போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, லத்தீன் அமெரிக்காவில் தரைப்படை தாக்குதல்களை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக நிலம் வழியான கடத்தலை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறினார்.

“நிலம் வழியாகச் செல்வது எளிது”

இதுகுறித்து மேலும் விளக்கமளித்த ட்ரம்ப்,

“நீர் வழியாக வரும் போதைப்பொருட்களில் 96 சதவீதத்தை நாங்கள் முறியடித்துள்ளோம். இப்போது நிலம் வழியாக நடைபெறும் கடத்தல்களை கட்டுப்படுத்த தரைப்படை நடவடிக்கைகளை தொடங்க உள்ளோம்.
நிலம் வழியாகச் செல்வது மிகவும் எளிதானது. அது நடக்கப்போகிறது. எங்கள் நாட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டு வருபவர்கள் நேரடியாக இலக்குவைக்கப்படுவார்கள்
என்று தெரிவித்துள்ளார்.

பென்டகன் தாக்குதல்கள் தொடர்கின்றன

தென் அமெரிக்காவின் கடற்கரை பகுதிகளுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பரப்புகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் படகுகள் மீது பென்டகன் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போதைய கடல் நடவடிக்கைகளைத் தாண்டி, நிலம் வழியான போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்த அமெரிக்க ஜனாதிபதி கடந்த சில நாட்களாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிவிப்பு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply