அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரிகள் நடைமுறையில் இருக்கும் என்று டிரம்ப் கூறுகிறார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதியுள்ள டிரம்ப், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பும் ‘அனைத்து’ பொருட்களுக்கும் ‘10% வரி விதிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
ஜூன் 1 அன்று இது 25% ஆக அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது’- டிரம்ப்
டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவின்படி,பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் வரிகளை வசூலிக்காமல் அமெரிக்கா மானியம் வழங்கி வருவதாக அவர் கூறுகிறார்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ‘டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது’ என்று டிரம்ப் மேலும் கூறுகிறார்.
“உலக அமைதி ஆபத்தில் உள்ளது! சீனா கிரீன்லாந்தை விரும்புகிறது, அதைப்பற்றி டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது,” என்று கூறும் டிரம்ப், கிரீன்லாந்து இரண்டு நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிகளால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது என்று விமர்சிக்கிறார்.
டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் “அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன” என்றும், அவை “மிகவும் ஆபத்தான விளையாட்டை” விளையாடுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
இந்த “சாத்தியமான அபாயகரமான சூழ்நிலை விரைவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் முடிவுக்கு வர” “கடுமையான நடவடிக்கைகள்” எடுக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் மேலும் கூறுகிறார்.
கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு ஏன் தேவை?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தனது நாடு கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்றும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை என்றும் கூறுகிறார்.
சாத்தியமான கொள்முதல் குறித்தும் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், தீவை “எளிதான வழியில்” அல்லது “கடினமான வழியில்” கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார்.
அவரது கோரிக்கைகளை கிரீன்லாந்தின் தலைவர்களும், நேட்டோ உறுப்பினர் டென்மார்க்கும் நிராகரித்துள்ளனர், அந்தத் தீவு ஒரு பாதியளவு தன்னாட்சி பிரதேசமாகும்.
வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் கிரீன்லாந்தின் இருப்பிடம் ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் ஏற்றதாக அமைகிறது.
“நாம் கிரீன்லாந்தை கைப்பற்றவில்லை என்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும்” என்று டிரம்ப் வாதிட்டு வருகிறார்.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு பிரெஞ்சு ராணுவத்தின் ஒரு சிறிய குழு சென்று சேர்ந்துள்ளது.
பல ஐரோப்பிய நாடுகள் ‘ஆய்வு மற்றும் கண்காணிப்பு’ பணிக்காக தங்கள் நாட்டு வீரர்களை அங்கு அனுப்பி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.
வரிகள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன?
வரிகள் என்பவை இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகள்.
பொதுவாக, இந்த வரி ஒரு பொருளின் மதிப்பிலான சதவீதமாக இருக்கும்.
உதாரணமாக, ரூ.10 மதிப்புள்ள ஒரு பொருளுக்கு 10% வரி என்பது கூடுதலாக ரூ.1 வரி என்பதைக் குறிக்கும் – இதனால் மொத்த விலை ரூ.11 ஆகிறது.
இந்த வரி வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் கூடுதல் செலவில் சில அல்லது அனைத்தையும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் திணிக்கலாம், அதாவது இந்த விஷயத்தில் சாதாரண அமெரிக்கர்கள் மற்றும் பிற அமெரிக்க வணிகங்கள் இந்தச் சுமையை ஏற்க நேரிடும்.

