அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள் அழிந்து போயுள்ளதாக பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜல்தீபன் தெரிவித்தார்.

பேரிடரை எதிர்கொண்ட சுமார் 2.2 மில்லியன் மக்களில் குறைந்தது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாமல் போயுள்ளதாக திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.

நடமாடும் சேவை
பேரிடர் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு நாள் துரித சேவையின் கீழ் இந்த பதிவு சான்றிதழ்களை இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட இறப்பு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மூலம் சில மாவட்டங்களில் இந்த நடமாடும் சேவை செயல்படுத்தப்படும் என்று பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

பிறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள் வழங்கும் ஏற்பாடுகள்
பிறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை வழங்க தேவையான ஏற்பாடுகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகத்தால் வழங்கப்படுகின்றன.

தற்போது, முல்லைத்தீவு மற்றும் கண்டி மாவட்டங்களில் இந்த நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் பிறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள் இல்லாத நபர்களின் தரவு மற்றும் தகவல்களை சேகரிக்கும் பணிகள் மாவட்ட துணைப் பதிவாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்த ஜனவரி மாத இறுதிக்குள் பிறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

Share.
Leave A Reply