யுத்த காலத்தில் முக்கியமான ஒரு சமாதானப் பேச்சுவார்;த்தைக்கு சென்று திரும்பியிருந்த முஸ்லிம் தலைவர் ஒருவரைப் பார்த்து இன்னுமொரு அரசியல்வாதி ‘பேச்சுவார்த்தை எப்படி அமைந்திருந்தது?’ என்று கேட்ட போது, ‘புரியாணி ருசியாக இருந்தது என்று சொன்னதாக,’ அரசியல் மேடைகளில் அந்தக் காலத்தில் நகைச்சுவையாக பேசுவார்கள்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளின் மையப் புள்ளியில் நின்று, அவற்றைக் கையாளாத அரசியல் தலைவர்கள், சமூகத்திற்காக உண்மையில் ‘சுட வேண்டிய பலகாரங்களைச் சுடாமல்’ வெறுமனே ‘சிலுசிலுப்புகளில்’ மக்களை திருப்தியடையச் செய்ய முனைவதை காணும்போதெல்லாம் இந்த இந்த கதை ஞாபகத்திற்கு வருவதுண்டு.
முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்தோடும். புலிகள் உள்ளிட்ட பிற தரப்புகளோடும் நடத்திய சமூகப் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், பேரம் பேசல்களால் சமூகத்திற்கு கிடைத்த நன்மைகளைவிட, ‘பேச்சுவார்த்தைக்குச் சென்றோம், நன்றாக கவனித்தார்கள்’ என்ற ஆறுதல்தான் அதிக சந்தர்ப்பங்களில் பெறுபேறாக மிஞ்சியது எனலாம்.
காரணம், முஸ்லிம் அரசியல்வாதிகளை எப்படிக் கவனிக்க வேண்டும்? எதனைக் காட்டி அடக்கி வைக்கலாம், இல்லாவிட்டால் எப்படி அவர்களின் அரசியலின் கதையை முடிக்க வேண்டும் என்பதெல்லாம் வெளித்தரப்பினருக்கு தெரிந்திருந்தது.
இது இவ்வாறிருக்க, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், விடுதலைப் புலிகளை முஸ்லிம் தரப்புச் சந்தித்த போது இடம்பெற்ற சில அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
இது அரசியல் தொடர்புள்ளவர்களால் ஏற்கெனவே அறியப்பட்ட விடயங்கள் என்றாலும், புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பல வருடங்கள் கடந்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்ற படியால் இப்போதும் இந்த விடயங்களின் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை.
2000 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட குழுவினரை, முஸ்லிம் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, நூர்தீன் மசூர், மசூர் மௌலானா உள்ளிட்ட குழுவினர் வடக்கில் சந்தித்தனர். யுத்தம் பெருவீச்சில் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இச்சந்திப்பு முக்கியமானதாக அமைந்திருந்தது.
இது பற்றி அண்மையில் கொழும்பில் பேசிய மு.கா. தலைவர், புலிகள் முஸ்லிம் தரப்புக்கு வழங்கிய வரவேற்புப் பற்றி சிலாகித்துக் கூறியிருந்தார்.
முஸ்லிம் சமையற்காரர் ஒருவரை வைத்தே தங்களுக்கு புரியாணி சமைத்துப் பரிமாறப்பட்டதாகவும், தொழுகைக்காக அவர்களே ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறியிருந்தார்.
இச் சந்திப்பு வரவேற்கத்தக்க நல்லதொரு முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை. அதேபோல், வரலாற்றுச் சம்பவங்களை, உண்மைகளை மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது மிக முக்கியமானது. ஆனால், வரலாற்றை பேசும்போது அதில் உள்ள பல பக்கங்களையும் பேச வேண்டும்.
அந்த வகையில் பார்த்தால், முஸ்லிம்களின் உரிமைகளை, அபிலாஷைகளை தமிழ்த் தேசிய அரசியல், உறுதிப்படுத்தாது என்று மர்ஹூம் அஷ்ரப், சேகு இஸ்ஸதீன் போன்றோர் கருதும் வரைக்கும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தமிழர் அரசியலைச் பெரும்பாலும் சார்ந்த்திருந்தது
அதேபோல், புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்களை திருப்பும் வரைக்கும் முஸ்லிம்கள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்தார்கள் என்பதும், பல இளைஞர்கள் தமிழ் ஆயுதக்குழுக்களில் இணைந்து போராடினார்கள் என்ற வரலாறும் நினைவு கொள்ளப்பட வேண்டும்.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அதனை கணிசமான அப்பாவி தமிழர்கள் விரும்பவில்லை என்பதுடன், முஸ்லிம்களுக்காக சில எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் குரல்கொடுத்து துரோகி பட்டத்தை பெற்றுக் கொண்டார்கள்.
அதுமட்டுமன்றி, சிலாபத்தில் உள்ள குடும்பமொன்று பிரபாகரனை காப்பாற்றி வைத்திருந்ததாக அவர் நினைவுகூர்ந்த விடயத்தையும் ரவூப் ஹக்கீம் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபாகாரனை மட்டுமல்ல இவ்வாறு பல தமிழ்க் குடும்பங்களுக்கு முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்திருக்கின்றார்கள் என்ற வரலாற்றை தமிழ் தலைவர்கள் ஏன் இன்னும் பேசவில்லை?
புலிகளின் தரப்பைச் சந்திக்கச் சென்ற போது முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு சிறப்பாக விருந்தோம்பல் வழங்கப்பட்டதில் ஒரு மூலோபாயம் இருக்கின்றது. அது கூட விளங்காதவர்களாக புலிகள் இருந்திருப்பார்கள் என்று கருத முடியாது. ஆனால், இந்தச் சந்திப்பின் பெறுபேறு என்ன?
