1953-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி. ஆந்திர மாநில உருவாக்கம், மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு வழிவகுத்தது.

ஆந்திராவைத் தொடர்ந்து, கேரளா, கர்நாடகா மாநிலங்களும் உருவாகின. அந்த மூன்று மாநிலங்களுடன் பிரிந்து சென்ற பகுதிகள் தவிர, எஞ்சிய பகுதிகள் `சென்னை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டன!

தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமாக சென்னை மாகாணம் மாறியது.

இதற்கு, ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை எழுந்திருந்தது.

அதற்கு ஆதரவான குரல்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, தி.மு.க., தமிழரசுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடமிருந்து வந்தன.

தங்களின் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் ‘தமிழ்நாடு’ என்று பயன்படுத்துமாறு தமிழர்களுக்கு பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

‘தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும்’ என்று கோரி, 1956-ம் ஆண்டு, ஜூலை 27-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார்.

விருதுநகரைச் சேர்ந்த 78 வயதான அந்த காந்தியவாதியின் கோரிக்கைக்கு காமராஜர் அரசு செவிமடுக்கவில்லை.

76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார் சங்கரலிங்கனார்.

அதன் பிறகும், தமிழ்நாடு கோரிக்கையை ஏற்க மறுத்தார் காமராஜர்.

எளிய மக்களுக்கான குரல்!

அன்றைய காலகட்டத்தில், நாடு முழுவதும் காங்கிரஸ்தான் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அதனுடன் ஒப்பிட்டால் தி.மு.க ஒரு சாதாரணக் கட்சியாக இருந்தது.

ஆனாலும், தி.மு.க-வினர் கடுமையாக உழைத்தனர். கதை, கவிதை, திரைப்படம், நாடகம், நடிப்பு எனப் பல தளங்களிலும் திறம்படப் பணியாற்றினார்கள்.

அண்ணாவும் கருணாநிதியும் நாடகங்கள், திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதினார்கள். எதுகை மோனையுடன் அடுக்கு மொழியில் அமைந்த தி.மு.க-வினரின் மேடைப்பேச்சுகள் மக்களைக் கவர்ந்தன.

தி.மு.க., மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தமாக இடம்பிடிக்கத் தொடங்கியது.

அண்ணா உள்ளிட்ட தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள், பத்திரிகைகள் மூலம் கருத்து பிரசாரம் நடத்தினர்.

அண்ணா – திராவிட நாடு, இரா.நெடுஞ்செழியன் – மன்றம், மு.கருணாநிதி – முரசொலி, கவிஞர் கண்ணதாசன் – தென்றல், சத்தியவாணிமுத்து – அன்னை, இராம.அரங்கண்ணல் – அறப்போர், பேராசிரியர் க.அன்பழன் – புதுவாழ்வு, சி.பி.சிற்றரசு – இனமுழக்கம், கே.ஏ.மதியழகன் – தென்னகம், ஏ.வி.பி.ஆசைத்தம்பி – தனி அரசு என்று தி.மு.க தலைவர்கள் நடத்திய பத்திரிகைகள் திராவிடக் கருத்துகளை மக்களிடம் பரப்பின.

தி.மு.க வளர்வதற்கான சூழலும் வாய்ப்பும் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகளால் அதிகரித்தன.

அதாவது, சுதந்திரத்துக்குப் பிறகு பத்தாண்டுக்காலம் காங்கிரஸ்தான் ஆட்சிக்கட்டிலில் இருந்தது.

காங்கிரஸின் கொள்கைகள் பெரும்பாலும், பெரிய தொழிலதிபர்களுக்கும், நிலவுடைமையாளர் களுக்கும் ஆதரவாகவே இருந்தன.

அதனால், சாதாரண ஏழை எளிய மக்களால் வறுமையிலிருந்து மீள முடியவில்லை. அடித்தட்டு மக்களுக்கான போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்தனர்.

தி.மு.க-வும், எளிய மக்களின் பிரச்னைகளுக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்தது.

அதன் மூலம் மக்கள் மத்தியில் தி.மு.க-வின் செல்வாக்கு அதிகமானது.

ராஜாஜியின் குதிரை பேரம்!

