வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் வாய்ப்பு இருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிடுகையில், குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாழ்ப்பாணத்தினை அண்மிக்கும் போது வலுவிழந்து சாதாரண தாழ்வு நிலையாகவே கரையைக் கடக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. எனவே மலையக பகுதிகளில் வாழும் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் எதிர்வரும் 11.01.2026 வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 116 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், அதன் வெளிவலய முகில்கள் ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் கரையோர பகுதிகளைத் தொட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கன மழை பதிவாகத் தொடங்கியுள்ளதுடன், காற்றின் வேகமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முக்கிய எச்சரிக்கை
இந்நிலையில், அடுத்த 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், அடுத்த 72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணத்திற்கும் மிக முக்கியமான காலப்பகுதியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கன மழை மற்றும் வேகமான காற்று வீசுதல் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.

