– தோல்வியடைந்த அண்ணா… வெற்றிபெற்ற கருணாநிதி!
1962-ம் ஆண்டு. நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியில்கூட தி.மு.க வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதில் முதல்வர் காமராஜர் முனைப்பாக இருந்தார்.
ஆகவே, முந்தைய தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற 15 தொகுதிகளிலும் செல்வாக்குமிக்க வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி களமிறக்கியது.
அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரத்தில், காங்கிரஸ் வேட்பாளராக நடேச முதலியாரை நிறுத்தினார் காமராஜர்.
நடேச முதலியார், ஒரு பெரிய பஸ் கம்பெனியின் அதிபர். முதல்வர் காமராஜர் மிகவும் எளிமையானவர் என்றாலும், பெரும் செல்வந்தர்களால் சூழப்பட்ட ஒரு கட்சியாகத்தான் காங்கிரஸ் இருந்தது.
அன்றைக்கு, தமிழகத்தில் பேருந்து சேவைகள் தனியார் வசம் இருந்தன. பேருந்து நிறுவன அதிபர்கள் அனைவரும் காங்கிரஸின் ஆதரவாளர்களாக இருந்தனர்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்ட போது, தமிழகம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகளை குடியாத்தம் தொகுதிக்கு அனுப்பிவைத்தார்கள் பஸ் அதிபர்கள்.
அந்தத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த காமராஜர் ஆட்சியில், ‘பேருந்துப் போக்குவரத்தைத் தேசியமயமாக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் எழுப்பின.
இந்த விவகாரம் குறித்து தி.மு.க உறுப்பினர் மு.கருணாநிதி சட்டமன்றத்தில் பேசினார். ‘பேருந்து போக்குவரத்தைத் தேசியமயமாக்க வேண்டும் என்று முற்போக்குக் கட்சிகள் வலியுறுத்திவருகிறோம்.
ஆனால், அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பஸ் முதலாளிகள் இல்லையென்றால் காங்கிரஸ் இல்லை. சொல்லப்போனால், காங்கிரஸின் உயிரே பஸ் முதலாளிகளின் கையில்தான் இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.
மயில் ராவணன் கதை!
ராமாயண நாட்டார் கதை ஒன்றுடன் தன் பேச்சைத் தொடர்ந்தார் கருணாநிதி. ‘மயில் ராவணனின் உயிர் எங்கே இருக்கிறது என்று அனுமான் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், அது ஏதோ பத்து காதத்துக்கு அப்பாலுள்ள மலையில் ஒரு தடாகம் இருக்கிறது…
அதையும் தாண்டிப் போனால் ஒரு சுரங்கம் இருக்கிறது… அதற்குள் ஒரு குகை இருக்கிறது… அதன் மத்தியில் இருக்கும் ஒரு டப்பாவில் ஒரு வண்டு இருக்கும்… அந்த வண்டைப் பிடித்து நசுக்கினால்தான் மயில் ராவணனைக் கொல்ல முடியும்.
அதுபோல, பஸ் தொழிலை தேசியமயமாக்கிவிட்டால், மயில் ராவணனின் நிலை காங்கிரஸுக்கு ஏற்படும்’ என்றார் கருணாநிதி.
<உடனே அமைச்சர் சி.சுப்பிரமணியம் எழுந்து, ‘அப்படியென்றால், பஸ் தொழிலைத் தேசியமயமாக்க வேண்டும் என்று சொல்வது, காங்கிரஸ் கட்சியை ஒழிக்கத்தானா?’ என்று கேட்டார்.
அதற்கு, ‘நாட்டின் நன்மைக்காகத்தான் பஸ் தொழிலை தேசியமயமாக்க வேண்டும் என்று சொல்கிறோம். பஸ் தொழில் தேசியமயமாக்கப்பட்டுவிட்டால், ஒழிக்கப்பட வேண்டிய எல்லாம் தானாகவே ஒழிந்துவிடும்’ என்றார் கருணாநிதி.
ராமநாதபுரம் ராஜா, கபிஸ்தலம் மூப்பனார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், வலிவலம் தேசிகர் உட்பட பேருந்து நிறுவனங்களின் அதிபர்கள், மிட்டா மிராசுகள், ஜமீன்தார்கள் ஆகியோர் காங்கிரஸ் கட்சியைக் காக்கும் படையினராக விளங்கினார்கள்.