சமூகச் சீர்திருத்தம் என்ற தளத்தில் தொடங்கிய தி.மு.க-வின் பயணம், பின்னர் தேர்தல் பாதையை நோக்கித் திரும்பியது.

அதற்குச் சில காரணங்கள் இருந்தன. 1952 தேர்தலில், வன்னியர் சங்கத் தலைவர்களாக இருந்த உழைப்பாளர் கட்சியின் தலைவரான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியும், காமன்வீல் கட்சித் தலைவர் மாணிக்கவேல் நாயக்கரும் திராவிட நாடு கொள்கையை ஆதரிப்பதாக தி.மு.க-விடம் வாக்குறுதி கொடுத்தனர்.

அதன் மூலம், தி.மு.க-வின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றனர். பிறகு, ராஜாஜியின் குதிரை பேரத்துக்கு அடிபணிந்து,

தி.மு.க-வுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு காங்கிரஸில் அவர்கள் கரைந்தனர். அதனால், ‘நாம் ஏன் மற்றவர்களை அதிகாரத்தில் ஏற்றிவிட வேண்டும்… நாமே அதிகாரத்துக்கு வரலாமே..?’ என்று அவர்கள் யோசித்தனர்.

தேர்தலில் களமிறங்குவது என்று தி.மு.க-வின் திருச்சி மாநாட்டில் முடிவெடுத்த சூழலில், பொதுத் தேர்தலும் வந்தது.

களமிறங்கிய கட்சிகள்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375-லிருந்து 205- ஆகக் குறைந்தது. அவற்றில் ஓர் இடம் ஆங்கிலோ இந்தியருக்கான நியமன உறுப்பினர் பதவி. 204 சட்டமன்றத் தொகுதிகளிலும், 41 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது.

1952-ம் ஆண்டு 62 இடங்களைப் பிடித்து சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்த முறை 55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 13 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டது.

காமராஜரை எதிர்த்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய வெங்கடகிருஷ்ண ரெட்டியார், எஸ்.எஸ்.கரையாளர் உள்ளிட்ட தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘காங்கிரஸ் சீர்திருத்த கமிட்டி’யும் தேர்தலில் களமிறங்கியது.

பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி ஆகியவையும் போட்டியிட்டன. 112 சட்டமன்றத் தொகுதிகளிலும், 11 மக்களவைத் தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் களமிறங்கினர்.

காஞ்சிபுரத்தில் அண்ணா, குளித்தலையில் கருணாநிதி, எழும்பூரில் பேரா க.அன்பழகன், சேலத்தில் இரா.நெடுஞ்செழியன், ஆயிரம் விளக்கில் ஏ.வி.பி.ஆசைத்தம்பி, பெரம்பூரில் சத்தியவாணிமுத்து எனக் களமிறங்கிப் போட்டியிட்டனர்.

தேர்தல் ஆணையத்தால், அங்கீகரிக்கப்படாத கட்சியாக ஆரம்பநிலையில் இருந்ததால், தி.மு.க-வினர் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாகவே போட்டியிட்டனர்.

உங்கள் வீட்டுப் பிள்ளை!

அதிகார பலமும், பண பலமும், பத்திரிகைகளின் ஆதரவும் கொண்டிருந்த காங்கிரஸுடன் மோதுவது, தி.மு.க-வுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

பெரும் செல்வாக்கு பெற்ற தலைவராக காமராஜர் விளங்கினார். 1956-ம் ஆண்டு மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்த காரணத்தால், ‘கல்விக்கண் திறந்தவர்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் செல்வந்தர்களாக இருந்தனர். தேர்தலில் தாராளமாகப் பணம் செலவழித்தனர்.

தி.மு.க-வினருக்கு அவ்வளவு வசதிகள் இல்லை. அதேநேரம், காங்கிரஸை எப்படியாவது முட்டி மோதி வீழ்த்திவிட வேண்டும் என்ற வேகம் மட்டும் அவர்களிடம் இருந்தது.

தேர்தல் பிரசாரத்துக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள், பெரும் கூட்டத்தினர் புடைசூழ கார்களில் வந்திறங்கினர்.

