1969-ம் ஆண்டு, பிப்ரவரி 3-ம் தேதி. தி.மு.க-வின் ஆணிவேராக இருந்த அண்ணா, புற்றுநோயால் காலமானார். அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்தது. ‘சீனியர் நெடுஞ்செழியனா, செயல்வீரர் கருணாநிதியா?’ என்ற நிலை உருவானது!

அண்ணாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் இரா.நெடுஞ்செழியன். தி.மு.க தொடங்கப்பட்ட போது ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர். சிறந்த பேச்சாளர். திராவிடர் வரலாற்றிலும், சித்தாந்தத்திலும் ஆழ்ந்த புலமைபெற்றவர்.

1955 முதல் 1960 வரை தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்தவர். 1960-ம் ஆண்டு பொதுச்செயலாளர் பதவிக்கு அண்ணா வந்ததும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டவர். ஆகவே, முதல்வர் பதவிக்கு நெடுஞ்செழியன் வர வேண்டும் என்று சிலர் நினைத்தனர்.

நாவலர்  நெடுஞ்செழியன் நடுவில்

நெடுஞ்செழியன் போன்ற சீனியர்கள் பலர் இருந்தபோதிலும், பன்முகத் திறமைகளாலும், அசுர உழைப்பாலும் கட்சிக்குள் வேகமாக வளர்ந்துவந்த மு.கருணாநிதிக்குப் பெரும் ஆதரவு இருந்தது.

1960-ம் ஆண்டு பொருளாளர் பதவியை ஏற்ற பிறகு, அண்ணாவைக் காட்டிலும் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார் கருணாநிதி. 11 லட்சம் ரூபாயைத் திரட்டிவந்து விருகம்பாக்கம் மாநாட்டில் அளித்தபோது, “தம்பி, நிதி என்று உனக்குப் பெயரிட்டார்களே உன் தாயார்… சும்மாவா இட்டார்கள்..!” என்று அகம் மகிழ்ந்தார் அண்ணா.

பொதுக்குழுவில் கருணாநிதிக்கு ஏகோபித்த ஆதரவு இருந்தது. அதேநேரம், அன்றைக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ‘புரட்சி நடிகர்’ எம்.ஜி.ஆர் யார் பக்கம் இருக்கிறார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது.

கருணாநிதியின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார். பிறகென்ன பிரச்னை… 1969, பிப்ரவரி 9-ம் தேதி முதல்வர் பதவியை கருணாநிதி ஏற்றார். நெடுஞ்செழியனின் மனம் கருணாநிதியைத் தலைவராக ஏற்கவில்லை. ஆகவே, கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற அவர் விரும்பவில்லை.

சரிவின் தொடக்கம்..!

1967 தேர்தலுக்குப் பிறகு, இந்திய அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. மக்களவையின் மொத்த இடங்கள் 520. காங்கிரஸ் பிடித்ததோ வெறும் 283. காங்கிரஸின் செல்வாக்கு பல மாநிலங்களில் சரிந்திருந்தது.

தனிப்பெரும் கட்சியாக 13 மாநிலச் சட்டமன்றங்களில் காங்கிரஸ் வந்திருந்தாலும், பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா என பத்து மாநிலங்களில், எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தன.

மக்களவையில் 44 எம்.பி-க்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்த சுதந்திரா கட்சி, ஒரிசாவில் ஆட்சியைப் பிடித்ததுடன், பல மாநிலச் சட்டமன்றங்களில் பிரதான எதிர்க்கட்சியாகவும் வந்திருந்தது.

பாரதிய ஜன சங்கம் 35 இடங்களையும், ராம் மனோகர் லோஹியாவின் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி (எஸ்.எஸ்.பி) 23 இடங்களையும், சி.பி.ஐ 23 இடங்களையும், சி.பி.எம் 19 இடங்களையும், பிரஜா சோசலிஸ்ட் கட்சி 13 இடங்களையும், தி.மு.க 35 இடங்களையும் பிடித்திருந்தன.

