ஈரான் மீதான போர் முழுமையாக அமெரிக்க – இஸ்ரேலிய தரப்பினால் தயாராகி விட்டது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்கப் போரை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதையும், அமெரிக்க-ா – இஸ்ரேல் தரப்புக்கு எச்சரிக்கை செய்வதையும் காண முடிகின்றது.

அமெரிக்க – இஸ்ரேலிய தரப்பு தனது ஊடக பலத்தினாலும், புலனாய்வுத் திறனாலும் போரை கணிசமாக வெற்றி கொள்ளுமென்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ பலத்தைக் கொண்டும் ஆயுத தளபாடங்களின் அளவீடுகளை வைத்துக்கொண்டும் முன்கூட்டியே இதனை இலகுவில் மதிப்பீடு செய்துவிட முடியும்.

அது மட்டுமன்றி, புதிய உலக ஒழுங்கு உருவான பின்னர் அமெரிக்கா உலகத்தில் நிகழ்த்திய அனைத்துப் போர்களிலும் ஒருசிலவற்றில் பின்னடைவுகளை சந்தித்த போதும், வெற்றிகரமான அடைவுகளை எட்டியிருக்கிறது. அதனால் இந்தப் போரையும் வெற்றிகொள்வதற்கான வலிமை அமெரிக்காவின் பக்கம் உண்டு என்பது கணிப்பிடப்படுகிறது.

இதற்கு இன்னொரு வலுவான காரணமும் உள்ளது. மேற்காசியாவில் போரியல் ரீதியில் நிலப்பரப்பிலும் மற்றும் ஆகாயப்பரப்பிலும் நன்கு அனுபவமும் திறனும் கொண்ட இஸ்ரேல் அமெரிக்காவின் பக்கம் உள்ளது. இதுவே இப்போரின் பிரதான மையமாக விளங்கப் போகிறது.

கடந்த போர்களை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கூடாகவும் ஐ.நா.சபையின் அனைத்து நாடுகள் சார்பாகவும் அமெரிக்கா முன்னெடுத்தது.

தற்போது இஸ்ரேலுடன் மட்டும் கூட்டுச்சேர்ந்து அமெரிக்கா போரை நிகழ்த்துகிறது. அமெரிக்கா இப்போரை நிகழ்த்துவது இஸ்ரேலுக்கானது என்பதை இஸ்ரேலியப் பிரதமர் அண்மையில் வெளியிட்ட கருத்தொன்றில் பதிவு செய்திருந்தார்.

யூதர்களை அல்லது இஸ்ரேலியர்களை கைவிட்டு அமெரிக்கா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது இஸ்ரேலியர்களுடைய போரை அமெரிக்கா நிறைவேற்றுவதன் ஊடாக மேற்காசிய அரசியலையும் உலக அரசியலையும் அடுத்து வரும் தசாப்தங்களில் தலைமை ஏற்க முடியும் என்ற நிலையொன்றை ஏற்படுத்த முயலுகிறது.

இப்போரில் அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு ஈரானுக்கு அபாயமானது அல்லது அழிவு அதிகமுண்டு என்பதை மறுக்க முடியாது.

ஏறக்குறைய ஈரான் மீதான போர் ஏற்பாட்டில் கணிசமான பகுதியை இஸ்ரேலிய – அமெரிக்க தரப்பு அடைந்திருப்பதாகவே தெரிகின்றது.

ஈரானின் நிலப்பரப்பில் அமெரிக்க – இஸ்ரேலிய உளவுத்தரப்புகள் ஊடுருவி இருப்பதோடு, காத்திரமான நெருக்கடியை ஈரானுக்கு ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு வலிமை பெற்றிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.

அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் முக்கியமான கருத்து வெளியிட்டுள்ளார். “கிளர்ச்சியாளர்கள் மீதான ஈரானிய தாக்குதல்கள் கொல்லப்படக் கூடாதவர்களை கொன்றிருப்பதாகவே தெரிகிறது. இச்செயலானது அமெரிக்கா ஈரானிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு அடிப்படைக் காரணம்” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அவ்வாறாயின் அமெரிக்காவினால் தயார் செய்யப்பட்டு, பயிற்சி கொடுத்து ஈரானிய நிலத்துக்குள் ஊடுருவியவர்களை ஈரானிய இராணுவம் கொலை செய்திருக்கிறது என்பதே அதன் அர்த்தமாகும். ஏறக்குறைய ஈரானின் எல்லா நகரங்களிலும் கிளர்ச்சியாளர்கள் பெயரில் இஸ்ரேலிய, அமெரிக்க புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது இதன் புரிதலாகவுள்ளது.

