வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக நீண்ட காலம் பதவியில் இருந்த நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்கச் சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் உலக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய மதுரோ, இன்று அமெரிக்காவின் சிறையில் விசாரணையை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்த அதிரடி மாற்றத்திற்குப் பிந்தைய வெனிசுவேலாவின் நிலை மற்றும் சர்வதேச அரங்கில் நிலவும் சட்டப் போராட்டங்கள் குறித்து அனைத்து நாடுகளும் நேரடியாக தலையீடுகளுடன் அவதானித்து வருகின்றன.
மதுரோவின் கைதுக்குப் பிறகு வெனிசுவேலாவில் உடனடியாக ஒரு அதிகார வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய, அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச நட்பு நாடுகள் இணைந்து ஒரு வலுவான இடைக்கால அரசை உருவாக்க முயன்று வருகின்றன.
மதுரோவின் நிர்வாகக் கட்டமைப்பு இன்னும் முழுமையாகச் சிதறவில்லை என்றாலும், அதன் முக்கியத் தூணாக விளங்கிய தலைமை தற்போது அற்றுப்போயுள்ளது.
எனவே தற்போதைய சூழலில், வெனிசுவேலா இராணுவத்தின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. பல தசாப்தங்களாக மதுரோவின் ஆட்சிக்குத் துணையாக இருந்த அந்நாட்டு இராணுவத் தளபதிகள், இப்போது தங்களின் எதிர்காலம் குறித்துக் குழப்பத்தில் உள்ளனர்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், வன்முறையைத் தவிர்க்கும் பொருட்டு இராணுவத் தளபதிகளுடன் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
ஒரு முறையான ஜனநாயகத் தேர்தல் நடைபெறும் வரை, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு தற்காலிக பேரவை நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதே பெரும்பாலான நாடுகளின் விருப்பமாக உள்ளது.
மறுபுறம் அமெரிக்கா மதுரோவை ஒரு அரசியல் கைதியாகப் பார்க்காமல், ஒரு குற்றவாளியாகவே கருதுகிறது.
நியூயோர்க் மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களில் உள்ள பெடரல் நீதிமன்றங்களில் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முக்கியமாக, மதுரோ ‘சூரியன்களின் கூட்டுக்குழு’ (Cartel of the Suns) என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் கொகோயின் போதைப்பொருளை கடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது ‘போதைப்பொருள் பயங்கரவாதம்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மதுரோவை கைது செய்ய உதவுவதற்காக அமெரிக்கா அவருக்கு எதிராக 15 மில்லியன் டொலர் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது அவர் பிடிபட்டுள்ள நிலையில், பல தசாப்த காலச் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இந்த வழக்குகளின் மூலம் அமெரிக்கா சர்வதேச சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது.
ஒரு நாட்டின் தலைவராக இருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் தப்பிக்க முடியாது என்பதை வெளிப்படுத்துகின்றது.
அமெரிக்காவின் போதைப்பொருள் வழக்குகள் ஒருபுறம் இருக்க, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் மதுரோவிற்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
வெனிசுவேலாவில் நடந்த மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய விதம், அரசியல் கைதிகள் மீதான சித்திரவதைகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் ஆகியவற்றிற்காக நிக்கோலஸ் மதுரோவுக்கு ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவேதான், சர்வதேச சட்ட வல்லுநர்கள், மதுரோவை அமெரிக்கா மட்டும் விசாரணை செய்யாமல், ஐநாவின் ஆதரவுடன் ஒரு சர்வதேசத் தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது அந்தத் தாக்குதலின் சட்டபூர்வத் தன்மையை உறுதிப்படுத்த உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அமெரிக்கா மதுரோவைத் தனது பிடியிலேயே வைத்து விசாரிக்கவே அதிக ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெனிசுவேலா – அமெரிக்கா இடையிலான நீண்டகாலப் பகை
இந்தத் திடீர் மாற்றத்தைப் புரிந்துகொள்ள, அமெரிக்காவிற்கும் வெனிசுவேலாவிற்கும் இடையில் கடந்த இருபது ஆண்டுகளாக நிலவி வரும் கசப்பான உறவை கவனிக்க வேண்டும்.
ஹியூகோ சாவேஸின் காலத்தில் தொடங்கிய சோசலிசக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க எதிர்ப்பு மனநிலை, மதுரோவின் காலத்தில் உச்சகட்டத்தை எட்டியது.
வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த மதுரோ, அமெரிக்க நிறுவனங்களை வெளியேற்றினார்.
இதற்குப் பதிலடியாக அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகள், வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியது.
பணவீக்கம் வரலாறு காணாத அளவில் உயர்ந்ததுடன், மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கே வழியின்றித் தவித்தனர். இந்த நீண்டகால நெருக்கடியே இறுதியில் அமெரிக்காவின் நேரடி இராணுவ நடவடிக்கைக்குத் தூண்டுதலாக அமைந்தது.
மதுரோவின் பிடிவாதம் மற்றும் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் அவர் கொண்டிருந்த நெருக்கம் அமெரிக்காவை இந்த அதிரடி முடிவை எடுக்கத் தூண்டியது.
மறுபுறம் மதுரோவின் கைது என்பது வெறும் ஒரு நபரின் வீழ்ச்சி மட்டுமல்ல, அது ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு மூலோபாய எச்சரிக்கையாகும்.
உக்ரைன் போரில் ரஷ்யா கவனம் செலுத்தி வரும் வேளையில், அதன் நட்பு நாடான வெனிசுவேலாவை அமெரிக்கா ஆக்கிரமித்தது விளாடிமீர் புதினுக்கு ஒரு பலத்த அடியாகும்.
சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்;தின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், இப்போது லத்தீன் அமெரிக்காவில் மதுரோவும் வீழ்ந்துள்ளார்.
இது ரஷ்யாவின் உலகளாவிய செல்வாக்குச் சரிந்து வருவதையே காட்டுகிறது. அதேபோல், ஈரானின் தலைவர்களுக்கும் இந்த கைது ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் எந்தவொரு நாட்டின் தலைவரையும் அப்புறப்படுத்த முடியும் என்ற செய்தி இதன் மூலம் உரக்கச் சொல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, மதுரோ ஒரு சர்வாதிகாரியாகத் தனது நாட்டு மக்களைத் துன்புறுத்தினார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
தற்போது அந்நாட்டில் கைதுக்கு ஆதரவாக மக்கள் முன்னெடுக்கும் ஆரவார பேரணிகள் சிறந்த உதாரணமாக உள்ளன.

Nicolas Maduro
முறையான தேர்தல்களை நடத்தாமல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டது, ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்தது என அவர் செய்த தவறுகள் ஏராளம்.
இதனால் தான், அவரது கைது சட்டரீதியாக விவாதிக்கப்பட்டாலும், உலகின் எந்தவொரு முக்கிய ஜனநாயக நாடும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய கொடுங்கோல் ஆட்சிகளைத் தடுக்கத் தவறிவிட்ட நிலையில், அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கையை எடுத்தது காலத்தின் கட்டாயமா அல்லது அதிகார அத்துமீறலா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஆகவே தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸில் வான்வழித் தாக்குதலை நடத்தி நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்ததாக அறிவித்திருப்பது, 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய இராணுவ நடவடிக்கையாக மாறியுள்ளது.
இந்த அதிரடி மாற்றம், சர்வதேச சட்டத்தின் வலிமை மற்றும் வல்லரசுகளின் ஆதிக்கம் குறித்த உலகளாவிய விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சர்வதேச சட்டங்களின்படி தற்காத்துக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஐநா சாசனத்தின் பிரிவு 2(4), ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு சக்தியைப் பயன்படுத்துவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ தடை செய்கிறது.
இருப்பினும், அமெரிக்கா தனது ‘நீதித்துறை அதிகாரத்தை’ எல்லை தாண்டிப் பயன்படுத்தியுள்ளது. மதுரோ ஒரு சர்வாதிகாரியாகத் திகழ்ந்தார் என்பதில் உலக நாடுகளிடையே மாற்றுக் கருத்து இல்லை.
போலித் தேர்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மூலம் அவர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். ஐநா சபை இத்தகைய சூழல்களில் தலையிட்டு தீர்வு கண்டிருக்க வேண்டும்.
ஆனால், ஐநாவின் பலவீனமான நிலையால் அமெரிக்கா தன்னிச்சையாகச் செயல்பட்டு, ஒரு ‘ஆபத்தான முன்னுதாரணத்தை’ ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்வினைகள்
மதுரோவின் கைது விவகாரத்தில் உலகம் இரண்டு துருவங்களாகப் பிரிந்துள்ளன.
ரஷ்யா இந்த நடவடிக்கையைத் தனது நட்பு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பாகப் பார்க்கிறது. சீனா, ‘ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது அமெரிக்கா படைபலத்தைப் பயன்படுத்தியது ஆழமான அதிர்ச்சியை அளிக்கிறது’ என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது லத்தீன் அமெரிக்காவின் அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் சீனா கூறியுள்ளது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ‘மதுரோ மற்றும் அவரது மனைவி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டுத் தலைவரை வெளிப்புற நடவடிக்கை மூலம் அகற்றுவது சர்வதேச ஒழுங்கைச் சிதைக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் இதனை ‘ஐநா சாசனத்தின் அடிப்படை நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் ஆக்கிரமிப்புச் செயல்’ என்று கடுமையாகச் சாடியுள்ளது.
ஜி7 நாடாகத் தனது நிலப்பாட்டை உறுதி செய்துள்ள ஜப்பான், வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா, இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகள் மிகவும் எச்சரிக்கையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
இலங்கை வழக்கமாக சர்வதேச விவகாரங்களில் ‘அணிசேரா’ மற்றும் ‘இறையாண்மைக்கு மதிப்பளிக்கும்’ கொள்கையையே கடைபிடிக்கிறது.
வெனிசுவேலாவின் சம்பவங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக கவலை தெரிவித்துள்ள இலங்கை, இந்தப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. குறிப்பாக, சிறிய நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்ற கவலை இலங்கை போன்ற நாடுகளுக்கு எப்போதும் உண்டு.
இந்தியா இந்தச் சூழலை ‘உன்னிப்பாகக் கவனிப்பதாக’ கூறி, தனது குடிமக்களுக்குப் பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
பாக்கிஸ்தான், நிதானத்தைக் கடைபிடிக்குமாறும், ஐநா சாசனத்தின்படி தீர்வு காணுமாறும் கோரியுள்ளது. மதுரோவின் வீழ்ச்சி ஒரு கொடுங்கோல் ஆட்சியின் முடிவாகப் பார்க்கப்பட்டாலும், அது நிகழ்த்தப்பட்ட விதம் சர்வதேச சட்டங்களுக்கு சவாலாக உள்ளது.
அமெரிக்காவின் இராணுவ வல்லமைக்கு ஈடு இணை இல்லை என்பதை இது காட்டினாலும், மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் இத்தகைய தலையீடுகள் உலக அமைதிக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வரும் காலங்களில் தான் தெரியவரும்.
(லியோ நிரோஷ தர்ஷன்)

