வவுனியாவில் நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை குறிவைத்து ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவரை பலமற்றவர் ஆக்குவதற்கு, அவருடைய கட்சியே இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

அரசியலமைப்பு பேரவையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விலகிக் கொள்ள வேண்டும் என்பதே இந்த தீர்மானம்.

இந்தத் தீர்மானத்தை கட்சி எடுப்பதற்கு, கட்சிக்கு தார்மீக அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.

ஏனென்றால் இது இலங்கை தமிழ் அரசுக் கட்சியினால் வழங்கப்பட்ட நியமனம் அல்ல.

சிறு கட்சிகளின் பிரதிநிதியாக அவர் அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனவே, தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு, தனித்து இவ்வாறான ஒரு அழுத்தத்தை கொடுக்க முடியாது.

அதற்கு அடிபணிவது பற்றி, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தான் முடிவெடுக்க வேண்டும்.

அவர் அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலக மறுத்தால், அதற்கு எதிராக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை.

அவரை இந்தப் பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என முதலில் வலியுறுத்தியவர், உதய கம்மன்பில .

அவர் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்த கட்சிக்குத் தலைமை தாங்குபவர்.

முன்னர் மஹிந்த ராஜபக் ஷவையும் பின்னர் கோட்டாபய ராஜபக் ஷவையும் தாங்கிப் பிடித்தவர்களில் அவரும் ஒருவர்.

ராஜபக் ஷவினரின் ஆட்சிக்காலத்தில் சிங்கள பௌத்த தேசியவாதம் கூர்மை அடைவதற்கு காரண கர்த்தாக்களில் இவரும் ஒருவராக இருந்தார்.

அவரே, சிறு கட்சிகளின் பிரதிநிதியான சிறிதரன் அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்து வருவதாக குற்றம்சாட்டி, அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அவரது நோக்கில் சிறிதரன் குறிவைக்கப்பட்டதற்கு காரணம் வேறு.

சிறிதரன், தமிழ்த் தேசிய அரசியலில் முக்கியமான ஒருவராக இருப்பவர். இன்றைக்கும் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக உறுதியான கருத்துக்களை வெளியிடுபவர்.

அத்தகையவரை உதய கம்மன்பில குறி வைத்தது ஏன் என்பதை இவ்விடயத்தில் விளக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமானதல்ல.

ஆனால், இலங்கை தமிழ் அரசுக் கட்சி அவரை குறி வைத்திருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன.

வெளிப்படையான காரணம் ஒன்று என்றால், வெளிப்படுத்தப்படாத காரணங்கள் பல இருக்கின்றன.

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராக இருக்கும் சிறிதரன், அண்மைக்காலங்களில் அரசாங்கத் தரப்புடன் இணைந்து வாக்களிப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு சார்பாக வாக்களித்தார் என்பது ஒரு குற்றச்சாட்டு.

அதற்கு முன்னர் பாதுகாப்பு பின்னணி கொண்ட ஒருவர், இழப்பீடுகளுக்கான பணியகத்தின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு ஆதரவளித்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி இராணுவ மயமாக்கலை அவர் ஆதரிக்கிறார் என தமிழ் அரசுக் கட்சி கூறி இருக்கிறது.

அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு பாரதூரமானதே.

எவ்வாறாயினும், தமிழ் அரசுக் கட்சி ஆட்சியில் உள்ள அரசாங்கங்களுக்கு ஆதரவளித்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது.

நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழ் அரசுக் கட்சி முழுமையான ஆதரவு வழங்கியது.

அந்த காலகட்டத்தில் பல சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கும் கூட, தமிழ் அரசுக் கட்சி ஆதரவளித்தது.

அதில் ஒன்று, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாமல் போன, மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஆகும்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதான காரணமாக இருந்தவர்கள் இரா. சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரன் என்பது சொல்லி தெரிய வேண்டிய விடயம் அல்ல.

இந்த ஆதரவு, கட்சியை கணிசமாக சேதப்படுத்தியது.

கட்சிக்குள் கட்டுக்கோப்பு குறைவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்கும், மக்களின் செல்வாக்கை இழப்பதற்கும் அது வழி வகுத்தது.

சிறிதரன் மீதான, இராணுவ மயமாக்கலுக்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டும் பாரதூரமானது.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இராணுவமயமாக்கலை கடுமையாக எதிர்த்து வருபவர்.

பாராளுமன்றத்தில் அவரது உரைகளை எடுத்து பார்த்தால் பெரும்பாலானவற்றில் இராணுவமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்கள் நிறைந்திருப்பதை காணலாம்.

அப்படிப்பட்டவர் ஏன் அரசாங்கத்துடன் இணைந்து இராணுவ மயமாக்கலுக்கு ஆதரவாக வாக்களித்தார் அல்லது ஆதரவளித்தார் என்ற கேள்விகள் இருக்கின்றன.

இது தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், இதற்கு, சிறிதரனிடம் இருந்து, இதுவரை அதிகாரபூர்வமான எந்த பதிலும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை.

அரசியலமைப்பு பேரவையில் அவரது செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்கள் விவாதத்துக்குரியவை.

