1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், நாடு முழுக்க ஒரே பரபரப்பு.
பிரதமர் நேரு, தனது தேர்தல் பிரசாரத்தை லூதியானாவில் தொடங்கினார். அவரது பேச்சு, மதவெறி அரசியலுக்கு எதிரான போர்ப் பிரகடனமாக இருந்தது!
‘இந்தியாவில் அழிவையும் மரணத்தையும் உண்டாக்கக்கூடிய வகுப்புவாதச் சக்திகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் நேரு.
இந்துத்துவா கொள்கைகளைக் கொண்ட இந்து மகாசபாவும், பாரதிய ஜனசங்கமும் தேர்தலில் போட்டியிடுவதை மனதில்கொண்டே நேரு அவ்வாறு பேசினார்.
சென்னை மாகாணத்தில் 1952 ஜனவரி 2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25 ஆகிய ஒன்பது நாள்கள் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தங்குதூரி பிரகாசம் தலைமையிலான கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி, மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி, ராமசாமி படையாச்சியின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி,
அம்பேத்கர் தலைமையிலான அகில இந்திய பட்டியல் சமூகக் கூட்டமைப்பு, முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலான ஃபார்வர்டு பிளாக், சென்னை மாநில முஸ்லிம் லீக், நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் களமிறங்கின.
இரட்டை உறுப்பினர்கள்!
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 375. அந்த 375 உறுப்பினர்களும், 309 தொகுதிகளிலிருந்து தேர்வுசெய்யப்பட வேண்டும்.
அன்று, இரட்டை உறுப்பினர் முறை இருந்தது. அதன்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கும் தொகுதிகளிலிருந்து (66 தொகுதிகள்) இரண்டு உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.
பட்டியல் சமூகத்தினருக்கு 62 தொகுதிகள், பழங்குடியினருக்கு 4 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்த 66 தொகுதிகளில், இரண்டு வேட்பாளர்கள்கொண்ட பட்டியல் இருக்கும்.
ஒன்று, பொதுப்பட்டியல். இன்னொன்று தனிப்பட்டியல். இரண்டிலும் வாக்காளர்கள் தனித்தனியாக வாக்களிக்க வேண்டும். இப்படியாக, ‘தனி உறுப்பினர்கள்’ (எஸ்.சி., எஸ்.டி), ‘பொது உறுப்பினர்கள்’ தேர்வு செய்யப்படுவர்.
(1952, 1957 தேர்தல்களில் இரட்டை உறுப்பினர்கள் தேர்வு முறை இருந்தது. சில பிரச்னைகள் காரணமாக, 1961-ம் ஆண்டு இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு, தனித்தொகுதி முறை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)
காங்கிரஸில் உற்சாகமில்லை!
சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 360 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 131 இடங்களிலும், சோஷலிஸ்ட் கட்சி 163 இடங்களிலும், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 148 இடங்களிலும், கிரிஷிகார் லோக் கட்சி 63 இடங்களிலும், அகில இந்திய பட்டியல் சமூகக் கூட்டமைப்பு 37 இடங்களிலும் போட்டியிட்டன.
தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தலைமை தயாராகிவிட்டது. ஆனால், பல கோஷ்டிகளாகக் கட்சியினர் பிரிந்து கிடந்ததால், தொண்டர்களிடம் உற்சாகம் இல்லை.
காங்கிரஸுக்குப் பெரும் சவாலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் பலர் சிறையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்டனர்.
பெரியார் பிரசாரம்!
அரிசிப் பஞ்சமும், விலைவாசி உயர்வும் காங்கிரஸ் ஆட்சிமீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.
‘ஆறு அவுன்ஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?’ என்ற பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய திராவிடர் கழகத் தலைவர் பெரியார்,
‘காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டும்’ என்று பிரசாரம் செய்தார்.
அமைச்சர்கள் தோல்வி!
பிரதமர் நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்தனர்.
பெரும் பரபரப்புடன் தேர்தல் நடைபெற்று, முடிவுகள் வெளியாகின.
இந்திய அளவில் மக்களவை, மாகாண சட்டமன்றங்கள் என இரண்டிலும் காங்கிரஸுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது.
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 499. அவற்றில், 364 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் வெற்றியை காங்கிரஸ் பெற்றது.
அதேநேரம், மொரார்ஜி தேசாய் உட்பட பல அமைச்சர்கள் தோல்வியடைந்தனர். மாகாண சட்டமன்றங்களிலும் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது.
காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அஜோய் கோஷ் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான சோஷலிஸ்ட் கட்சி 12 இடங்களிலும், இந்து மகாசபா 4 இடங்களிலும், பாரதிய ஜனசங்கம் 3 இடங்களிலும் வெற்றிபெற்றன.
டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான பட்டியல் சமூகக் கூட்டமைப்பு 2 இடங்களில் ஜெயித்தது.

Ambedkar
ஆனால், பம்பாய் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அம்பேத்கர் தோல்வியடைந்தார்.
அம்பேத்கரைத் தோற்கடித்தவர் பால் வியாபாரியான கஜ்ரோல்கர்.
