ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்த பின்னர், எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் சுமார் நான்கு அரைப் பரப்பு காணியை சுவீகரிக்கும் அறிவித்தலை நில அளவைத் திணைக்களம் விடுத்துள்ளது. இதற்காக, யாழ் ஊர்காவல்துறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட எழுவைதீவு இறங்குறைக்கு அருகாமையில் உள்ள கடற்படை முகாம் அமைந்துள்ள தனியார் காணியை சுவீகரிக்க, காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் காணி உரிமையாளர்களில் ஒருவரான தாய் ஒருவர் கருத்து தெரிவித்தார்:
“எமது காணியை 1990ஆம் ஆண்டின் பின்னர் கடற்படையினர் முகாம் அமைத்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதாக, இதனால் எமது பூர்வீக காணியை இழந்து வாழ்ந்து வருகிறோம். தற்போது கடற்படையினர் பயன்படுத்தி வரும் காணியில் சிறிய வீடு ஒன்றை நாம் ஏற்கனவே அமைத்து வாழ்ந்து வந்த நிலையில், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எமது சொந்த வீட்டிற்கு திரும்ப முடியாமல் வாழ்கிறோம்.
எனது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், மகனும் மனநல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர்களை பராமரித்து வருகிறேன். எனது காணியின் ஒரு பகுதியை மீண்டும் பெற்றுத் தர வேண்டும். பல காலமாக பல அரச அதிகாரிகளிடம் என் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, கடற்படையினரிடம் இருந்து காணியை விடுவித்து தருமாறு கோரிக்கை முன்வைத்தேன், ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
எனது பூர்வீக நிலத்தை கடற்படையினருக்கு ஒப்படைக்க தயார் இல்லை. எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, யாழ் வரும் ஜனாதிபதி என் காணியை எனக்கே மீள அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

