1952-ம் ஆண்டு…ஏப்ரல் 10-ம் தேதி சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார்.

அவர் செய்த முதல் வேலை, ரேஷன் முறையை ஒழித்ததுதான். அதுதானே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படக் காரணமாக இருந்தது…

முதல்வர் ராஜாஜி தனது ‘ராஜதந்திர’த்தால் ஆட்சியைச் சிக்கலின்றி நடத்தினார் என்றாலும், சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், ராஜாஜிக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தனர்.

ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள், மக்கள் பிரச்னைகளைச் சட்டமன்றத்தில் சரமாரியாக எழுப்பினர்.

கேள்விகளால் ராஜாஜியைத் துளைத்தெடுத்தனர். இன்னொரு புறம், தி.மு.க-வின் தொடர் போராட்டங்களும், கடும் விமர்சனங்களும் ராஜாஜி அரசுக்குப் பெரும் குடைச்சலைக் கொடுத்தன.

இந்தச் சூழலில், இந்தித் திணிப்புக்கு எதிரான போர் முரசு தமிழ்நாட்டில் ஒலித்தது. இந்தித் திணிப்புக்கு எதிராக தி.க-வும் தி.மு.க-வும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்போலச் செயல்பட்டன.

திருச்சி ரயில் நிலையப் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளைத் தார் பூசி அழித்தார் பெரியார்.

அதே திருச்சியில், அஞ்சல் நிலையப் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை தி.மு.க-வின் முக்கியத் தலைவரான மு.கருணாநிதி அழித்தார்.

ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தியை அழித்தார் தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணா.

ஆந்திரா கேட்டுப் போராட்டம்!

மத்தியிலும் மாகாணத்திலும் தேர்தல்கள் முடிந்து அரசுகள் அமைந்த பிறகு, சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்தது.

அதற்கான போராட்டங்கள் நடைபெற்ற நேரத்தில், ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் முதல்வர் ராஜாஜி. அப்போது, அவர்மீது தார் உருண்டைகள் வீசப்பட்டு தாக்குதல்கூட நடந்தது.

‘குறி தவறாமல் என்னை நோக்கி தார் உருண்டை வீசிய நபரைப் பாராட்டுகிறேன்.

ஆனால், இப்படி என்மீது தார் உருண்டையை வீசுவதன் மூலமாக, தனி மாநிலம் கிடைத்துவிடாது’ என்று ராஜாஜி கூறினார்.

ஆந்திர மாநிலக் கோரிக்கைக்காக 1952-ம் ஆண்டு, அக்டோபர் 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் பொட்டி ஸ்ரீராமுலு. 58 நாள்களாக உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், டிசம்பர் 15-ம் தேதி அவரது உயிர் பிரிந்தது.

அது தெலுங்கு பேசும் பகுதிகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் போராட்டங்கள் வெடித்தன. இதன் பின்னணியில், சென்னை மாகாணத்தை இரண்டாகப் பிரிப்பது என்று முடிவெடுத்தார் பிரதமர் நேரு.

1953-ம் ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதி ஆந்திர மாநிலம் உதயமானது.</

தனி மாநிலம் உருவான பின்னரும் சில பஞ்சாயத்துகள் தீரவில்லை. வடஆற்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட சித்தூர், திருத்தணி, புத்தூர், பல்லவனேரி, காளஹஸ்தி, சந்திரகிரி உள்ளிட்ட பகுதிகளையும், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சில பகுதிகளையும் இணைத்து ‘சித்தூர் மாவட்டம்’ உருவாக்கப்பட்டது.

அதன் தலைநகராக வேலூர் இருந்தது. சித்தூர் மாவட்டம், ஆந்திராவுக்குப் போகப்போகிறது என்ற சூழல் உருவானபோது, தமிழரசுக் கழகத்தின் தலைவரான ம.பொ.சிவஞானம் போராட்டத்தில் குதித்தார்.