அம்பேத்கரின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று வலதுசாரிகளும், சாவர்க்கர் செய்த சதிதான் அம்பேத்கரின் தோல்விக்குக் காரணம் என்று காங்கிரஸாரும் இன்றுவரை பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் வெற்றி!
தேசிய அளவில் காங்கிரஸுக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகள் இருந்தன என்றாலும், சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் நிலைமை கவலையைத் தந்தது.
போட்டியிட்ட மொத்த இடங்கள் 360. இவற்றில், 152 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது.
முதல்வர் குமாரசாமி ராஜா, பக்தவத்சலம், சஞ்சீவரெட்டி உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர்.
திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தொழிலதிபர் ராம்நாத் கோயங்கா படுதோல்வி அடைந்தார்.
அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர், உழைப்பாளர் கட்சியின் வேட்பாளரான திருக்குறள் முனுசாமி.
திராவிடர் கழகத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, எம்.கல்யாணசுந்தரம் உட்பட 62 பேர் வெற்றிபெற்றிருந்தனர்.
திராவிட நாடு கொள்கையை ஆதரிப்பதாகக் கையெழுத்திட்டு தி.மு.க-வின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களில், 8 பேர் மக்களவைக்கும், 43 பேர் சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை மாகாணத் தேர்தல் முடிவுகள், நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய முன்னணிக்கு 167 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
ஆகவே, ஆட்சியமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் இறங்கினர். தங்குதூரி பிரகாசம் தலைமையில் ஆட்சியமைப்பது என்பது எதிர்க்கட்சிகளின் முடிவு.
அப்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்தவர் பிரகாசா. இவர், பிரதமர் நேருவின் பள்ளி நண்பர்.
அவரைச் சந்தித்த தங்குதூரி பிரகாசம், ‘ஐக்கிய முன்னணிக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதால், எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
ஐக்கிய முன்னணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது வேறு.
காங்கிரஸைக் காத்த ராஜாஜி!
சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட தோல்வி, காங்கிரஸுக்குப் பெரும் கௌரவக் குறைச்சலாக இருந்தது.
ஆகவே, எப்படியாவது நாம் ஆட்சியமைத்துவிட வேண்டும் என்று காங்கிரஸார் நினைத்தனர்.
‘ராஜாஜி ஒரு ராஜதந்திரி. அவர் மனதுவைத்தால், காங்கிரஸ் ஆட்சியை நிச்சயம் அமைத்துவிடுவார்’ என்று பிரதமர் நேருவிடம் மாகாண காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.
அதையடுத்து, ராஜாஜியைச் சந்திக்க காமராஜர், சஞ்சீவ ரெட்டி, குமாரசாமி ராஜா ஆகியோரைக்கொண்ட தூதுக்குழு அமைக்கப்பட்டது.
ஆனால், அதில் ஒரு சிக்கல். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, பதவிக்காலம் முடிந்ததும் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
அவரை காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து, சென்னை மாகாணத்தில் காங்கிரஸுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எடுத்துக் கூறினார்கள்.
முதலில் தயங்கிய ராஜாஜி, பிறகு சம்மதம் தெரிவித்தார்.</
கொல்லைப்புற வழியாக..!
ராஜாஜி முதல்வராக வேண்டுமென்றால், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.
எனவே, ராஜாஜியை மேல்சபை உறுப்பினராக நியமிக்க முடிவுசெய்யப்பட்டது.
ஆளுநர் பிரகாசா, காங்கிரஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டு ராஜாஜியை மேல்சபை உறுப்பினராக நியமனம் செய்தார்.
ஆட்சியமைக்கப் போதிய பலம் இல்லை என்பதால், ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட காமன்வீல் கட்சித் தலைவர் மாணிக்கவேல் நாயக்கருக்கும், உழைப்பாளர் கட்சித் தலைவர் ராமசாமி படையாச்சிக்கும் வலை வீசினார் ராஜாஜி.
தவிர, சில சுயேச்சை உறுப்பினர்களையும் ராஜாஜி இழுத்தார். பெரும்பான்மை கிடைத்துவிட்டது.
போதுமான பலம் கிடைத்தவுடன், 1952-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் தேதி ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
தேர்தலில் போட்டியிடாமலேயே மேல்சபை உறுப்பினராகி, முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் ராஜாஜி.
‘கொல்லைப்புற வழியாக உள்ளே வந்துவிட்டார்’ என்று எதிர்க்கட்சிகள் ராஜாஜியைக் கிண்டல் செய்தன.
அதையெல்லாம் ராஜாஜி பொருட்படுத்தவில்லை. அதிகாரம் கைக்கு வந்த பிறகு, ராஜாஜியின் பேச்சும், செயல்பாடுகளும் எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியினருக்குமே கோபத்தை ஏற்படுத்தின.
அதனால், சென்னை மாகாண அரசியலின் போக்கே மாறியது. அப்படி என்ன நடந்தது? அடுத்த இதழில் பார்ப்போம்!
(இன்னும் அறிவோம்…)
சிக்கலில் காங்கிரஸ்… சிறையிலே கம்யூனிஸ்ட்டுகள்!:தமிழகத் தேர்தல் வரலாறு – (பகுதி-2)