அவ்வளவு வளர்ச்சியை எட்டிய பிறகு, எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா… காங்கிரஸை வீழ்த்த, ‘சம்யுக்தா விதாயக் தள்’ (எஸ்.வி.டி) என்ற கூட்டணியை அமைத்த எதிர்க்கட்சிகள், பல மாநிலங்களில் ஆட்சியையும் பிடித்தன.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸில் இருந்த அஜோய் முகர்ஜி, எதிர் முகாமுக்குத் தாவி முதல்வர் பதவியைப் பிடித்தார்.

பஞ்சாப்பில் அகாலி தளம், ஜன சங்கம் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஹரியானாவில் ஜன சங்கம், சம்யுக்தா சோசலிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அரசை அமைத்தன.

பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எஸ்.வி.டி ஆட்சி அமைந்தது.

ஒரிசாவில் சுதந்திரா கட்சியின் ஆட்சி அமைந்தது. தமிழ்நாட்டில் தி.மு.க., கேரளாவில் சி.பி.எம் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது.

இந்திராவுடன் நெருங்கிய தி.மு.க!

லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு, பிரதமர் பதவிக்கு இந்திரா காந்தியைக் கொண்டு வந்தவர் காமராஜர்.

ஆனால், இந்திராவின் செயல்பாடுகளும் அணுகுமுறையும் காமராஜருக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கின. மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவரான நிஜலிங்கப்பாவுக்கும், பிரதமர் இந்திராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

இந்த விவகாரம், குடியரசுத் தலைவர் தேர்வில் பெரிதாக வெடித்தது.நீலம் சஞ்சீவி ரெட்டியை, குடியரசுத் தலைவராக்க வேண்டுமென்று நிஜலிங்கப்பா நினைத்தார்.

ஆனால், குடியரசுத் தலைவராக வி.வி.கிரி வர வேண்டும் என்பது இந்திரா காந்தியின் விருப்பம். இந்திராவின் செல்வாக்கு மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் வி.வி.கிரி வெற்றிபெற்றார்.

அதனால் மோதல் முற்றி, காங்கிரஸிலிருந்து இந்திரா வெளியேற்றப்பட்டார். காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது (1969).

இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் – ஆர் (Congress R) உருவானது. ஆர் (Requisitionists) என்றால் `புதிய புரட்சியாளர்கள்’ என்று அர்த்தம்.

காமராஜர், நிஜலிங்கப்பா, நீலம் சஞ்சீவி ரெட்டி உள்ளிட்ட சீனியர்கள் தலைமையில் ‘ஸ்தாபன காங்கிரஸ்’ (Congress O) செயல்பட்டது.

‘ஓ’ என்றால் ‘அமைப்பினர்’. ‘பழைய காங்கிரஸ்’, ‘காங்கிரஸ் சிண்டிகேட்’ என்றும் அது குறிப்பிடப்பட்டது.

இந்திராவுக்கு இளைஞர்கள், இடதுசாரிகளின் ஆதரவு இருந்தது. ஆட்சியில் இந்திராவின் கை ஓங்கியிருந்தது.

இந்திராவுடன் தி.மு.க நெருங்கியிருந்தது. இந்திரா அரசு, நாட்டிலுள்ள வங்கிகளைத் தேசியவுடைமை ஆக்கியது.

1969-ம் ஆண்டு, மார்ச் 9-ம் தேதி நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றது. தி.மு.க 15 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களையும் பிடித்தன. இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் ஜெயித்தனர்.

காங்கிரஸ் (ஆர்) ஆதரவுடன், தி.மு.க – கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு அமைந்தது. முதல்வராக எம்.ஓ.ஹெச்.பரூக் பதவியேற்றார்.

ஐம்பெரும் முழக்கங்கள்!

அண்ணா மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வின் மாநில மாநாடு திருச்சியில் 1970-ம் ஆண்டு, பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் இறுதி உரை ஆற்றிய கருணாநிதி, ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்…’, ‘ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்…’, ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்…’, ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்…’, ‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டார். ‘

உலகம் இயங்குவதற்கு பஞ்சபூதங்கள் எப்படி அவசியமோ, அதுபோல தி.மு.க-வுக்கு இந்த ஐம்பெரும் முழக்கங்கள்தான் உயிர்மூச்சு’ என்று தி.மு.க-வினர் சொன்னார்கள்.