அத்தகைய புலனாய்வாளர்கள் ஆயுதங்களுடனும் தயாரிப்புகளுடனும் ஈரானிய நகரங்களில் மட்டுமன்றி, கிராமங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய செய்திகளை ஈரானிய ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

மறுபக்கத்தில் ஈரானியரின் பலம் என்பது 1979 ஆம் ஆண்டிலிருந்து ஒரு நீண்ட நிலையான முடியாட்சி முறைக்கு எதிரான இஸ்லாமிய ஆட்சியாகவே காணப்படுகிறது. அதுவும் அமெரிக்க,-இஸ்ரேலியர்களுக்கு எதிரானதாகவே கட்டமைக்கப்பட்டதாகும்.

கடந்த காலம் முழுவதும் பல போர்களை ஈரான் எதிர்கொண்டிருந்தது. ஈரான் தனது இருப்பை பல தசாப்தங்களாக நிலைப்படுத்தி உள்ளது. அதன் மீது அமெரிக்கா ஒரு நீண்ட மறைமுக யுத்தத்தை நிகழ்த்தியது. அத்தகைய யுத்தம் தற்போது ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்பின் காலத்தில் நேரடி யுத்தமாக மாறி உள்ளது.

இப்போரில் ஈரான் தோல்வி நிலைக்கு தள்ளப்படுகின்ற போது, அணு ஆயுதத்தை கையில் எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உண்டு என போரியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெனுசுவெலா மீதான அமெரிக்க நடவடிக்கையும், ஈரான் மீதான அமெரிக்க நடவடிக்கையும் வேறுபட்டன. இரண்டுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டாலும், அடிப்படையில் இரண்டுக்கும் பின்னால் இருக்கும் சக்திகள் மீதான போராகவே இப்போர்கள் காணப்படுகின்றன.

சீனாவின் நடவடிக்கை இதற்கான பின்புலமாகத் தென்படுகிறது. வெனிசுவெலா மீதான நடவடிக்கையும் ஈரான் மீதான நடவடிக்கையும் உலகத்தின் மீதான அமெரிக்காவின் வரி தொடர்பான நடவடிக்கையும் சமதூரத்தில் பயணிக்கும் அமெரிக்க அரசியல் பொருளாதார இராணுவ இலாபங்களை கொண்ட நகர்வாகவே தெரிகிறது.

திறந்த பொருளாதாரத்தை புதிய வடிவுக்குள் வரையறுக்கவும் அத்தகைய திறந்த பொருளாதாரத்தின் போட்டியாளர்களை கட்டுப்படுத்திக் கொள்ளவும் அமெரிக்கா நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

வெளிப்படையாக பார்த்தால் சீனாவின் போட்டிச்சந்தை பொருளாதாரத்துக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்திலே ரொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா உலகத்தை நோக்கி நகருகின்றது.

இதன் நீட்சி ஆபிரிக்கா, ஆசியாவின் இதர பகுதிகளையும் ஏனைய கண்டங்களை நோக்கியும் மேலும் விஸ்தரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான அமெரிக்காவின் முடிவை ஈரானே தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும்.

எனவே ஈரான் மீதான போர் தொடர்பில் அமெரிக்கா -இஸ்ரேல் கூட்டு கணிசமான வெற்றி இலக்கை அடைந்திருந்தாலும், அதற்கான முழுமையை சாத்தியப்படுத்துவதிலேயே உலகத்தின் அடுத்து வரும் தசாப்தங்களின் அத்தியாயங்கள் வரையப்பட வாய்ப்புள்ளது.

வெனிசுவேலா, கிரீன்லாந்து, ஈரான் போன்று பல நாடுகள் அமெரிக்காவின் இவ்வகையான தாக்குதலில் அகப்படும் ஆபத்து உள்ளதா, இல்லையா என்பதை ஈரான் மீதான போரே தீர்மானிக்கப் போகின்றது.

ரி. கணோசலிங்கம்

Share.
Leave A Reply