1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரும், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் குழுவைச் சேர்ந்த வீரருமான டி.எஸ். டி சில்வா, தமது 83வது வயதில் காலமானார்.
அவர் லண்டனில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள டி.எஸ். டி சில்வா, இலங்கையின் ஆரம்பகால டெஸ்ட் அணியின் உறுப்பினராக விளங்கியதுடன், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார். அவரது நிர்வாக காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் துறையில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி, நிர்வாகியாகவும் இலங்கை கிரிக்கெட்டுக்கு நீண்ட கால சேவை செய்த டி.எஸ். டி சில்வாவின் மறைவு, இலங்கை விளையாட்டு உலகுக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
அவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

