அமெரிக்கா இன்றைய உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்தியமாக இருக்கின்றது. அதே நேரத்தில் அது தனது அந்திம காலத்திலும் உள்ளது.
அமெரிக்காவின் ஆகப் பிந்தைய ஏகாதிபத்திய நடவடிக்கையாக அதன் வெனிசுவேலா நாட்டின் மீதான தாக்குதல் அமைந்துள்ளது.
அமெரிக்கப் படைகள் வெனிசுவேலாவின் பல நகரங்களில் தாக்குதல் நடத்தியதுடன், அந்த நாட்டின் ஜனாதிபதி மதுரோவையும், அவரது மனைவியையும் பலவந்தமாகப் பிடித்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்று சிறை வைத்திருக்கின்றன.
வெனிசுவேலா மீதான தாக்குதலுக்கு அந்த நாடு அமெரிக்காவுக்குள் போதை வஸ்துகளை அனுப்பி வருகிறது என்று காரணம் கூறி வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இப்பொழுது வெனிசுவேலாவின் அபரிமிதமான எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் மூலம் இது ஒரு திட்டமிட்ட ஏகாதிபத்திய நடவடிக்கை என்பது நிரூபணமாகியுள்ளது.
ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெறி வெனிசுவேலாவுடன் அடங்கி விடவில்லை.
மெக்சிக்கோ, பொலிவியா, கியூபா, நிக்கரக்குவா போன்ற நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தி, அந்த நாடுகளில் தற்போது அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கு எதிரான அரசுகளைக் கவிழ்க்கப் போவதாக ட்ரம்ப் மிரட்டி வருகிறார்.
ஏற்கெனவே அமெரிக்காவின் அயல்நாடான கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைக்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்தல் விடுத்திருந்தார். தனது நாட்டுக்கு மேலேயுள்ள கனடாவையும், கீழேயுள்ள மெக்சிக்கோவையும் கைப்பற்றி விட்டால், முழு வட அமெரிக்க கண்டமும் தமது ஆளுகைக்குள் வந்துவிடும் என்பது ட்ரம்பின் கனவு.
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டமும் ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து இருந்து வருகிறது. அதற்குக் காரணம், வெனிசுவேலா போல ஈரானிலும் பெருந்தொகையான எண்ணெய் வளம் இருப்பது மட்டுமல்ல. மத்திய கிழக்கில் பல அரபு நாடுகளை அமெரிக்கா மிரட்டி தனக்குச் சாதகமாக அடிபணிய வைத்த போதிலும், ஈரான் மட்டும் அமெரிக்காவுக்கும் அதன் அடிவருடியான சியோனிச இஸ்ரேலுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.
இப்பொழுது இன்னொரு வித்தியாசமான காட்சி அரங்கேறுகிறது.
அதாவது, இதுவரை காலமும் தனக்கு எதிரான நாடுகளை மிரட்டி வந்த அமெரிக்கா, இப்பொழுது பல தசாப்தங்களாக தனது ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து வந்த ஐரோப்பா மீதும் கைவைக்க ஆரம்பித்துள்ளது.
நேட்டோ இராணுவக் கூட்டணி உறுப்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் ஆளுகைக்குள் உள்ள சுயாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை தன்னிடம் ஒப்படைக்கும் படியும், சமாதானமாக அதைத் தன்னிடம் ஒப்படைக்காவிடின், இராணுவ பலத்தின் மூலமாவது அதைக் தான் கைப்பற்றப் போவதாகவும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்து வருகின்றார்.
அமெரிக்காவின் சமீபகால நடவடிக்கைகள் அதன் ஏகாதிபத்திய தன்மையின் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கின் பிந்தைய வெளிப்பாடாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றை எடுத்துப் பார்ப்போமாயின், அது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவின் பின்னரே உலகின் முதல்தர ஏகாதிபத்தியமாக உலக அரங்கின் முன்னணிக்கு வந்தது.
