முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) இரவு சுமார் 7.00 மணியளவில், குறித்த இளைஞனின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர், அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும்,
அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை அவர் வீடு திரும்பாத நிலையில், இதுகுறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த இளைஞன் தொடர்பான தகவல்கள் யாருக்காவது தெரிந்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 070 131 6536 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

