தித்வா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்காக இந்தியா வழங்கியிருக்கின்ற 350 மில்லியன் டொலர் கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டொலர் நன்கொடை என்பன இந்திய ரூபாவினாலேயே இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக இந்திய தகவல் மூலங்களிலிருந்து நம்பகரமாக தெரியவருகிறது.
அதுமட்டுமன்றி இந்த உதவிகளில் இலங்கை எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது என்பது தொடர்பாக தற்போது இலங்கை இந்திய தரப்புகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்று வருகின்றன.
தித்வா புயலினால் இலங்கை பாரிய அளவில் பாதிப்புகளை எதிர்கொண்டது. இதன்போது உடனடியாக இந்தியா பல்வேறு உதவிகளை செய்திருந்தது. இந்திய கப்பல்கள், ஹெலிகொப்டர்கள் மூலம் 11,000 தொன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
20 தொன் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதேபோன்று இந்திய மருத்துவர்கள் இலங்கையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பெய்லி பாலங்களும் இலங்ரகக்கு வழுழங்கப்பட்டன. இந்திய மீட்புப் பணியாளர்களும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இலங்கைக்கு அவசர விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு விவகார அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் மீள்கட்டுமான உதவியை அறிவித்திருந்தார்.
அதில் 350 மில்லியன் டொலர் இலகு கடன் உதவியாகவும் 100 மில்லியன் டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த 350 மில்லியன் டாலர் கடன் உதவியும் 100 மில்லியன் டொலர் நன்கொடையும் இந்திய ரூபாவாகவே இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் இலங்கை இந்த கடனை மீளச் செலுத்தும் போது டொலர்களில் செலுத்த வேண்டியதில்லை என்றும் அதனை இந்திய ரூபாவினாலேயே செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலுஞம் இதனால் டொலர் கையிருப்பில் எந்த தாக்கம் ஏற்ஙபடாது என்றும் தெரிவிகன்கனப்படுகிறது.
அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் இந்தியா இலங்கைக்கு கடன்களை வழங்காமல் முதலீட்டு உதவிகளை வழங்குவதற்கே முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்து வந்தது. எனினும் தற்போது இந்த தித்வா புயல் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை இலங்கை எதிர்கொண்டிருப்பதால் இந்தக் கடன் உதவியை வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்ததாகவும் இந்திய தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தற்போது இந்த 350 மில்லியன் டொலர் கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டொலர் நன்கொடையை வைத்து எவ்வாறான வேலைத்திட்டங்களை இலங்கை மேற்கொள்ள உள்ளது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது ரயில்வே துறையை மீண்டும் கட்டியெழுப்புதல், வீதிகளை அமைத்தல், வீடுகளை மீள நிர்மாணித்தல், அரசு கட்டடங்களை மீள நிர்மாணித்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களில் இந்த நிதியை உபயோகிப்பது தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக இரண்டு தரப்பினர்களுக்கும் இடையிலாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் இலங்கை உயர்மட்ட பிரதிநிதிகள் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் எவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு இந்த நிதியை செலவழிப்பது என்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்தியாவின் உதவியின் கீழ் செய்யப்படவுள்ள ஒரு சில மீள்கட்டுமான வேலைத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் இந்திய தரப்பில் இருந்து வரும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது இவ்வாறிருக்க இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான தீர்மானத்தை இந்தியா இன்னும் கைவிடவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா இது இலங்கைக்கு மிகவும் பயன்தரும் ஒரு திட்டமாக அமையும் என்று தொடர்ந்து கருதுகிறது. ஆனால் இலங்கை தரப்பில் இது தொடர்பாக விருப்பமற்ற ஒரு தன்மை வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே இந்த செயல்பாடு தற்போது தாமதமடைந்து வருகிறது. இது தொடர்பாக ஆரம்பத்தில் சாத்தியவள ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் தற்போது இந்த செயல்பாடு ஒரு இழுபறி நிலையிலேயே காணப்படுகிறது. எனினும் இந்தியா இந்த திட்டத்தை இன்னும் கைவிடவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மாகாண சபை தேர்தலை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில் இது இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள விடயம் என்பதால் இலங்கை அரசாங்கமே இது குறித்த முடிவை எடுக்கவேண்டும் என்று இந்தியா கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள், மலையக அரசியல் பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.
அது தொடர்பாக அந்த சந்திப்புகளில் ஈடுபடுகின்ற தரப்பினர் போதுமான கருத்துக்களை வெளியே ஊடகங்களுக்கு வழங்குவதால் தமது தரப்பில் அது தொடர்பாக கூறுவதற்கு வேறு பெரிதாக எதுவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா தொடர்ந்து இந்த மாகாண சபை தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இந்தியா இந்த மாகாண சபை தேர்தல் விடயத்தில் இலங்கையே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொபட் அன்டனி