இரண்டாம் உலக யுத்தம் முடிந்த 1945 ஆம் ஆண்டுப் பின்னரான இந்த 80 ஆண்டுக் காலகட்டத்தில், அமெரிக்கா பல நாடுகளில் ஆக்கிரமிப்புக் போர்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், சதிகள், சூழ்ச்சிகள் என்பனவற்றில் ஈடுபட்டு வந்துள்ளது. அதன் ஆதிக்கத்தின் வெளிப்பாடாக இன்று உலகின் 50 இற்கும் அதிகமான நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களில் அமெரிக்காவின் பல இலட்சம் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா தனது ஏகாதிபத்திய வளர்ச்சிப் போக்கை 1945 இல் யப்பானில் அணுக்குண்டுகளை வீசியதன் மூலம் உலகத்தின் முன்னால் பிரகடனப்படுத்தியது.
இரண்டாம் உலக யுத்த முடிவில் ஹிட்லரின் உலக ஆக்கிரமிப்புக் கூட்டணியில் இருந்த யப்பானிய ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட்ட போதிலும், எந்த விதமான போதிய காரணியும் இன்றி, தனது பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்கா, யப்பானின் ஹிரோசிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசி பேரழிவை ஏற்படுத்தியது.
அடுத்ததாக, யப்பானிய ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்கு வகித்த சீனப் புரட்சி மீது அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடுத்தது.

சியாங் கே ஷேக்
1945 இல் இரண்டாம் உலக யத்த முடிவில் யப்பான் தோற்கடிக்கப்பட்டதும், அதுவரை யப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியியுடன் வேண்டா வெறுப்பாக ஒத்துழைத்து வந்த பிற்போக்குவாதி சியாங் – கே_ஷேக் iதலைமையிலான சீனாவின் கோமின்டாங் அரசாங்கம், கம்யூனிஸ்ட் கட்சியை ஒடுக்கும் உள்நாட்டுப் போரில் இறங்கியது.
அதனால், 1949 ஒக்ரோபரில் சீனப் புரட்சி வெற்றி பெறும்வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கோமின்டாங் அரசாங்கத்துடன் போரில் ஈடுபட்டு, அதன் 90 இலட்சம் படையினரைத் தோற்கடித்து, நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இறுதியில், சியாங்சேக் நாட்டை விட்டுத் தப்பியோடி, சீனாவின் ஒரு மாகாணமான தாய்வான் தீவில் ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்து, இறக்கும் வரை அதன் தலைவராக இருந்தார்.
அமெரிக்கா, சீனாவின் உள்நாட்டுப் போரில் சியாங் கும்பலின் பிற்போக்கு அரசாங்கத்தை ஆதரித்தது மட்டுமின்றி, இன்று வரை தைவானில் உள்ள பொம்மை அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனாலும், அமெரிக்கா சீனப் புரட்சிக்கு எதிராகச் செயல்பட்டு தோல்வியையே தழுவியது போல, வருங்காலத்திலும் நிச்சயமாகத் தோல்வியையே தழுவும்.
அதன் பின்னர், 1950 இல் கொரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் அமெரிக்கா கொரிய பிற்போக்கு சக்திகளுக்கு இராணுவ உதவி செய்யச் சென்றது.
அங்கும் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டு, வட கொரியாவில் கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு என்ற சோசலிச நாடு உருவானது.
இருந்தாலும், தென் கொரியாவில் ஒரு பிற்போக்கு அரசு அமைவதற்கு அமெரிக்கா உதவி செய்து, இன்று வரை அதைப் பராமரித்து வருகின்றது. அத்துடன் அங்கும் தனது படைகளை நிறுத்தி வைத்துள்ளது.
அதன் பின்னர், 1965 இல் வியட்நாமை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஹோசிமின் தலைமையினாலான விடுதலை இயக்கத்தால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், அதைப் பயன்படுத்தி அமெரிக்கா அங்கு காலூன்றியது.
ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்நாம் மக்கள் தொடர்ந்து போராடியதால், வியட்நாமிலும் அதன் அயல் நாடுகளான கம்போடியா மற்றும் லாவோஸிலும் ஆக்கிரமித்திருந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் 1975 இல் தோற்கடிக்கப்பட்டு, அந்தப் பிராந்தியத்திலிருந்து முழுமையாக வெளியேற நேர்ந்தது.
அந்தரங்க அமைப்புக்கள்
இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்த இதே காலகட்டத்தில், ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனின் வெற்றியும், சீனா, வியட்நாம், கொரியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சிகளும் உலகில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தின.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, பிரித்தானியா, ஒல்லாந்து, போர்த்துக்கல், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற மேற்கத்தைய ஏகாதிபத்திய நாடுகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் தமது தேசிய விடுதலையை வென்றெடுத்தன.