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் குடியேற்றப்பட்டார்களா? வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் மீது பள்ளிவாசல்களிலும் வயல்நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கடத்தல்கள், கப்பம் பெறல்களுக்கு புலிகள் தரப்பு பிராயச்சித்தம் தேடியதா? அல்லது அந்தப் பணியை தமிழ் அரசியல்வாதிகள் செய்கின்றார்களா என்பதுதான் இங்குள்ள கேள்வி!
வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை ‘ஒரு துன்பியல் நிகழ்வு. அதற்கு மேல் அதுபற்றி நாங்கள் எதனையும் பேச விரும்பவில்லை’ என்று புலிகள் முஸ்லிம் தூதுக்குழுவிடம் சொல்லியிருந்தனர். மு.கா. தலைவரும் அதனை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார்.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் அளப்பரியன. இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்திற்கு அரசாங்கமோ அல்லது இந்திய படையோ ‘அது ஒரு துன்பியல் நிகழ்வு’ என்று கூறினால், எல்லாப் பிரச்சினைக்கும் பிராயச்சித்தம் காணப்பட்டு விடுமா? தமிழர்கள் அமைதி கொள்வார்களா?
அவ்வாறு சொல்வதை தமிழ் மக்களோ அல்லது சுயாதீனமாகச் சிந்திக்கின்ற யாருமோ ஒரு சரியான பதிலாக, பொறுப்புக்கூறலாக கருத மாட்டார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநியாயங்கள் விடயத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் போன்ற சில தலைவர்கள் ‘பாம்புக்கும் நோகாமல் பாம்பு அடித்த கம்புக்கும் நோகாமல் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கலாம்.
ஆனால், முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு முஸ்லிம்கள் மீதான ஆயுக் குழுக்களின் படுகொலைகள், மீறல்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டு;ம். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் முழுமையாக மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்பதே ஆகும்.
வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது சர்வசாதாரண நிகழ்வல்ல. சில மணிநேர அவகாசத்தில், உடுத்த உடையோடு கிட்டத்தட் ஒரு இலட்சம் வடபுல முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் இருந்து இனச்சுக்கதிகரிப்பு செய்யப்பட்டனர்.
கையில் பணத்தையோ, நகைகளையோ, சொத்துக்களையோ கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. புலிகள் வீதிகளில் முஸ்லிம்களை மறிந்து பரிசோதனை செய்து வெளியனுப்பியதாக கண்ணால் கண்ட சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கி;ன்றன. இது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதால் மட்டும் இதற்கு பிராயச்சித்தம் தேடிவிட முடியாது.
கிழக்கில் பள்ளிவாசல்களில் புலிகள் மேற்கொண்ட உயிர்பறிப்புக்களும், குருக்கள்மடம் போன்ற படுகொலைகளும், அதேபோல் (ஹக்கீம் கூறியிருப்பது போல) வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றமும் புலிகளின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மிகப் பெரிய வடு, கறையாகும். இந்தக் கறை இன்னும் முழுமையாக கழுவப்படவில்லை.
முஸ்லிம்களை வடக்கிற்கு மீள அழைப்பதற்கு பிரபாகரன் உடன்பட்டிருந்ததாக மு.கா. தலைவரை மேற்கோள் காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. இதனைப் பார்க்கின்ற போது, அவர்களது உள்மனக்கிடக்கை வேறுமாதிரியாக இருந்தது என்றே எண்ண வேண்டியுள்ளது.
சரி அதுபோகட்டும், புலிகளின் தலைவர் பிரபாகரன் தவறு என உணர்ந்த ஒரு செயலுக்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் ஏன் இதுவரை முயற்சி செய்யவில்லை. தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை ஏன் வடபுல முஸ்லி;ம்களின் மீள் குடியேற்றத்திற்கு; கொடுக்கவில்லை?
மலையகத்தில் வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மலையக மக்களை வடக்கு, கிழக்கில் குடியேற்ற விரும்பம் தெரிவிக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள், 35 வருடங்களுக்கு முன்னர் தங்களுக்காக போராடிய இயக்கத்தால் துரத்தப்பட்ட முஸ்லிம்களை வடக்கிற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்க எது தடையாக உள்ளது என அடுக்கடுக்காக கேள்விகள் உள்ளன.
புலிகள் முஸ்லிம் தரப்பிற்கு சிறந்த வரவேற்பையும் மெய்சிலிர்க்கும் விருந்துபசாரத்தையும் வழங்கினார்கள் என்றாலும், அந்த சந்திப்பால் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டதைத் தவிர முஸ்லிம் தரப்பிற்கு எதிர்hர்;த்த பலன் கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
எனவே, புலிகள் வழங்கிய புரியாணிக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட முஸ்லிம்களின் கண்ணீருக்கு, அகதி வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
மறுபுறத்தில், இந்த அளவுக்கு இச்சந்தப்பை சிலாகித்துப் பேசுகின்ற மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதே சந்திப்பில் கலந்து கொண்டதில் இருந்து இன்று வரை புலிகளை நேரிடையாக விமர்சித்து வருகின்ற தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா,
அகதி வாழ்வை அனுபவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அரசாங்கங்களுடன் ‘உறவு கொண்டாடிய’ காலங்களில் இதுபோன்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு நீதியை, தீர்வை பெற்றுக் கொடுக்க தவறிவிட்டனர் என்பது தனிக்கதை.
ஏ.எல்.நிப்றாஸ்

