இந்த வருடப் புத்தாண்டை அதிரடி ஆட்டத்துடன் தொடங்கி வைத்திருக்கிறது அமெரிக்கா. இப்படியும் நடக்குமா என்று உலகமே ஆச்சரியப்படும் வகையில் மத்திய அமெரிக்க நாடான வெனிசுவேலாவுக்குப் படைகளை அனுப்பி அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது துணைவியார் ஆகியோரைக் கடத்திச் சென்று சாதனை(?) புரிந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
நேற்று வரை நோபல் சமாதான விருதுக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்த, அந்த விருதைத் தனக்கு வழங்குமாறு வாய்விட்டுக் கேட்ட ட்ரம்ப், அந்த விருதைத் தனக்கு வழங்காமல் விட்ட நோபல் விருதுக் குழாமின் செயற்பாட்டுக்கு தனது நடவடிக்கை மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.
தனது சாகசச் செயற்பாடு தொடர்பில் தன்னைத்தானே புகழ்ந்து தள்ளும் ட்ரம்ப், தன்னை மற்றவர்களும் பாராட்டுவார்கள் என நினைத்திருந்த வேளை அது நடைபெறாமல் போனமை கண்டு சற்று மனம் சலிப்படையவே செய்திருப்பார் என நம்பலாம். விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே அவரது நடவடிக்கைக்கு வரவேற்புக் கிடைத்துள்ளது. மறுபுறம், கிடைத்துள்ள கண்டனங்களோ ஏராளம்.
உலகில் அதிக வல்லமை மிக்க நாடுகளில் முதன்மையான இடத்தில் இருப்பது அமெரிக்கா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பொருண்மிய அடிப்படையில் மாத்திரமன்றி படைத்துறை அடிப்படையிலும் அமெரிக்காவே முதன்மை இடத்தில் இருக்கிறது.
ஆகையால் தனது சொல் கேட்டே உலக நாடுகள் அனைத்தும் – குறிப்பாக சிறிய நாடுகள் – நடந்து கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் நினைப்பது சரியல்ல. ஒரு நாடு எத்தகைய பாதையில், எத்தகைய கொள்கையில் பயணிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் இடத்தில் அந்த நாட்டின் குடிமக்களும், ஆட்சியாளர்களுமே இருக்க முடியும். அயல் நாடுகள், முன்னேறிய நாடுகள் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை மாத்திரமே வழங்க முடியும்.
ஆனால், தனது கொல்லைப்புறம் என அமெரிக்கா கருதும் தென் அமெரிக்க நாடுகளில் தனது மனம் போன போக்கில் செயற்படும் ஒரு அயலுறவுக் கொள்கையையே அமெரிக்க நிர்வாகம் கடைப்பிடித்து வந்திருக்கிறது என்பது கடந்தகால வரலாறாக உள்ளது.
எத்தனை தலையீடுகள், எத்தனை ஆட்சி மாற்றங்கள்? மக்களுக்கு எதிரான எத்தனை வன்முறைகள்? உலகின் சட்ட திட்டங்களைத் துச்சமென மதித்து, ஜனநாயக விழுமியங்களைக் காலடியில் போட்டு மிதித்து, ஐ.நா. உள்ளிட்ட உலகப் பொது மன்றங்களின் ஆலோசனைகளையும், கண்டனங்களையும் புறந்தள்ளி அமெரிக்கா மேற்கொண்ட அத்துமீறல்கள் எண்ணிலடங்கா. அந்த வரிசையில் இறுதிப் பலியாக வெனிசுவேலா உள்ளது. இந்த வரிசை இத்துடன் முடிந்துபோய் விடப் போவதில்லை என்பதை ட்ரம்பின் வார்த்தைகள் நிரூபித்து நிற்கின்றன. கொலம்பியா, கியூபா, மெக்ஸிக்கோ, கிறீன்லாந்து, ஈரான், நிக்கரகுவா என அவரது பட்டியல் நீளமாக உள்ளதை அவரே வெளிப்படையாகத் தெரிவித்து நிற்கிறார்.
வெனிசுவேலாவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகளே உள்ளன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடப்பது அதிலொன்று. வார்த்தைகளில் கண்டனங்களை வெளியிட்டுக் கொண்டாலும், களச் சூழல் பெரும்பாலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய தெரிவு ஒன்றையே வெனிசுவேலா ஆட்சியாளர்களுக்கு விட்டு வைத்திருக்கின்றது.
தமது நேச நாடுகள் தமது சார்பில் களமிறங்கும் என எதிர்பார்ப்பது சாத்தியமற்ற ஒன்று. வலிமையான கண்டனங்களைத் தெரிவிப்பதைத் தவிர அத்தகைய நாடுகளால் வேறு எதனையும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.
அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள மதுரோ தம்பதியினர் தாங்கள் குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்துள்ள நிலையில் அவர்களது வழக்கு மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிகோலஸ் மதுரோ தான் கடத்தி வரப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி எனவும், தான் ஒரு போர்க் குற்றவாளி எனவும் நீதிபதியிடம் தெரிவித்து உள்ளார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியஸ் அஸாஞ்ஞே சார்பாக வாதாடிய பிரபல வழக்கறிஞர் பரி பொல்லக் மதுரோ சார்பில் முன்னிலையாகி உள்ளார். ஒரு நாட்டின் தலைவரான மதுரோ அதற்கேற்ற கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதையும் பார்க்க முடிந்தது.
