இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற இளம்பெண், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டாரால் இழைக்கப்பட்ட கொடுமைகளால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருடன் பட்டுலுக்குத் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது போதுமான வரதட்சணை வழங்கப்பட்ட நிலையிலும், ரோகித் மற்றும் அவரது குடும்பத்தினர் பட்டுலிடம் தொடர்ந்து கூடுதல் பணம் மற்றும் பொருட்கள் கேட்டு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளனர். இந்த வரதட்சணைக் கொடுமையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பட்டுல், நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
பொலிஸாரின் நடவடிக்கை: தகவலறிந்து வந்த பொலிஸார், பட்டுலின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், பட்டுலின் மாமியார் சந்திரவதி தேவியைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவர் ரோகித் உள்ளிட்ட மேலும் மூவரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