திருத்தணியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. சித்தூர் எல்லைப் போராட்டத்தால் கோபமடைந்த பிரதமர் நேரு, ‘நான்சென்ஸ்’ என்று கூறிவிட்டார்.

அதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நேருவைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

புதுக்கல்வியா, குலக்கல்வியா?

அந்த நேரத்தில், `புதிய கல்வித் திட்டம்’ என்ற சர்ச்சைக்குரிய கல்வி முறையை ராஜாஜி கொண்டுவந்தார்.

அதன்படி, மாணவர்கள் அரை நாள் பள்ளியில் படிப்பார்கள்… மீதி அரை நாள் கைத்தொழில் கற்பார்கள். அதாவது, ‘அப்பா செய்யும் தொழிலுக்கு உதவியாக இருந்து, அந்தத் தொழிலை மகன் கற்றுக்கொள்வார்’ என்றார் ராஜாஜி.

‘இது குலக்கல்வித் திட்டம்’ என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் செய்தன. அதோடு குலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தையும் அறிவித்த தி.மு.க., மும்முனைப் போராட்டத்துக்குத் தயாரானது.

அதாவது, சித்தூர் எல்லைப் போராட்டத்தை ‘நான்சென்ஸ்’ என்று நேரு அவமதித்ததைக் கண்டிக்கும் போராட்டம்… ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்க்கும் போராட்டம்… டால்மியாபுரத்தை `கல்லக்குடி’ என்று மாற்றும் போராட்டம் என மும்முனை போராட்டம்.

`இந்தப் போராட்டம், ஜூலை 14-ம் தேதி (1953) நடைபெறும்’ என்று நாளும் குறிக்கப்பட்டது.

அந்தப் போராட்டம் குறித்து விவாதிக்க, தி.மு.க-வின் செயற்குழு ஜூலை 13-ம் தேதி சென்னையில் கூடியது.

அப்போது, அண்ணா உள்ளிட்ட தலைவர்களை போலீஸார் கைதுசெய்தனர். ஆனாலும், திட்டமிட்டபடி கல்லக்குடியில் மு.கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு, ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க-வினர் போராட்டம் செய்தனர்.

அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அன்றைய தினம், முதல்வர் ராஜாஜி வீட்டுக்கு முன்பு தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் ராஜாஜி செல்லும் இடமெல்லாம் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டினர். அந்த நேரத்தில் தமிழகத்துக்கு வந்தார் பிரதமர் நேரு. அவருக்கும் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.

சென்றார் ராஜாஜி… வந்தார் காமராஜர்!

முதல்வர் ராஜாஜிக்கு, பிரதமர் நேருவின் முழு ஆதரவு இருந்தது. ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் கணிசமானோர் காமராஜரின் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.

ராஜாஜியின் கல்வித் திட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும், அந்தத் திட்டத்தை வாபஸ் பெற அவர் தயாராக இல்லை. இந்தச் சூழலில், ராஜாஜிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர்.

ராஜாஜிக்கு எதிராக வாக்களிக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிலேயே பலர் தயாராக இருந்தனர். நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்த ராஜாஜி 1954-ம் ஆண்டு, மார்ச் 24-ம் தேதி, ‘உடல்நிலை சரியில்லை’ என்று சொல்லி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு, தன் சீடரான சி.சுப்பிரமணியத்தை முதல்வர் பதவிக்குக் கொண்டுவரும் முயற்சியில் ராஜாஜி இறங்கினார். ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

‘காமராஜர் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சிக்குள் குரல் எழுந்தது. ஆனால், காமராஜருக்கு முதல்வராகும் விருப்பம் இல்லை.

காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்த்துவந்த பெரியார், முதல்வர் பதவியை ஏற்குமாறு காமராஜரைக் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலரும் காமராஜரைத் தொடர்ச்சியாக வலியுறுத்தினர். கடைசியில், முதல்வராவதற்கு காமராஜர் சம்மதித்தார்.

