வினோத் பணப்பெட்டியை எடுத்தது குறித்து ஆங்காங்கே மக்கள் வம்பு பேசிய காட்சி. வியானாவிற்கு அரோரா மீது சந்தேகம்.

எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சாண்ட்ராவின் எவிக்ஷன் நிகழ்ந்தது, தமிழ் சீசனின் நல்ல விஷயங்களில் ஒன்று.

‘சிந்திப்பீர், செயல்படுவீர்’ என்று டைட்டில் வின்னரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மக்களின் வாக்கு பற்றி விசே சொல்லியிருக்கிறார். அப்படியே நிகழட்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தாண்டி தகுதியான போட்டியாளருக்கு கோப்பை செல்லுமாறு முடிவு அமையட்டும்.

வேட்டி சட்டையில் கூலர்ஸ் இல்லாமல் வந்தார் விசே. (கண்ணாடி போட்டா கேட்டு பிடுங்கிப் போயிடறாங்களோ?!) பிறகு பார்வையாளர்களின் வற்புறுத்தல் காரணமாக (?!) அணிந்து கொண்டார். “கடைசி வாரத்துக்கு வந்துட்டோம்.

இனிமே டாஸ்க், போட்டி கிடையாது. போட்டியாளர்கள் இனிமே தங்களை நிரூபிக்க அவசியமில்ல. மக்களின் வாக்குதான் தீர்மானிக்கப் போகுது. எனவே சிந்திச்சு செயல்படுங்க. இந்த எபிசோட்ல அதிகமா கேள்வி, விசாரணை இல்லை.. ஒரு குறும்படம்தான் இருக்கு” என்றார் விசே.

கேள்வி விசாரணை இல்லையென்றாலும் பிரவீன்ராஜ் உள்ளிட்டவர்களை இன்றும் ரோஸ்ட் செய்தார். சிக்கன் குனியா வந்து சாகப் போகிறவனுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்தால் என்ன, தயிர்சாதம் கொடுத்தால் என்ன என்கிற கதையாக, கடைசி வாரத்தில் ‘குறும்படம்’ என்று சொல்லி கைத்தட்டல் வாங்கினார் விசே.

அது என்ன என்று பார்த்தால் ‘அதுல ஒண்ணுமில்ல. கீழே போட்ரு’ காமெடிதான். விசே வந்த பிறகு குறும்படம் என்பதற்கே ஒரு மரியாதை இல்லாமல் போச்சு. முக்கியமானதிற்கெல்லாம் விட்டு விட்டு அற்பமான விஷயத்திற்கு குறும்படம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 98

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –98 |11/01/2026

Share.
Leave A Reply