ஜனவரி 3 ஆம் திகதி அதிகாலை, வெனிசுவேலா தலைநகர் காரகாஸில் அமெரிக்கச் சிறப்புப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதல், அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததில் முடிந்தது.
இது ஒரு சாதாரண இராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், இதன் பின்னால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா வகுத்து வந்த ஒரு மாபெரும் புவிசார் அரசியல் வியூகம் மறைந்துள்ளது.
ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் காலத்து ஆலோசகர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த வியூகம், 21ஆம் நூற்றாண்டின் உலகளாவிய போட்டியில் மிக முக்கியமான பிராந்தியங்கள் மீது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
மதுரோவின் கைது மற்றும் அவரை நியூயோர்க்கிற்கு நாடு கடத்திய செயல், உலக அரங்கில் வௌ;வேறு விதமாக விளக்கப்படுகிறது. ஒரு தரப்பினர் இதனை ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு இடையிலான தார்மீகப் போராட்டம் என்று அழைக்கிறார்கள்.
மற்றொரு தரப்பினர், அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறி ஒரு நாட்டின் இறையாண்மையைத் தாக்கியுள்ளதாகக் கண்டனம் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர், இது வெனிசுவேலாவின் அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்கான பொருளாதார நோக்கம் கொண்ட நடவடிக்கை மட்டுமே என்று சுருக்கிக் கூறுகின்றனர்.
இருப்பினும், இந்த விளக்கங்கள் அனைத்தும் ஒரு பெரிய படத்தின் சிறிய பகுதிகள் மட்டுமேயாகும். இந்த நடவடிக்கையின் உண்மையான மூலோபாய காரணத்தை விளக்குவதற்கு, 1990 களின் பிற்பகுதியிலிருந்து அமெரிக்கா பின்பற்றி வரும் ‘ பெரும் வியூகத்தை’ (புசயனெ ளுவசயவநபல) உற்று நோக்க வேண்டும்.
பெரும் வியூகம்: ஒரு நீண்ட காலத் திட்டம்
அமெரிக்கக் கொள்கை நடைமுறையில், எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் தனித்து எடுக்கப்படுவதில்லை. 2003 ஆம் ஆண்டு ஈராக் போர் உட்பட அனைத்து முக்கியத் தலையீடுகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டவையாகும்.
இவை ஜனாதிபதிகள் மாறினாலும், இராணுவத் திட்டமிடல் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகள் மூலம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ‘பெரும் வியூகம்’ என்பது ஒரு சதுரங்க விளையாட்டைப் போன்றது. ஒவ்வொரு நகர்வும் உடனடியாக வெற்றியைத் தராவிட்டாலும், பல தசாப்தங்களாக விளையாடி, முக்கிய இடங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே இதன் நோக்கம்.
பென்டகனின் நெட் அசஸ்மென்ட் அலுவலகத்தின் நீண்டகால இயக்குநராக இருந்த எண்ட்ரூ மார்ஷல் கூறியது போல, இது ஒரு பொறுமையான போட்டி. இதன் முடிவுகள் பல ஆண்டுகள் கழித்தே முழுமையாகப் புரியும்.
பனிப்போருக்குப் பிறகு, 1992 ஆம் ஆண்டில் கசிந்த அமெரிக்க பாதுகாப்பு திட்ட வழிகாட்டுதல் ஆவணம், அமெரிக்காவிற்கு நிகரான ஒரு புதிய சக்தி உருவாவதைத் தடுப்பதில் தீவிரமாக இருந்தது. குறிப்பாக, உலகின் எரிசக்தி மையமான பாரசீக வளைகுடாப் பகுதியை அமெரிக்கா ஒரு ‘முக்கியப் பிராந்தியமாக’ கருதியது.
ஈராக் ஜனாதிபதி சதாம் உசைன் இந்தப் பிராந்தியத்தின் மையப் புள்ளியாக இருந்தார். அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள், ஈராக்கில் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்று 1990 களிலேயே வலியுறுத்தி இருந்தனர்.
2003 ஆம் ஆண்டில் போர் தொடங்கியபோது, அதற்கு ‘ஜனநாயகம்’ மற்றும் ‘பேரழிவு ஆயுதங்கள்’ போன்ற காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், பென்டகனின் உட்புற விவாதங்களில், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நீண்டகாலப் பிடியை உறுதிப்படுத்துவதே முதன்மை நோக்கமாக இருந்தது.
வெனிசுவேலா: மேற்கத்திய அரைக்கோளத்தின் ஈராக்
ஈராக் போர் குறித்த புரிதல், தற்போது வெனிசுவேலாவில் டிரம்பின் நடவடிக்கைகளை விளக்குவதற்கு மிகவும் உதவுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு மற்றும் தங்கம் போன்ற கனிம வளங்களைக் கொண்ட வெனிசுவேலா, மேற்கு அரைக்கோளத்தில் ஈராக் வகித்த அதே மூலோபாய இடத்தைப் பெற்றுள்ளது.

ஹியூகோ சாவேஸ்
1990களின் இறுதியில் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெனிசுவேலா வாஷிங்டனிடம் இருந்து விலகி, ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டது. இதற்குப் பதிலடியாக, புஷ், ஒபாமா, டிரம்ப் (முதல் முறை) மற்றும் பைடன் என அடுத்தடுத்த அமெரிக்க ஆட்சிகள் வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றன.
2001 ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், ‘வெனிசுவேலா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளை நாம் எப்போதும் கவனித்து வர வேண்டும், அது நமது வியூகத்தில் எப்படிப் பொருந்துகிறது என்று பார்க்க வேண்டும்’ என்று ஒரு குறிப்பில் தெரிவித்திருந்தார்.
அதாவது, வெனிசுவேலா ஒரு அரசியல் சிக்கலாகப் பார்க்கப்படவில்லை, மாறாக ஒரு ‘மூலோபாய எரிசக்தி சொத்தாக’ மட்டுமே பார்க்கப்பட்டது.
சீனாவுடனான போட்டி மற்றும் 2026 நடவடிக்கை
2010 ஆம் ஆண்டுக்கு பிறகு, வெனிசுவேலாவின் முக்கியத்துவம் அமெரிக்கா-சீனா இடையிலான போட்டிக்கு மாறியது.
சீனா, வெனிசுவேலாவுடன் பெரும் நிதி மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களைச் செய்து, அமெரிக்காவின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்கத் தனது விநியோகத்தைப் பன்முகப்படுத்த முயன்றது.
இது அமெரிக்காவிற்குத் தனது சொந்த பிராந்தியத்திலேயே அச்சுறுத்தலாகத் தெரிந்தது. 2017 மற்றும் 2025 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணங்களில், அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக உள்ள பிற நாடுகள் இந்த அரைக்கோளத்தில் கால் பதிப்பதைத் தடுப்போம் என்று எச்சரிக்கப்பட்டது.
‘மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை மற்ற நாடுகள் கட்டுப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்’ என்ற வரிகள், கடந்த ஜனவரி 3 ஆம் திகதி வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை இலக்கு வைத்து நடந்த இராணுவ நடவடிக்கை முன்னோடியாக அமைந்தன.
இன்று எண்ணெய் வளம் 1990களில் இருந்தது போல முதன்மையாக இல்லாவிட்டாலும், போர், தொழில்துறை உற்பத்தி மற்றும் சர்வதேச நாணயத்தின் மதிப்பைத் தீர்மானிப்பதில் அது இன்னும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வெனிசுவேலா, சவுதி அரேபியா, ஈரான், கனடா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய ஏழு நாடுகளில் தான் உலகின் பெரும் பகுதி எண்ணெய் உள்ளது.
வெனிசுவேலாவில் தனக்குச் சாதகமான ஒரு ஆட்சியை நிறுவுவதன் மூலம், உலகின் ஏழு முக்கிய எரிசக்தி மையங்களில் ஆறில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த வாஷிங்டன் முயல்கிறது. இது சீனாவின் நீண்டகால எரிசக்தித் தேவையைப் பலவீனப்படுத்தும் ஒரு மூலோபாய நகர்வாகும்
வெனிசுவேலாவில் நடந்த இந்த ஆட்சி மாற்ற முயற்சி என்பது, டிரம்பின் தன்னிச்சையான முடிவு அல்ல. இது பல தசாப்தங்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு நீண்ட கால வியூகத்தின் ஒரு பகுதியாகும்.
மாறிவரும் அரசியல் பேச்சுக்களுக்கு அடியில், ‘முக்கியப் பிராந்தியங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்’ என்ற நிலையான எண்ணம் அமெரிக்கத் திட்டமிடலாளர்களிடம் உள்ளது. சீனா நீண்ட காலத் திட்டங்களை வகுப்பதில் வல்லது என்று சொல்லப்பட்டாலும், 1990-களின் இறுதியிலிருந்து அமெரிக்காவின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால், வாஷிங்டனும் மிகத் தெளிவான, நீண்ட கால மூலோபாய பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது.
(லியோ நிரோஷ தர்ஷன்)

