மலிவு விலையில் அதிக ஊட்டச்சத்துக்களை வழங்கும் காய்கறிகளில் கத்தரிக்காய் முக்கியமான ஒன்றாகும். நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின் A, C, B1, B2 ஆகியவை நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பலரும் கத்தரிக்காயை ஒரு காய்கறியாகவே கருதினாலும், அறிவியல் ரீதியாக அது ஒரு பழமாகும். இதில் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும், வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜி மற்றும் சில உடல் உஷ்ண பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது.

இந்த ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கத்தரிக்காயை கொண்டு, சுவைமிக்க பாரம்பரிய தென்னிந்திய உணவான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் – 250 கிராம்

  • சின்ன வெங்காயம் – 10

  • பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

  • தக்காளி – 2

  • தேங்காய் துருவல் – அரை கப்

  • இஞ்சி – 1 துண்டு

  • பூண்டு – 4 பல்

  • கடுகு – ¼ தேக்கரண்டி

  • வெந்தயம் – ¼ தேக்கரண்டி

  • மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி

  • தனியா பொடி – 1 தேக்கரண்டி

  • மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி

  • சீரகம், சோம்பு – தலா 1 தேக்கரண்டி

  • புளி தண்ணீர் – 1 கப்

  • காய்ந்த மிளகாய் – 2

  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

  • கொத்தமல்லி – தேவையான அளவு

  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
அதன்பின் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக கலக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி ஆறவிட வேண்டும்.

இந்த வதக்கிய கலவையை மிக்சி ஜாரில் போட்டு, தேங்காய் துருவல், சீரகம், சோம்பு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எக்ஸ் வடிவில் வெட்டிய கத்தரிக்காய்களை தனியாக வதக்கி எடுத்து வைக்க வேண்டும்.

அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன்பின் அரைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வேகவிட வேண்டும்.

பின் புளி தண்ணீர், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அதில் வதக்கிய கத்தரிக்காயை சேர்த்து லேசாக கலக்கி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வேகவிட வேண்டும்.

இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால், வாசனைக்கும் சுவைக்கும் உச்சமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

இது சோறு, இட்லி, தோசை என அனைத்துக்கும் அருமையான சைடிஷ்.

Share.
Leave A Reply