இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானத் திட்டத்திற்கு (AMCA) வலுசேர்க்கும் வகையில், பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) ஒரு முக்கிய திட்டத்தை வௌியிட்டுள்ளது.
இந்தியாவை வெறும் வாடிக்கையாளராக மட்டும் பார்க்காமல், தனது “சொந்த சந்தையாக” (Home Market) கருதி, விமான என்ஜின்களை இந்தியாவிலேயே வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்ய ரோல்ஸ் ராய்ஸ் முன்வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் என்ஜினுக்கான அறிவுசார் சொத்துரிமையை (Intellectual Property) இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள அந்நிறுவனம் சம்மதித்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் பிற நாடுகளின் தடைகளுக்கு அஞ்சாமல் இந்தியா தனது விமானங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
ரோல்ஸ் ராய்ஸின் இந்த அதிரடி முடிவால், அமெரிக்காவின் ஜி.இ (GE) மற்றும் பிரான்ஸின் சப்ரான் (Safran) போன்ற பிற நிறுவனங்களும் இந்தியாவிற்கு கூடுதல் தொழில்நுட்பங்களை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸுக்குப் போட்டியாக, ரஃபேல் (Rafale) விமானங்களைத் தயாரிக்கும் பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், இந்தியாவின் டாடா (Tata) குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் விமான உடற்பகுதிகளைத் (Fuselage) தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் என்ஜின் அசெம்பிளி மற்றும் பராமரிப்பு நிலையங்களை அமைக்கவும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே கையெழுத்தான கட்டற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (Free Trade Agreement) ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே இந்த பாதுகாப்புத் துறை கூட்டாண்மை பார்க்கப்படுகிறது.
ரஷ்ய-உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள ஆயுத விநியோகத் தட்டுப்பாடு மற்றும் இந்திய விமானப்படையின் பற்றாக்குறையை போக்க இந்த நடவடிக்கை உதவும். இது இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் நீண்டகால தற்சார்பு நிலையை உருவாக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தக் கூட்டணி வெற்றிபெற்றால், இந்திய விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய இரண்டிற்குமே தேவையான என்ஜின் தேவைகளை இந்தியாவிலேயே பூர்த்தி செய்ய வழிவகை ஏற்படும்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உருவாக்க முன்வந்துள்ள இந்த என்ஜின் ‘கோர்’ (Engine Core), வெறும் போர் விமானங்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கான என்ஜின்களாகவும், மின்சார உந்துவிசை (Electric Propulsion) தொழில்நுட்பத்திற்கும் மாற்றியமைக்கப்படலாம்.
இது ஒரே தொழில்நுட்பத்தை வைத்து வான்வழி மற்றும் கடல்வழித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என அறிவிக்கப்படுகிறது.
இந்திய விமானப்படைக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அளவு 42 போர் விமானப் படைப்பிரிவுகள் (Squadrons). ஆனால் தற்போது 31 படைப்பிரிவுகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
அதாவது திட்டமிட்டதை விட சுமார் 200 போர் விமானங்கள் குறைவாக உள்ளன. இந்த இடைவெளியை நிரப்ப AMCA போன்ற உள்நாட்டுத் திட்டங்கள் மிக விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

