வெனிசுவேலா விவகாரத்தில் அரசாங்கத்துக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் வேறுபட்ட கொள்கை நிலைப்பாடு உள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தலையீடும், அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டதும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகெங்கும் இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால், இன்னொரு நாட்டுக்குள் சென்று, அந்த நாட்டின் தலைவரை சிறை பிடித்துச் செல்வது சாதாரண விடயம் அல்ல.

நாளை இதே நிலை, கியூபாவுக்கு ஏற்படலாம், கொலம்பியாவுக்கு ஏற்படலாம், ஈரானுக்கும் நிகழலாம், அல்லது அமெரிக்காவுடன் முரண்படுகின்ற மற்றொரு நாட்டுக்கும் ஏற்படலாம்.

அதேபோல, அமெரிக்காவின் இந்த முன்னுதாரணத்தை ரஷ்யாவோ சீனாவோ பின்பற்ற முனைந்தால், அது கூட ஆபத்தானது தான்.

ஆக, நவீன யுகத்தில் தலைவர்களை கைப்பற்றி அல்லது சாகடித்து அதிகாரத்தை நிலை நிறுத்துகின்ற போக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் பூகோள அரசியல் ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

ஏனென்றால், இதற்கு பின்னால் உள்ள காரணிகள் மிக மிக விரிவானது.

இது தனியே வெனிசுவேலா ஜனாதிபதியை கைப்பற்றுவது மாத்திரம் அல்ல.

அமெரிக்க சுமத்துகின்ற போதைப்பொருள் குற்றங்கள் அல்லது தீவிரவாதத்துக்கு ஊக்கமளிக்கும் குற்றங்களுக்காக அவரை நீதியின் முன்நிறுத்துவது மட்டுமல்ல.

வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மாத்திரமல்ல.

டொலர் வர்த்தகத்தைக் காப்பாற்றுவது மட்டுமல்ல,

அவை எல்லாவற்றிற்கும் அப்பால், கியூபாவை வீழ்த்துவது, சீனாவின் பொருளாதாரத்தை சிதைப்பது என பரந்துபட்ட நோக்கம் கொண்டது இந்த நடவடிக்கை.

அதைவிட, மீண்டும் அதிகரித்து வருகின்ற இடதுசாரிகளின் செல்வாக்கை வீழ்த்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான ஒரு நகர்வும் கூட.

இலங்கையில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதானது, இடதுசாரி அரசியலில் முக்கியமான ஒரு திருப்பம்.

காலம்காலமாக முதலாளித்துவ அரசியலை முன்னெடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இடதுசாரி அரசியலை முன்னெடுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் போட்டி நிலவி வந்திருக்கிறது.

ஆனால், அது முற்றுமுழுதான முதலாளித்துவத்திற்கும் இடதுசாரித்துவத்துக்கும் இடையிலான போட்டியாக இருந்ததில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஓர் இடதுசாரி கட்சியாக காட்டிக் கொள்ள முற்பட்டாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது முதலாளித்துவ மற்றும் இடதுசாரி கலப்பு முறையிலான கொள்கைகளையே பின்பற்றி வந்திருக்கிறது.

அதன் வழிவந்த கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் கூட அவ்வாறான நிலைப்பாட்டையே கொண்டிருந்தன.

அதனால் தான், ஒரு கட்டத்தில் முதலாளித்துவமும் இடதுசாரித்துவமும் கைகோர்த்துக் கொண்டு ஆட்சி செய்யும் நிலையும் ஏற்பட்டது.

ஆனால், இப்பொழுது இடதுசாரி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஜே.வி.பி.யின் தலைமையில் உருவாகி இருக்கின்ற இந்த அரசாங்கம், தோற்றம் பெற்ற போது அமெரிக்காவுக்கு சவாலானதாக இருக்கும் என்ற முன்னெச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

ஆனால், அதற்கு மாறாக இந்த அரசாங்கம் நடந்து கொண்டது.

அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்தியது, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் ஊடாக அது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு முழு முயற்சி எடுத்துக் கொண்டது.

சீனாவின் தயவில் இயங்கக் கூடும், சீனாவின் சொற்படி நடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட என்.பி.பி. அரசாங்கம், அந்த பாதையில் இருந்து விலகி, சீனாவை எதிரியாக்கி கொள்ளாமல், அதனை எட்டத்தில் வைத்துக் கொண்டு முதலாளித்துவ அரசுகளுடன் இணங்கிப் போகத் தொடங்கியது.

இதனால் இதுவும் ஒரு முதலாளித்துவ அரசு தானா என்ற சந்தேகங்களும் எழுந்தன.

அந்த சந்தேகங்களுக்கு விடை இப்போது கிடைத்திருக்கிறது.

வெனிசுவேலா விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இருந்த போது, முதலில் அந்த அமைதியை உடைத்தது ஜே.வி.பி.

ஜே.வி.பி.யின் நிறைவேற்று குழுவினால் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது, அது அமெரிக்காவை கடுமையாக கண்டிக்கும் அறிக்கை.

அமெரிக்காவின் நடவடிக்கையை, வெனிசுவேலாவின் மீதான ஆக்கிரமிப்பாக அது அடையாளப்படுத்தியது.