1962 தேர்தலில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் பலர் ஜமீன்தார் களாகவும், நிலப்பிரபுக்களாகவும், தொழிலதிபர்களாகவும் இருந்தனர்.
காமராஜர் அதிர்ந்தார்!
தஞ்சாவூரில் போட்டியிட்ட மு.கருணாநிதிக்கு எதிராக, பெரும் செல்வந்தரான ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் நிறுத்தப்பட்டார்.
இவர், காமராஜர் ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர்.
1946, 1957 ஆகிய தேர்தல்களில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற இவர், ராவ் சாஹிப் பட்டம் பெற்றவர்.
ஆனால், அன்றைய தேதியில் மு.கருணாநிதி ஒரு சாமானியர். கடைசியில், காமராஜரின் வியூகம் வெற்றிபெறவில்லை. தேர்தல் முடிவுகள் காமராஜருக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தன. 50 தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெற்றது.
தி.மு.க-வினருக்கோ, இரண்டாவது தேர்தலிலேயே 50 தொகுதிகளைப் பிடித்துவிட்டோம் என்பதில் பெருமகிழ்ச்சி. அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத சூழலில் அவர்கள் இருந்தனர்.
காரணம், தி.மு.க-வின் படைத் தலைவரான அண்ணா, காஞ்சியில் தோல்வியைத் தழுவியிருந்தார்.
தமிழகம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் காஞ்சிபுரத்துக்குச் சென்று, கிடைத்த உணவைச் சாப்பிட்டு, பிளாட்ஃபாரத்தில் படுத்து உறங்கி அண்ணாவுக்காகப் பிரசாரம் செய்தனர்.
அண்ணாவுக்கு ஆதரவாக ராஜாஜி பிரசாரம் செய்தார். ஆனால், அண்ணா தோற்றுப்போனார். அண்ணாவின் தோல்வியைக் கண்டு தி.மு.க-வினர் கண்ணீர் வடித்தனர்.
அந்த நேரத்தில், ‘உள்ளம் உடைய இடம் கொடுக்கக் கூடாது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கழகக் காரியமாற்றப் புறப்படுங்கள்.
மூச்செறிவதை நிறுத்திக்கொண்டு முன்னினும் அதிக ஆர்வம் காட்டிப் பணிபுரியுங்கள்’ என்று தி.மு.க-வினருக்கு வேண்டுகோள் விடுத்தார் அண்ணா
.தேர்தல் முடிவுகளில் அனைவருக்கும் ஓர் ஆச்சர்யம். 1957 தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற 15 தொகுதிகளில், ஒரே ஒரு தொகுதியைத் தவிர்த்து மற்ற 14 தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் தோற்றனர். ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றார்.
அவர், மு.கருணாநிதி. திருவல்லிக்கேணியில் இரா.நெடுஞ்செழியன், மயிலாப்பூரில் இராம.அரங்கண்ணல், சைதாப்பேட்டையில் முனு ஆதி, தி.நகரில் காஞ்சி மணிமொழியார்,
தேனியில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வெற்றிபெற்றனர். சென்னை பேசின்பிரிட்ஜ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.என்.அனந்தநாயகியிடம் தோல்வியடைந்தார்
தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான என்.வி.நடராஜன். எழும்பூரில் காங்கிரஸ் வேட்பாளரைவிட 1,617 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவினார் க.அன்பழகன். பெரம்பூரில் சத்தியவாணிமுத்து தோற்றார்.
கம்யூனிஸ்ட் வந்திருந்தால்..!
மொத்தம் 206 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 138 இடங்களில் ஜெயித்தது. தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் இந்த முறை அதிகரித்தது.
1957-ம் ஆண்டு 14 லட்சம் வாக்குகளைப் பெற்ற தி.மு.க., இந்த முறை 27 லட்சம் வாக்குகளை அள்ளியது. இந்தத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் கொண்டுவர அண்ணா முயற்சி எடுத்தார்.
ஆனால், தி.மு.க கூட்டணியில் சுதந்திரா கட்சி இருந்ததால், அதில் சேருவதற்கு கம்யூனிஸ்ட் முன்வரவில்லை… வந்திருந்தால், காங்கிரஸுக்கு இன்னும் சேதாரம் ஏற்பட்டிருக்கும்.
சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றது. திருக்கோவிலூர் மக்களவைத் தொகுதியில் எல்.இளையபெருமாள், திருச்செந்தூரில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, நாகர்கோவிலில் நேசமணி உட்பட 31 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.
தென்சென்னையில் நாஞ்சில் மனோகரன், பெரம்பலூரில் இரா.செழியன் உட்பட தி.மு.க வேட்பாளர்கள் ஏழு பேர் மக்களவைக்குத் தேர்வுசெய்யப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனந்த நம்பியார் திருச்சியிலும், ஆர்.உமாநாத் புதுக்கோட்டையிலும் வென்றனர். அருப்புக்கோட்டையில் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிபெற்றார்.
மக்களவையில் 361 எம்.பி-க்களுடன் நேரு தலைமையில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தது. மாநில அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், இந்த முறை பொள்ளாச்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து, மத்தியில் நேரு அமைச்சரவையில் இடம்பெற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 29 இடங்களையும், ராஜாஜியின் சுதந்திரா கட்சி 18 இடங்களையும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 12 இடங்களையும் பெற்றன. கடந்த தேர்தலில் வெறும் நான்கு இடங்களைப் பிடித்த இந்துத்துவா கட்சியான ஜன சங்கம், இந்த முறை 14 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.
கைவிடப்பட்ட திராவிட நாடு!
சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அண்ணாவை, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்து டெல்லிக்கு அனுப்பினார்கள் தி.மு.க-வினர்.
மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப்பேச்சு, தேசிய அளவில் கவனம் பெற்றது. “இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்.
அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள், மற்றவர்களுக்குப் பகையாளிகள் அல்ல. நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன். என்னை, `திராவிடன்’ என்று அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ நான் எதிரானவன் அல்ல.
ஒவ்வொரு மனிதனும் எல்லா வகையிலும் மதிக்கப்பட வேண்டியவனே. திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று நான் கூறிக்கொள்ளும்போது, எங்களின் திராவிட நாகரிகம் நீண்ட வரலாற்றை, நீடித்த பெருமையை, இந்திய அமைப்பில் தனிப்பட்ட பங்கைப் பெற்றிருக்கிறது.
தன்னாட்சி பெறுவதற்கான உரிமை அதற்கு இருக்கிறது’’ என்றார் அண்ணா.
திராவிட நாடு கோரிக்கையை தி.மு.க தீவிரமாக எழுப்பியது. இந்த நிலையில், 1963-ம் ஆண்டு ‘பிரிவினைத் தடைச் சட்டத்தை’ நேரு அரசு கொண்டுவந்தது.
அதைவைத்து தி.மு.க-வை காங்கிரஸ் அரசு தடைசெய்யக்கூடும் என்ற அச்சம் தி.மு.க-வுக்கு ஏற்பட்டது. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தார் அண்ணா.
தீ பரவியது!
அந்தக் காலகட்டத்தில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மெல்ல சரியத் தொடங்கியது.
நேருவிடம் காமராஜர் ஒரு யோசனையை முன்வைத்தார். ‘முதல்வர், அமைச்சர் பதவிகளைக் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துவிட்டு, கட்சிப் பணி ஆற்ற வேண்டும். அப்போதுதான், காங்கிரஸைக் காப்பாற்ற முடியும்’ என்பதுதான் காமராஜரின் ஆலோசனை (கே பிளான்). அதைத் தொடர்ந்து, காமராஜர் உட்பட ஆறு முதல்வர்களும், லால் பகதூர் சாஸ்திரி உட்பட ஆறு மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
சென்னை மாகாண முதல்வராகப் பதவியேற்றார் பக்தவத்சலம். அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றார் காமராஜர்.
அந்தச் சமயத்தில்தான், இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. சாலை மறியல், ஆர்ப்பாட்டம், பெயர்ப் பலகைகளில் இந்தி அழிப்பு, தீக்குளிப்பு எனப் போர்க்களமாக தமிழகம் காட்சியளித்தது. தமிழகம் முழுவதும் தீ பரவிய அந்தக் காலகட்டம் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்!
(இன்னும்அறிவோம்)
சட்டமன்றத்தில் ஒலித்த திராவிட குரல்கள்! – தமிழகத் தேர்தல் வரலாறு – (பகுதி-6)