அப்போது, காமராஜருக்கு எதிராகசி.சுப்பிரமணியம் களமிறக்கப்பட்டார். சி.சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமும், காமராஜரின் பெயரை வரதராஜுலு நாயுடுவும் முன்மொழிந்தனர்.

‘அடுத்த முதல்வர் யார்?’ என்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. காமராஜருக்கு 93 வாக்குகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 வாக்குகளும் கிடைத்தன.

1954-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார் காமராஜர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம்,

அவரை முன்மொழிந்த பக்தவத்சலம் ஆகியோரையும் தனது அமைச்சரவையில் காமராஜர் சேர்த்துக்கொண்டார்.

குடியாத்தம் இடைத்தேர்தல்!

முதல்வராகப் பதவியேற்றவுடன் காமராஜர் செய்த முதல் வேலை, ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ஒழித்ததுதான்.

அந்த நேரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக காமராஜர் இருந்தார். அவர் முதல்வராகத் தொடர வேண்டுமென்றால், சட்டமன்ற உறுப்பினராக ஆக வேண்டும்.

அப்போது, காலியாக இருந்த குடியாத்தம் தொகுதிக்கு 1954-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காமராஜரை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சி தன் வேட்பாளரை நிறுத்தியது. பெரியார், அண்ணா உட்பட அனைவரும் காமராஜரின் பக்கம் இருந்தனர்.

‘காமராஜர் ஒரு பச்சைத் தமிழர். அவர் முதல்வராக இருந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்’ என்றார் பெரியார். தேர்தலில் காமராஜர் வென்றார்.

கறுப்பு, சிவப்புப் பெட்டிகள்!

தி.மு.க உதயமாகி ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தன. கடும் போராட்டங்களை நடத்தி, வலிமை மிகுந்த கட்சியாக தி.மு.க வளர்ந்திருந்தது.

தி.மு.க-வின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில் 1956-ம் ஆண்டு, மே 17-20 தேதிகளில் நடைபெற்றது.

தேர்தலில் போட்டியிடலாம் என்ற மிக முக்கியமான முடிவு அங்குதான் எடுக்கப்பட்டது.

மாநாட்டில் கறுப்பு, சிவப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டன. `தேர்தலில் போட்டியிடலாம்’ என்றால் சிவப்புப் பெட்டியிலும், `வேண்டாம்’ என்றால் கறுப்புப் பெட்டியிலும் வாக்குகளைச் செலுத்த வேண்டும். `தேர்தலில் போட்டியிடலாம்’ என்று 57,000 பேரும், `வேண்டாம்’ என்று 3,000 பேரும் வாக்களித்தனர்.

அதைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட தி.மு.க ஆயத்தமானது.

1957-ம் ஆண்டு, பிப்ரவரி – மார்ச் மாதங்களில் இரண்டாவது பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் அண்ணா, குளித்தலையில் மு.கருணாநிதி, எழும்பூரில் பேரா க.அன்பழகன் உட்பட 124 வேட்பாளர்களை தி.மு.க அறிவித்தது.

1952 தேர்தலில் காங்கிரஸைக் கடுமையாக எதிர்த்த பெரியார், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கினார்.

அவர், காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணாவுக்கு எதிராகத் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸை வீழ்த்தி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற வேட்கை, தி.மு.க-விடம் அதிகமாக இருந்தது.

ஆனால், காங்கிரஸை வெல்வது எளிது கிடையாது. பண பலம், அதிகார பலம், பத்திரிகைகளின் ஆதரவு காங்கிரஸுக்கு இருந்தன.

மிட்டா மிராசுகளும், தொழிலதிபர்களும் காங்கிரஸின் பக்கம் இருந்தனர். அப்படியிருந்தும், தேர்தல் முடிவுகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தன. அப்படி என்னதான் அப்போது நடந்தது?

(இன்னும் அறிவோம்…)
-விகடன்-

மத்தியில் வெற்றி… மாகாணத்தில் தோல்வி! தமிழகத் தேர்தல் வரலாறு – (பகுதி-3)

Share.
Leave A Reply