கிளிநொச்சி முரசுமோட்டை ஏ 35 வீதியில் பஸ் ஒன்றுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இதேவேளை காருக்குள் நெரிபட்ட நிலையில் இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