ஒரு நாட்டின் இறையாண்மையை மீறுகின்ற உரிமை, வேறு எந்த நாட்டுக்கும் கிடையாது என அறுதியிட்டுக் கூறியுள்ளது.

நவீன சமூகமும் ஆட்சியும் நாகரீகமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு பாடம் எடுத்திருக்கிறது.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மை என்பன உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை என்றும், இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்புகள், படையெடுப்புகளை நியாயப் படுத்த முடியாது என்றும் ஜே.வி.பி. கூறியிருக்கிறது.

இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல் என்றும் இதனை கண்டிப்பதாகவும், வெனிசுவேலாவுடன் தாங்கள் இணைந்து நிற்பதாகவும் கூறியிருந்தது.

விஜித்த ஹேரத்

இந்த அறிக்கை வெளியான பின்னர், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் அதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் வித்தியாசமானது.

இந்த விவகாரத்தில் ஐ.நா.வின் தலையீட்டை அரசாங்கம் கோரியிருப்பதாகவும், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஐ.நா. பிரகடனங்கள் மீறப்படுவதை தடுப்பதற்கு, செயற்படுமாறு ஐ.நாவிடம் கோரியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஜே.வி.பி.யின் அறிக்கை தொடர்பாக கேட்டபோது அரசியல் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டிருக்கலாம், அது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்க முடியாது என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தளவுக்கும் ஜே.வி.பியின் பிரசார செயலாளர் அவர்.

அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் ஜனாதிபதி தான் இன்னமும் ஜே.வி.பி.யின் தலைவர்.

விஜித்த ஹேரத்தின் இந்தக் கருத்து வெளியான பின்னர், அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், அமெரிக்கா பற்றியோ அல்லது நிகோலஸ் மதுரோ பற்றியோ எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவின் நடவடிக்கைகளை அரசாங்கம் கண்டிக்கவும் இல்லை, நிகோலஸ் மதுரோவுக்காக அரசாங்கம் வாதாடவும் இல்லை.

அந்த இரண்டு சொற்களும் உள்ளடக்காமலேயே வெளிவிவகார அமைச்சினால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அது வெனிசுவேலா நிலைமைகள் குறித்து அரசாங்கம் கவலை அடைவதாகவும் நிலைமையை கண்காணிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

சர்வதேச சட்டத்தின் கொள்கைகளையும் ஐ.நா. சாசனத்தையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும், பதற்றத்தை பேச்சுக்களின் மூலம் குறைத்து இணக்கம் காணப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதற்கு அப்பால் அரசாங்கம் செல்லவில்லை. இதன் ஊடாக அரசாங்கம் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது வெளிப்படையாகியிருக்கிறது.

அதுபோல, நிகோலஸ் மதுரோவுக்காக வாதாடுவதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை.

அமெரிக்காவை குற்றம்சாட்டி, வெனிசுவேலாவுக்காக வக்காலத்து வாங்கி, ட்ரம்பின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வதற்கு, அவரை விரோதித்துக் கொள்வதற்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரும்பவில்லை.

அதற்கு பல காரணங்களை கூறலாம்.

இலங்கை ட்ரம்பின் வரி அச்சுறுத்தலில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை.

இலங்கைக்கு விதிக்கப்பட்ட 44 சதவீத வரி 20 வீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது, ஆனால், அது இன்னமும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.

இதுதொடர்பான உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்படவில்லை. பேச்சுக்களே நீடிக்கின்றன.

ட்ரம்பை பகைத்துக் கொண்டால் மீண்டும் வரியை அதிகரிக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது.

அது தவிர நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா போன்ற தரப்புகளின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை பகைத்துக் கொள்வதன் ஊடாக நிலைமையை மோசமாக்கிக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் அமெரிக்காவுடன் தனிப்பட்ட ரீதியில் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.

அதனை கட்டிக் காப்பாற்ற முற்படுகிறது. அதற்கு ஏற்படக் கூடிய பாதிப்பு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஆபத்தாக வந்து விடக்கூடாது என்ற முன்னுணர்வும் அதனிடம் இருக்கிறது.

இதனால் இந்த விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேறு ஜே.வி.பி. வேறு என்ற வகையில், கதைவிட தொடங்கியிருக்கிறது.

இதன் ஊடாக அது நிலைமையை சமப்படுத்தி கொள்ள முற்படுகிறது.

இதனை அமெரிக்கா எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறது?

ட்ரம்ப் இந்த அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வாரா? இல்லையா?

ஆனால், இது ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தாலும், ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கைகள் மாறவில்லை என்பதே அது.

ஜே.வி.பி. தான் அடைய நினைத்த இலக்கை எட்டுவதற்காக மாறுவேடம் போட்டிருக்கிறது.

அது அடிப்படை இடதுசாரி கோட்பாட்டில் இருந்து விலகத் தயாராக இல்லை என்று காட்டி இருக்கிறது.

வெனிசுவேலாவுக்காக மட்டும் அது வரிந்து கட்டிக் கொள்ளவில்லை.

அமெரிக்காவை எதிர்ப்பதில் அது உறுதியாக இருப்பதாக காட்டியிருக்கிறது.

இது தனியே அமெரிக்காவுக்கு மட்டும் பொருந்துமா அல்லது இந்தியாவுக்கும் பொருந்துமா?

என்.கண்ணன்

Share.
Leave A Reply