக்க முடியாமல் திணறிய பி.எஸ்.குமாரசாமி ராஜா அரசு, ‘ஒரு குடும்பத்துக்கு ஆறு அவுன்ஸ் அரிசி மட்டுமே அனுமதி’ என்று அறிவித்தது.

இதனால், காங்கிரஸுக்கு எதிராக மக்களிடம் பெரிய அளவில் கோப அலை வீசியது.

தி.மு.க என்ற புதிய வரவு!

அத்தகைய அரசியல் சூழல் நிலவிய நேரத்தில், பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய அண்ணா, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருந்தார்.

கம்யூனிஸ்ட்டுகளைப் போலவே, காங்கிரஸ் ஆட்சியை தி.மு.க-வும் கடுமையாக விமர்சித்தது.

1951-ம் ஆண்டு டிசம்பரில், தி.மு.க-வின் முதல் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, காங்கிரஸ் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார் அண்ணா.

‘நான்காண்டுக் காலத்தில் காங்கிரஸ் சாதித்தது என்ன… அரிசி இருந்த பாண்டத்தில் சோளம், சோளம் இருந்த பாண்டத்திலே புளியங்கொட்டை, புளியங்கொட்டை இருந்த பாண்டத்திலே பருத்திக்கொட்டை, பருத்திக்கொட்டையும் போய், காலிப் பாண்டங்கள், இடிந்த கூரை, செத்து விழும் மக்கள், பசி, பட்டினி இவற்றைத்தானே காட்டிட முடியும்..

மக்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் நேரு சர்க்காரை, நான் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறேன்’ என்று அனல் கக்கினார் அண்ணா.

அந்த நேரத்தில்தான், முதல் தேர்தலுக்கு சுதந்திர இந்தியா தயாராக ஆரம்பித்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் சிறையில் இருந்தனர்.

கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கொள்கை இருந்ததே தவிர, அவர்களிடம் பண பலம் இல்லை. அப்போது, கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் பெரியார்.

`காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதே என் வேலை. அதற்கு, எனக்கு இருக்கும் ஒரே ஆயுதம் கம்யூனிஸ்ட் கட்சிதான்’ என்றார்

.புலி வேட்டையும், நரி வேட்டையும்!

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட எல்லாக் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமானபோது, ‘தேர்தலில் தி.மு.க போட்டியிடாது’ என்று அதிரடியாக அறிவித்தார் அண்ணா.

‘காங்கிரஸ் கட்சியாரின் எதேச்சதிகார முறைப்படி தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் என்பது, திராவிடர்களின் கருத்தை அறிந்திருக்கவில்லை;

திராவிடரின் ஜீவாதார உரிமைக்கும் ஊறு விளைவிக்கிறது. இப்படியான அரசியல் சட்டத்தின்படி நடைபெறவிருக்கும் முதல் பொதுத்தேர்தலைக் கண்டிக்கும்விதமாகவே, தி.மு.க தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

‘நரி வேட்டையில் ஈடுபட்டு, புலி வேட்டையை மறந்துவிடலாகாது.

புலி வேட்டைக்குப் போகும் வழியில் தட்டுப்படும் நரியை விரட்டுவோம்.

ஆனால், நரியையே புலியென்று எண்ணிக்கொண்டு, வேட்டை முடிந்தது என்று நம்பிவிடலாகாது’ என்று ‘திராவிட நாடு’ ஏட்டில் (25.11.1951) அண்ணா எழுதினார்.

அது என்ன ‘புலி வேட்டை… நரி வேட்டை?’ அண்ணா சொன்ன அந்த இரு வேட்டைகளையும் அடுத்த பகுதியில் பார்ப்போமா?

(இன்னும் அறிவோம்…)

ஆ.பழனியப்பன்-விகடன்

 

Share.
Leave A Reply