1972-ம் ஆண்டுதான் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், முன்கூட்டியே தேர்தல் வந்தது. காரணம், காங்கிரஸ் (ஆர்) கட்சிக்கு மக்களவையில் பலம் இல்லை.

ஆகவே, மக்களவையைக் கலைத்துவிட்டு, முன்கூட்டியே தேர்தலை நடத்த இந்திரா முடிவெடுத்தார்.

1970-ம் ஆண்டு, டிசம்பர் 27-ம் தேதி மக்களவை கலைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, தமிழக சட்டமன்றத் தேர்தலையும் நடத்திவிட முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார்.

1971-ம் ஆண்டு, மார்ச் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தேர்தல் என அறிவிக்கப்பட்டது.

‘ஹரிபோ ஹட்டவோ!

தமிழகத்தில் ராஜாஜியும் காமராஜரும் கைகோத்திருந்தார்கள். அவர்களின் கூட்டணிக்கு ‘கிராண்ட் அலையன்ஸ்’ என்று பெயர். அந்தக் கூட்டணிதான் வெற்றிபெறும் என்ற பேச்சு இருந்தது.

 

ஆனால், தி.மு.க., காங்கிரஸ் (ஆர்), சி.பி.எம்., சி.பி.ஐ., ஃபார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக், பிரஜா சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி, பெரும் வெற்றியைப் பெற்றது.

சட்டமன்றத் தேர்தலில் 184 இடங்களை (மொத்தம் 234) தி.மு.க பிடித்தது.<

‘ஹரிபோ ஹட்டவோ’ (வறுமையை ஒழிப்போம்) என்று இந்திரா காந்தி எழுப்பிய முழக்கம், இந்தியா முழுவதும் எதிரொலித்தது.

நாட்டில் வறுமை தாண்டவமாடிய அந்தச் சூழலில், `வறுமையை ஒழிப்போம்’ என்ற இந்திராவின் முழக்கத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

அது, இந்திராவுக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் (ஆர்) கட்சி 352 இடங்களை அள்ளியது.

காங்கிரஸ் (ஓ) கட்சிக்கு 16 இடங்களே கிடைத்தன. தி.மு.க 25, சி.பி.எம் 25, சி.பி.ஐ 23, சுதந்திரா கட்சி 8, ஜனசங்கம் 22 என மக்களவையில் இடங்களைப் பெற்றன.

திரைப்பிரபலத்தால் அன்றைய சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.ஜி.ஆர்., தி.மு.க-வின் பொருளாளராக இருந்தார்.

முதல்வர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. கருணாநிதியின் `மேகலா பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் ‘எங்கள் தங்கம்’ படத்தில், எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.

அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தபோதிலும், ஒருகட்டத்தில் தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் எம்.ஜி.ஆருக்கும் இடையே பனிப்போர் தொடங்கியிருந்தது.

‘மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு இருந்த புகழையும், பொருளாளராக ஆன பிறகு கட்சிக்குள் அவர் பெற்றிருந்த செல்வாக்கையும் கருணாநிதி விரும்பவில்லை.

அதுதான் பனிப்போருக்குக் காரணம்…’ என்ற பேச்சு எழுந்தது. அந்தப் பனிப்போர், 1971 தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெரும் புயலாக மாறியது.

இன்னொரு புறம், தி.மு.க-வுக்கு அன்பான தாயாகக் காட்சியளித்த இந்திரா காந்தி, திடீரென்று கொடூரமான மாமியாராக மாறினார். ‘புயலின்’ தாக்கமும், ‘மாமியாரின்’ தாக்குதலும் ஏற்படுத்திய விளைவுகள் என்னென்ன

(இன்னும் அறிவோம்

அண்ணா 1969-ம் ஆண்டு, பிப்ரவரி 3-ம் தேதி காலமானார். (தமிழக தேர்தல் வரலாறு-9 )

Share.
Leave A Reply