அமெரிக்காவின் பாதுகாப்பு என்ற ஒற்றை அம்சத்தின் கீழ் தனது அடாவடித் தனங்களை நியாயப்படுத்திவிட அமெரிக்கா முயல்கின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் செயல்களுக்கு மறைமுக ஆதரவை நல்கி நிற்கின்றன. இதுவே இனிவரும் உலகின் செல்நெறியா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது வெனிசுவேலாச் சம்பவம்.
தனது அதிரடி நடவடிக்கைக்கான காரணத்தை ட்ரம்ப் ஒளித்து வைக்கவில்லை. வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடுவதே தனது இலக்கு என்பதை அவர் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்.
வெனிசுவேலா மீதான தாக்குதலுக்கு முன்பாகவே அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களுடன் அவர் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருந்தார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தன.
வெனிசுலோவுடன் நெருங்கிய உறவில் உள்ள ரஷ்யா, சீனா, கியூபா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ட்ரம்ப் முன்வைத்துள்ளதாக மேலும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. மதுரோவின் வெற்றிடத்தைத் தொடர்ந்து நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள துணை ஜனாதிபதி டெல்சி ரொட்றிகுயஸ், தன்னுடைய சொல் கேட்டு நடந்து கொள்ளாதுவிட்டால் மதுரோவை விடவும் அதிக விலையைச் செலுத்தவேண்டி இருக்கும் எனவும் ட்ரம்ப் அவரை எச்சரித்து உள்ளதையும் பார்க்க முடிகிறது.
போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை என ஆரம்பம் முதலே தெரிவித்து வந்த அமெரிக்கா, மதுரோ தம்பதியினரை அடாவடியாகக் கடத்தி வந்ததன் பின்னர் அது பற்றிப் பேசவே இல்லை என்பது நோக்கத்தக்கது. போதைப் பொருள் என்பதை தனது நடவடிக்கைகளுக்கு ஒரு போலிக் காரணமாகவே அமெரிக்கா பயன்படுத்தி வந்துள்ளது என்பது இதனால் வெளிச்சமாகி உள்ளது.
அமெரிக்க நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகளும், பொது மக்களும் கண்டனத்தைத் தெரிவித்து இருந்தாலும் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த கண்டனங்கள் குறைவாகவே உள்ளன.
ஒருசில அமெரிக்க அரசியல்வாதிகளைத் தவிர பெரிதாகக் கண்டனங்கள் எழவில்லை. அதேவேளை, அமெரிக்காவின் பெரும்பாலான ஊடகங்கள் அமெரிக்காவின் செயற்பாட்டை வரவேற்றும், நியாயப்படுத்தியும் உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல், அந்த நாட்டின் இறைமையைத் துச்சமென மதித்து வல்லரசு நாடொன்று அத்துமீறி நடந்துள்ளதைப் பார்க்கும் போது, வல்லமை மிக்க ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினால் உலகின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுகின்றது.
கடந்த வருடத்தில் மாத்திரம் ஈரான், சிரியா, பலஸ்தீனம், லெபனான், யேமன், நைஜீரியா எனப் பல நாடுகளின் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. ஐ.நா. சபையின் எந்தவித அங்கீகாரமும் இன்றி, உலகின் பொதுவான சட்டதிட்டங்களுக்கு முரணாகவே இந்தத் தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டிருந்தது.
தனது தாக்குதல்களை தேசத்தின் பாதுகாப்பு என்ற கோசத்தின் கீழ் மறைத்துக் கொண்டது. இதே போன்ற தாக்குதல்கள் நடப்பு வருடத்திலும் தொடரும் என்பதை மறைமுகமாகக் கூறியும் வருகின்றது.
உலக மாந்தர் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. இன்றில்லாது விட்டால் என்றுமே இல்லை என்பதைப் போன்று முற்போக்குச் சக்திகளும், சமாதான சகவாழ்வை விரும்பும் மக்களும் அணி திரள வேண்டிய தருணம் இது. அத்தகைய ஒரு அணி திரள்தல் நடைபெறாதுவிட்டால் மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்குள் மனித குலம் செல்வதைத் தடுத்துவிட முடியாது என்பதே யதார்த்தம்.
மறுபுறம், ஐக்கிய நாடுகள் சபையின் வகிபாகம் தொடர்பில் மறு பரிசீலனை செய்வதற்கான அவசியம் எழுந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் பின்னான சூழலில், உலகில் அமைதியை ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்ட அந்த அமைப்பு இன்று பெரும்பாலும் செயலிழந்த ஒன்றாக மாறியிருக்கிறது.
இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப அந்த அமைப்பு வலுவூட்டப்பட வேண்டியது அவசியம். எண்ணம் நல்லதாக இருந்தாலும், அதை அடைவதற்கான வழி என்ன என்பதே தற்போது எம் முன் உள்ள பெறுமதியான கேள்வி.
-சுவிசிலிருந்து சண் தவராஜா-

