குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து உனக்கு நீயே தீ வைத்துக் கொள்ளுமாறு வற்றுத்தி தீ வைத்து தீயில் எரிய வைத்த கணவனை கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் சனிக்கிழமை (17) காலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 36 வயதுடைய தி.அனுஷ்வரன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பிரகலாதேவி என்பவரை திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவ தினமான சனிக்கிழமை (17) காலை 8.30 மணியளவில் கணவன் மனைவிக்கு இடையே நிதி தொடர்பான பிரச்சனை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இடம் பெற்று வந்துள்ளது.

மனைவியை விபச்சாரி என குற்றஞ்சாட்டி கணவன், குற்றமற்ற தன்மையை நிரூபித்து காட்டுமாறு வற்புறுத்தி அவளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து அவளை தீ வைக்க வைத்ததையடுத்து அவள் தீப்பற்றி எரிந்தார்.

எரி காயங்களுக்கு உள்ளான அவர்,மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மனைவியை தீ வைக்க வைத்த கணவன் தனக்கு தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய நிலையில் அவரை மனைவியை கொலை முயற்சி மற்றும் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதில் கைது செய்யப்பட்டவரை ஞாயிற்றுக்கிழமை (18) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply