வெனிசுலா மீது முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள், குறிப்பாக சிறிய நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் உள்ள உள்நாட்டு பிரச்சினைகள் உண்மைதான் என்றாலும், அதனை காரணமாக கொண்டு மற்றொரு நாடு தன்னிச்சையாக ராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டினார். உலக அரசியல் இப்படித்தான் செயல்படுகிறது என்றால், ஒரு சிறிய நாடு என்ற வகையில் அது மிகவும் பிரச்சினைக்குரிய விடயமாக மாறும் என்றும் அவர் கூறினார்.
மேலும், அமெரிக்கா வெனிசுலாவில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, லீ சியன் லூங் மிகுந்த கவனத்துடன் கருத்து தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், அதில் சிங்கப்பூருக்கு எந்த பயனும் இல்லை என கூறிய அவர், சிங்கப்பூர் தனது கொள்கைகளில் உறுதியாக நிலைத்திருக்கும் என்றும் விளக்கினார்.
அதேவேளை, சிங்கப்பூர் எந்த நாட்டின் செயலை ஏற்கவில்லை என்பதற்காக அந்த நாடு சிங்கப்பூரின் எதிரி என்று பொருளல்ல என்றும், சர்வதேச விவகாரங்களில் சமநிலையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் கொள்கையையே தங்கள் நாடு பின்பற்றுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