அவர் ஏன் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்?

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக தேர்தல் காலத்திலும் அதற்கு பின்னரும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அது தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அதுபற்றிய விசாரணைகள் தொடங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட போதும், முறைப்பாட்டாளரிடம் விசாரிக்கப்பட்டதே தவிர, சிறிதரனிடம் வாக்குமூலம் கூடப் பதிவு செய்யப்படவில்லை.

பெருமளவில் சொத்துக்களைச் சேர்த்திருப்பதான, மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்ததான குற்றச்சாட்டுகள் மூலம், சிறிதரனின் அரசியல் எதிர்காலத்தை கெடுக்கின்ற முயற்சிகள் தமிழ் அரசுக் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் முன்னெடுக்கப்படுவது இரகசியமானதல்ல.

தமிழ் அரசுக் கட்சிக்குள் சிறிதரன் பலருக்கு சவால் மிக்கவராக இருக்கிறார்.

கட்சியின் தலைமை பதவியை பெற்றிருக்க வேண்டியவர் அவர்.

கட்சி தலைவர் பதவிக்கு அவர் தெரிவு செய்யப்பட்ட போதும், அவரால் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது.

சுமந்திரனுக்கும் அவருக்கும் இடையில் காணப்படுகின்ற அரசியல் முரண்பாடுகள் தான் அதற்கு காரணம்.

இருவரும் பகிரங்கமாக அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, மறைமுகமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள்.

தமிழ் அரசுக் கட்சியில் தலைமைத்துவ வாக்கெடுப்பில் சுமந்திரன் வெற்றி பெற முடியாமல் போன போதும், அவர் கட்சியை சாதுரியமான வகையில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

பதில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிக் கொண்ட அவர், கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவையும் நெருக்கடிக்குள்ளாக்கினார்.

அவரது மரணத்துக்கு பின்னர், கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானத்தை கொண்டு வந்ததன் மூலம், ஒட்டுமொத்தமாக முழு கட்சியையும் அவர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.

இது சிறிதரனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு.

அவரால் இப்போது கட்சிக்கு முழுமையாக கட்டுப்படாமல் இருக்க முடியவில்லை, அதே நேரம் கட்டுப்படவும் முடியாத இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கிறார்.

சிறிதரன், கட்சியை மீறி கட்சியின் தீர்மானங்களை மீறி இனிமேலும் செயற்பட முனைந்தால், கட்சி ரீதியாக, அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற நிலையே உள்ளது.

அண்மைக் காலத்தில் கட்சியின் தீர்மானத்தை மீறியதாக குற்றம்சாட்டி பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

அதன் ஊடாக அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டது. இது ஒரு முன்னோடி நடவடிக்கை.

சிறிதரனின் அரசியல் பதவியை மாத்திரமன்றி பாராளுமன்ற பதவியையும் குறி வைத்து இப்போதைய நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவர் அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலக மறுத்தால் அவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்க கூடும்.

அவர் பதவி விலகினால் , கட்சிக்குப் பணிந்து போனதாக அர்த்தப்படுத்தப்படும், அது மட்டுமன்றி, தவறை ஏற்றுக் கொண்டதாகவும் அமைந்து விடும்.

அதேவேளை, கட்சிக்கு இணங்க மறுத்தால், அவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கக் கூடும்.

முதல் கட்டமாக அவரிடம் இருந்து பாராளுமன்ற குழு தலைவர் பதவி பறிக்கப்படலாம்.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அவர் ஓரம் கட்டப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இது சிறிதரனை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளும்.

தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் சிறிதரன் முக்கியமானவர், வாக்குகளை பெறுவதற்காக மாத்திரமே அவர் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குக் கிடைத்த சுமார் 63,000 வாக்குகளில் பாதி வாக்குகள், சிறிதரனுக்கு விருப்பு வாக்குகளாக கிடைத்திருந்தன.

எனவே, இன்றைய தமிழ் அரசுக் கட்சியை பொறுத்தவரையில், சிறிதரனை ஒரு வாக்கு சேகரிப்பு பொம்மையாக மாத்திரம் வைத்திருக்கவே அது விரும்புகிறது.

அதற்கு அவர் இணங்கினால் கட்சிக்குள் இருக்கக் கூடிய நிலை இருக்கும்.

இல்லாவிட்டால் வெளியே தள்ளப்படும் சூழல் விரைவில் உருவாகலாம் அல்லது உருவாக்கப்படலாம்.

இது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி, தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு ஆராய்ந்ததாக தெரியவில்லை.

அதன் பிரதான இலக்கு, சிறிதரனை வலுவிழக்க செய்து தனிமைப்படுத்துவது தான்.

அவரை தனிமைப்படுத்துவதில் தமிழ் அரசுக் கட்சியும் கட்சிக்குள் இருக்கின்ற அவரது எதிராளிகளும் கணிசமாக வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால், இது கட்சியை எந்தளவுக்கு பாதிக்கும் – பலவீனப்படுத்தும் என்பதையிட்டுச் சிந்திக்கின்ற நிலை கட்சிக்குள் இருப்பதாகத் தெரியவில்லை.

கபில்

Share.
Leave A Reply