இவையெல்லாம் சேர்ந்து அமெரிக்கா தலைமையிலான உலக ஏகாதிபத்திய அமைப்பை ஆட்டம் காணச் செய்துள்ளது.
அமெரிக்கா. ஒரு பக்கத்தில் நேரடி ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளை மேற்கொண்டு வந்த அதே நேரத்தில், பொருளாதார ரீதியாகவும் மற்றைய நாடுகளைக் கட்டுப்படுத்தி வந்தது.
இருப்பினும், ரஸ்யா, சீனா, இந்தியா, இரான் என்பனவற்றின் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ பலத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.
குறிப்பாக, ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும், அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தைப் பேணும் ஒற்றைத் துருவ நிலைப்பாட்டை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, அமெரிக்காவின உலக ஆதிக்க டொலர் நாணயத்தின் ஆதிக்கமும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலைமைகளால் அமெரிக்காவின் உலக ஆதிக்க நிலைமை வீழ்ச்சி கண்டு, அது தனது இருப்புக்காகப் போராடும் ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதன் விளைவாகவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல அதிரடியான அடாவடி நடவடிக்கைகளை உலக அரங்கில் மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக, அவரது நடவடிக்கைகள் மூன்றாவது உலக யுத்தமொன்றுக்கு அடிகோலுமோ என்ற அச்சத்தை உலக மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
அப்படி ஒரு உலக யுத்தம் எழுந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், ஏகாதிபத்தியம் தனது இருப்பைப் பாதுகாப்பதற்கு எப்பொழுதம் யுத்தங்களையே நாடி வந்துள்ளது.
உலக யுத்தங்களும் அவ்வாறே நிகழ்ந்து வந்துள்ளன. உதாரணமாக – முதலாம் உலக யுத்தம் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளால் தமது நாடு பிடிக்கும் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அதன் எதிர் விளைவாக உலகின் ஆறில் ஒரு பிரதேசமான ரஸ்யாவில் சோசலிசப் புரட்சி நடைபெறுவதற்கு வித்திட்டதில் முடிவடைந்தது.

ஹிட்லர்
இரண்டாம் உலக யுத்தம், ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர், இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி, யப்பானிய ஏகாதிபத்தியம் என்பனவற்றின் நாடு பிடிக்கும் ஆசையால் ஏற்பட்டது.
ஆனால் அதன் விளைவால், சீனா, வியட்நாம், கொரியா போன்ற ஆசிய நாடுகளிலும், முழு கிழக்கு ஐரோப்பாவிலும் சோலிசப் புரட்சிகள் வெற்றிபெற வித்திட்டதுடன், ஆசிய – ஆபிரிக்க – இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெறவும் உதவியது.
முன்னைய இரண்டு உலக யுத்தங்கள் போல, மூன்றாம் உலக யுத்தம் ஒன்று ஏற்படுமாயின், அது ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாடு பிடிக்கும் ஆசையினால் ஏற்ட்டதாகத்தான் இருக்கும்.
ஆனால், அந்தப் போரில் அமெரிக்காவோ அல்லது வேறு எந்த ஏகாதிபத்திய நாடோ வெற்றிபெறப் போவதில்லை. அப்படி ஒரு போர் ஏற்பட்டால், பெரும்பாலும் அது உலக ஏகாதிபத்திய அமைப்புக்கு இறுதிச் சமாதி கட்டுவதாகவும், (சில வேளைகளில் அமெரிக்கா உட்பட) பல நாடுகளில் சோசலிசப் புரட்சிகள் வெற்றிபெற வழி வகுப்பதாகவும் இருக்கக்கூடும்.
இத்தகைய ஒரு நிலைமையைத்தான், உலக மார்க்சிச ஆசான்களில் ஒருவரான மாஓ சேதுங் அவர்கள்,
‘யுத்தம் புரட்சியைத் தூண்டும், புரட்சி யுத்தத்திற்கு முடிவு கட்டும்’
எனத் தீர்க்கதரிசனத்துடன் சொல்லிச் சென்றுள்ளார்.

