SA20 தொடர் கிரிக்கெட் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி, டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது. போலண்ட் பார்க்கில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் ரசிகர்கள் கடைசி பந்து வரை பரபரப்பை அனுபவித்தனர்.
போட்டியில் முதலில் துடுப்பாடிய டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 186 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் எய்டன் மார்க்ரம் 46 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்துத் தாக்கம் காட்டினார். இதற்கு துணையாக லியாம் லிவிங்ஸ்டன் வெறும் 10 பந்துகளில் 32 ஓட்டங்களை அதிரடியாக சேர்த்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் டர்பன்ஸ் அணி வலுவான இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியின் துடுப்பாட்டம் ஆரம்பம் முதலே வேகமாக சென்றது. டேன் லாரன்ஸ் மற்றும் ரூபின் ஹெர்மான் இணைந்து அபாரமான கூட்டணியை அமைத்து அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். டேன் லாரன்ஸ் 41 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரூபின் ஹெர்மான் பொறுப்புடன் விளையாடி அணியின் நம்பிக்கையாக திகழ்ந்தார்.
அடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா அதிரடியாக ஆடி போட்டியை முழுமையாக பார்ல் ராயல்ஸ் பக்கம் திருப்பினார். கடைசி ஓவரின் இறுதி பந்தில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ரஸா அந்த பந்தை சிக்ஸராக மாற்றி அணிக்கு அதிரடியான வெற்றியை தேடித்தந்தார்.
இறுதியில் பார்ல் ராயல்ஸ் அணி 191 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரூபின் ஹெர்மான் 45 பந்துகளில் 65 ஓட்டங்களும், சிக்கந்தர் ரஸா 13 பந்துகளில் 27 ஓட்டங்களும் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்த வெற்றியின் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி SA20 தொடரில் தங்களின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

