அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி யூத மதப் பண்டிகையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகினர், 42 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவத்தின்போது, தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரிகளில் ஒருவரை அஹ்மத் அல் அஹ்மத் (43) என்பவர் தனது உயிரைப் பணயம் வைத்துத் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தார். இதனால், மற்றொரு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அஹ்மத்.
இந்நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் ஆகியோர் வைத்தியசாலைக்கு நேரில் சென்று, அஹ்மதைச் சந்தித்துப் பாராட்டினர். “நீங்கள் ஒரு அவுஸ்திரேலிய வீரர். மற்றவர்களைக் காப்பாற்ற உங்கள் உயிரை ஆபத்தில் இட்டீர்கள். மிக மோசமான தருணங்களில்தான் அவுஸ்திரேலியர்களின் சிறந்த பண்புகள் வெளிப்படும்” என்று பிரதமர் அல்பானீஸ் பாராட்டியுள்ளார். அஹ்மத் பல உயிர்களைக் காப்பாற்றினார் என்பதில் சந்தேகமில்லை என்றும் முதல்வர் கிறிஸ் மின்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