தி.மு.க வேட்பாளர்களோ, வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு கேட்டனர்;

கட்சித் தொண்டர்களின் வீடுகளில் சாப்பிட்டனர்; ‘உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று தட்டிகளில் எழுதி விளம்பரம் செய்தனர்; துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனர்.

தி.மு.க-வினர் பம்பரமாகச் சுழன்று தேர்தல் வேலைகளைச் செய்தனர். எளிமையான பிரசாரத்தின் மூலம் மக்கள் மனதில் தி.மு.க வேட்பாளர்கள் இடம்பிடித்தனர்.

முடிவை மாற்றிய பெரியார்!

இந்தத் தேர்தலில், திராவிடர் கழகத் தலைவர் பெரியாரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருந்தது.

1952 தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட்டுகளை அவர் ஆதரித்தார்.

எந்த காங்கிரஸை வேரடி மண்ணோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தாரோ,

அந்த காங்கிரஸை இந்தத் தேர்தலில் பெரியார் ஆதரித்தார்.</அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரத்துக்கு நேரடியாகச் சென்று, காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனிவாசனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார் பெரியார்.

அதேநேரம், ‘பச்சைத் தமிழன் காமராஜரை ஆதரிக்கிறேன்… காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கவில்லை’ என்று பெரியார் விளக்கம் தந்தார்.

1957-ம் ஆண்டு, பிப்ரவரி 24 முதல் மார்ச் 14 வரை தேர்தல் நடைபெற்று, முடிவுகள் வெளியாகின.

204 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 151 தொகுதிகளில் ஜெயித்தது. காங்கிரஸ் சீர்திருத்த கமிட்டி 16 இடங்களை வென்றது.

112 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க., 15 இடங்களில் ஜெயித்தது. முதல் தேர்தலில் 62 இடங்களில் ஜெயித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை வெறும் நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்தன.

பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கம்யூனிஸ்ட் கட்சி இழந்தது.

அதனால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து இந்த முறை காங்கிரஸ் சீர்திருத்த கமிட்டிக்குக் கிடைத்தது. பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 23 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது.

1957-ம் ஆண்டு, மார்ச் 13-ம் தேதி காமராஜர் முதல்வராகப் பதவியேற்றார். எம்.பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், மாணிக்கவேல் நாயக்கர், ஆர்.வெங்கட்ராமன், பி.கக்கன், வி.ராமையா, லூர்து அம்மாள் சைமன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

சட்டமன்றத்தில் தி.மு.க!

அண்ணா, க.அன்பழகன், மு.கருணாநிதி, சத்தியவாணிமுத்து, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, களம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், ஏ.கோவிந்தசாமி, ப.உ.சண்முகம்,பி.எஸ்.சந்தானம், இருசப்பன், எம்.பி.சாரதி, எம்.பி.சுப்பிரமணியம், எம்.செல்வராஜ், டி.நடராசன் ஆகிய 15 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர்.

ஈ.வெ.கி.சம்பத், தர்மலிங்கம் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக வெற்றிபெற்றனர்.

தி.மு.க ஆதரவுடன் போட்டியிட்ட டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, என்.சிவராஜ் ஆகியோரும் மக்களவை உறுப்பினர்களாகினர். சேலத்தில் இரா.நெடுஞ்செழியன் தோல்வியடைந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றியை காங்கிரஸ் பெற்றது. மக்களவையில் மொத்தம் 494 இடங்கள்.

அவற்றில், 371 இடங்களை காங்கிரஸ் பிடித்தது. மீண்டும் நேருதான் பிரதமர். நாடு முழுவதும் பெரும் வெற்றியைப் பெற்றிருந்த காங்கிரஸுக்கு, கேரள மக்கள் பேரதிர்ச்சியைக் கொடுத்தனர்.

அங்கு, காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடித்தனர்.

முதல்வராக இ.எம்.எஸ் பதவியேற்றார். உலகிலேயே ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு அதுதான்.

கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் பெற்ற வெற்றியை, காங்கிரஸால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அங்கு, இரண்டே ஆண்டுகளில் ஒரு பெரிய ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தினார்கள்!

(இன்னும் அறிவோம்)

Share.
Leave A Reply