யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பின் போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தில் முதற்கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது போதுமானதாக இல்லை என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓடுதள அபிவிருத்தியின் அவசியம்

விமான நிலையத்தின் ஓடுதளத்தை (Runway) முழுமையாக சீரமைத்து விரிவாக்கினால் மட்டுமே, பெரிய அளவிலான விமானங்கள் அங்கு வந்து இறங்கும் வசதி ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 320 மற்றும் 321 வகை விமானங்கள் வந்து இறங்கக்கூடிய அளவிற்கு ஓடுதளம் விரிவாக்கப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு அபிவிருத்திக்கு உதவும் திட்டம்

பலாலி விமான நிலையத்தின் முழுமையான அபிவிருத்தி, வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு மற்றும் வெளிநாட்டு தொடர்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசு மேலதிகமாக ஆலோசனை செய்து, உரிய தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply