–
-கிறீன்லாந்து விவகாரத்தில் பின்வாங்கிய ட்ரம்ப்
உலகின் மிக விசாலமான தீவாகக் கருதப்படுகிறது கிறீன்லாந்து. 27000 கிலோ மீற்றர் நீளமும் ஆயிரம் கிலோ மீற்றர் அகலத்துடனான 2,16600 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுமுள்ள இத்தீவில்,வெறும் 96,583 பேரே வசிக்கின்றனர்.
கடும் குளிர் மற்றும் முன்னேற்றத்துக்கான எந்த வாய்ப்புகளும் இல்லாதுள்ளமை கருதி,இங்குள்ள பலர் டென்மார்கிற்கு குடிபெயர்கின்றனர்.
இத்தீவு டென்மார்க்கின் ஆளுகைக்கு உட்பட்டுள்ளதால், இவர்களும் டென்மார்க் பிரஜைகளாகவே கருதப்படுகின்றனர்.
இத்தீவின் 80 முதல் 85 வீதமான நிலப்பரப்பு கனத்த பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. வாழ்வதற்கான இடம் இல்லை என்பதால்,தீவின் தென்மேற்கு கரையோரமாகவே மக்கள் வாழ்கின்றனர்.
இத்தனைக்கும் கிறீன்லாந்து ஐரோப்பிய யூனியன் நாடு அல்ல. நேட்டோவிலும் இது அங்கம் வகிக்கவில்லை.
எனினும் டென்மர்க்கின் ஒரு பகுதியாக இது கருதப்படுவதால், ஐரோப்பிய யூனியனுடனும் நேட்டோவுடனும் இது சம்மபந்தப்படுகிறது. ஆனாலும்,பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் என்பவை டென்மார்க் வசம் உள்ளன.
வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் என்பவை பிரதான தொழில்களாக உள்ள இத்தீவில், தனிநபர் வருமானம் மிகக் குறைவாக உள்ளது. இங்கு, உள்ளூர் மொத்த வருமானம் 43 மில்லியன் அமெரிக்க டொலராகக் கணிக்கப்பட்டுள்ளது.
சுய ஆட்சி அதிகாரமுள்ளதாக இருந்தாலும் டென்மார்க்கின் மன்னரே தலைவராக கருதப்படுகிறார். மொத்தமாக 31 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இத்தீவின் பாராளுமன்றத்தில் பிரதமராக ஜோன்ஸ் பிரட்டிக் பதவியிலுள்ளார். கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவர்களை கொண்டுள்ள கிறீன்லாந்தில்,மதுபாவனையுடையோரே அதிகம்.
வட அத்திலாந்திக் கடலில் இதன் அமைவிடம் உள்ளது. வட அமெரிக்கா மற்றும் யூரோ ஆசியாவுக்கிடையே இத்தீவு உள்ளபோதும் இத்தீவின் பெரும்பகுதி துருவ வட்டத்துக்குள்ளேயே உள்ளது. இதன் தலைநகர் நூக். பொருளாதார நோக்கம் கருதியே இத்தீவு டென்மார்க்கை சார்ந்துள்ளது.
கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 724 மில்லியன் ஸ்டேலிங் பவுண்களை டென்மார்க் செலவிட்டுள்ளது. பனிப்பிரதேசமான இத்தீவில் காடுகள் கிடையாது. இவ்வாறிருந்தும் ஏன் பசுமையைக் குறிக்கும் கிறீன்லாந்து என்றழைக்கின்றனர்?
மக்களை இங்கு குடியேறச் செய்யும் நோக்குடனே இப்பெயர் கொண்டு இத்தீவு அழைக்கப்படுவதாகவும் ஒரு கதையுண்டு.
கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒருவரை 982 ஆம் ஆண்டில் இங்கு அனுப்பி வைத்ததாகவும் நம்பப்படுகிறது.
இவர்தான் இத்தீவை கிறீன்லாந்து என்று அழைத்ததாகவும் சொல்லப்படுகிறது.இத்தீவை வாங்குவதற்கு அமெரிக்கா ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு என்ற பெயர் பெற்ற கிறீன்லாந்தை எப்படியாவது, படைபலத்தைப் பிரயோகித்தாவது, நாம் கைப்பற்றுவோம்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அது இன்றியமையாதது. நாங்கள் கிறீன்லாந்தை விட்டு வைத்தால், அங்கே ரஷ்யாவோ, சீனாவோ காலடி வைக்கும். அவை கிறீன்லாந்தில் தளங்களை அமைக்கலாம்.
இது அமெரிக்காவின் இருப்புக்கு விடுக்கப்படும் சவாலாகவே அமையும். எனவே கிறீன்லாந்து விஷயத்தில் நாம் தாமதம் காட்டலாகாது.
கிறீன்லாந்து தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் கொள்கையின் சாராம்சம் இதுதான்.
இரண்டாவது உலகப் போரின்போது கிறீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றி வைத்திருந்தது. யுத்தம் முடிவடைந்ததும் கிறீன்லாந்து திருப்பியளிக்கப்பட்டது.
இத்தீவு முன்னர் நோர்வே வசம் இருந்தது. மேலும் நோர்வேயும் டென்மார்க்கும் ஒரே நாடாக விளங்கின.
1814ஆம் ஆண்டில் இரண்டும் பிரிந்து தனித்தனி நாடுகளாயின. அப்போது நோர்வே தன் வசமிருந்த கிறீன்லாந்தை டென்மார்க்கிடம் கையளித்தது.
இவ்வாறுதான் டென்மார்க்கிடம் கிறீன்லாந்து வந்து சேர்ந்தது. அது ஒரு பெரிய தீவு. கடும் குளிர் பிரதேசம் என்பதால் டென்மார்க்கினால் முழுத் தீவுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.
அதேசமயம், தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, மின்சாரம் போன்றவற்றில் பெரிய அளவில் அபிவிருத்திகளை செய்ய முடியாத நிலையில் டென்மார்க் உள்ளது.
கிறீன்லாந்து மிக முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.
அமெரிக்கா ஏற்கனவே சில மாநிலங்களை விலை கொடுத்து வாங்கியுள்ளது.
-ரஷ்யாவிடமிருந்த அலஸ்காவை 1867ஆம் ஆண்டு அமெரிக்கா 7.2 மில்லியன் டொலர்களைக் கொடுத்து வாங்கியது.
– இஸ்பெயினிடமிருந்த புளோரிடா மாநிலத்தை 1819ஆம் ஆண்டு ஐந்து மில்லியன் டொலர்களைக் கொடுத்து அமெரிக்கா தனதாக்கிக் கொண்டது.
- அடம்ஸ் – ஒனிஸ் ஒப்பந்தத்தின் வாயிலாக ஸ்பெயின் டெக்சாஸ் மாநிலத்தின் மீதிருந்த உரிமையை விட்டுக் கொடுத்தது.
– பிரான்சிடமிருந்து லூசியானா மாநிலத்தை 1803ஆம் ஆண்டில் அமெரிக்கா விலைகொடுத்து வாங்கிக் கொண்டது.
இப்படி அமெரிக்க வலாற்றைப் புரட்டும் போது அமெரிக்கா தனது பூமியை விசாலமாக்கிக் கொள்வதற்காக வேறு நாடுகள் வசமிருந்த பெருநிலப்பரப்புகளை ஒப்பந்தங்கள் மூலமும் விலை கொடுத்தும் வாங்கியிருக்கிறது.
– ஹவாய் தீவுகளை லிலியோ காலனி என்ற இராணி ஆட்சி செய்து வந்தாள். அவளது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு 1898ஆம் ஆண்டில் அமெரிக்கா ஹவாயை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இவ்வாறு பெருநிலப்பரப்புகளை ஒப்பந்தங்கள் மூலமும் விலைகொடுத்தும், சதி செய்தும் தனதாக்கிக் கொள்வது அமெரிக்காவின் வழமை. வெனிசுவேலாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இப்போது கிறீன்லாந்தை விலை கொடுத்தோ அல்லது உடன்படிக்கை மூலமாகவோ வாங்குவதற்கு ட்ரம்ப் முயல்கிறார் என்றால் அதன் பின்னணி என்னவென்பதை வாசகர்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
”அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த கிரீன்லாந்தை வாங்கும் இலக்கை நிறைவேற்ற வேண்டுமெனில், அமெரிக்கா அதிகபட்சமாக 700 பில்லியன் டாலர் வரை செலுத்த வேண்டியிருக்கலாம் என்று அந்த செலவுக் கணிப்பை அறிந்த மூன்று பேர் தெரிவித்துள்ளனர்.
இந்த செலவுக் கணிப்பு, அறிஞர்கள் மற்றும் முன்னாள் அமெரிக்க அரச அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டதாகும்.”
சுவிட்சர்லாந்தில் கடந்தவாரம் நடைபெற்ற உலக பொருளாதார சம்மேளனத்தில் கலந்து கொண்ட டொனால்ட் ட்ரம்ப், கிறீன்லாந்து பற்றி தன் கருத்துகளை வெளியிடும்போது, டென்மார்க்குக்கு தன் ஆதரவை வெளிப்படுத்தும் ஐரோப்பிய நாடுகள் மீது புதிய தீர்வைகள் விதிக்கப்படும் என்ற தன் நிலைப்பாட்டில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டார்.
‘இராணுவத்தைப் பயன்படுத்தியாவது’ என்ற தன் வார்த்தைப் பிரயோகத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால் கிறீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தில் மாற்றம் இல்லை என்றும் அது நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
“கிறீன்லாந்தைப் பாதுகாப்பதில் டென்மார்க் பலவீனமான நிலையில் உள்ளது. கிறீன்லாந்து டென்மார்க்கில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது.
மேலும் வட அமெரிக்காவுக்கு அண்மித்ததாக காணப்படும் தீவே கிறீன்லாந்து. உண்மையைச் சொன்னால் அது எமக்கான பிரதேசத்தில் அமைந்திருக்கிறது.
ஆகவே ஐரோப்பிய நாடுகள் கிறீன்லாந்தை எம் பக்கமாகத் திருப்பி வைக்க வேண்டும். ஏனெனில் அமெரிக்காவின் மூலோபாய தேசிய பாதுகாப்புடன் மட்டுமல்ல, சர்வதேச பாதுகாப்புடனும் தொடர்புடைய தீவு அது” என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் ‘கிறீன்லாந்தை கைப்பற்றல்’ என்பதை ஐரோப்பிய நாடுகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
கைப்பற்றுவோம் என்ற அறிவிப்பு வெளியானதுமே பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், தனது தூதரகமொன்று கிறீன்லாந்தில் அமைக்கப்படும் என்றார்.
எந்தவொரு ஐரோப்பிய நாடும் இந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ட்ரம்பின் சண்டித்தனத்தை அந்நாடுகள் முற்றாக நிராகரிக்கின்றன. இதனையடுத்தே அந்நாடுகள் மீது ட்ரம்ப் 25 சதவீதத் தீர்வையை விதித்து, அதனால் பலனை விட பாதகமே அதிகம் என்பதை உணர்ந்ததும் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
அமெரிக்கக் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், தனது ஏரியாவுக்கு தன் எதிரி நாடுகள் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதில் அந்நாடு உறுதியாக உள்ளது.
1963 கியூபா ஏவுகணை விவகாரத்திலும் ஜோன் கென்னடி எந்த விட்டுக் கொடுப்பும் செய்யத் தயாராக இருக்கவில்லை. ஏவுகணைகளை ரஷ்யா அகற்றியேயாக வேண்டுமென்பதில் உறுதியாக நின்றார்.
வெனிசுவேலா விடயத்திலும் கம்யூனிஸ்ட் சார்பு மற்றும் சீனாவுடன் தோழமை கொள்ளும் ஒரு அரசு அங்கிருக்கக்கூடாது என ட்ரம்ப் கருதினார்.
எனவே, டென்மார்க்கில் இருந்து 3500 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பெருந்தீவில் என்ன நடக்கிறது என்பதை டென்மார்க் அரசினால் தெரிந்து கொள்ள முடியாத ஒரு நிலையில் அங்கே சீன, ரஷ்ய செல்வாக்கு படிப்படியாக ஏற்படலாம். ஒரு நெருக்கடியான சமயத்தில் சீனாவோ ரஷ்யாவோ அங்கே யாரும் அறியாத வகையில் தளமொன்றை அமைக்கலாம் என்ற அச்சம் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு உண்டு.
அத்தீவு தன் வசமிருந்தால் எதிரி நாடுகள் அப்பக்கமாக வரமாட்டா என்பது அமெரிக்க நிர்வாகத்தின் கணிப்பு. மேலும் நேட்டோ தளமொன்றை துருவத்தை அண்டியதாக அமைக்க வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், கனத்த பனிப்பாறைகளில் கீழ் ஏராளமான அரிய கனிமங்கள் அம்மண்ணில் புதையுண்டு இருப்பதாக கருதப்படுகிறது. அத்தீவின் அடி ஆழத்தில் மசகு எண்ணெய் பெருமளவில் இருப்பதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் பனிப்பாறைகளைத் தளைத்து ஆழம்சென்று எண்ணெய் வளத்தைத் தொடுவதென்பது மிகச் சிரமமானதும் அதிக செலவு பிடித்ததாகவும் இருக்கும் என்பதால், புவி வெப்பமடைதல் மூலம் கிறீன்லாந்து பனிப்பாறைகள் உருகும், அப்போது கனிமங்களையும் எண்ணெயையும் அள்ளலாம் என அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.
ட்ரம்ப், ஐரோப்பாவுடன் மோதுவார் என ரஷ்யாவும், சீனாவும் மிகவும் எதிர்பார்த்திருந்தன. 2025ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மொத்த பொருளாதார பெறுமதி 30.6 ட்ரில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்தது.
ஐரோப்பிய யூனியனின் 2026க்கான மொத்த பொருளாதார பெறுமதி 22.52 ட்ரில்லியன் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு பொருளாதார சக்திகளும் எதிரெதிர் நிலையில் நிற்கும்போது கூத்தாடிக்கு கொண்டாட்டமாகத்தானே இருக்கும்!
ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் நேட்டோ என்ற ஏற்பாடு எப்போதுமே கிலியைத்தரும் ஒன்று. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் என சக்திமிக்க நாடுகள் உட்பட்டதாக 32 நாடுகள் நேட்டோவில் அங்கம் வகிக்கின்றன.
உலகின் சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணி ஒரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுமானால் எதிரி நாட்டின் மீது நேட்டோ பதில் தாக்குதல்நடத்தும் என்பது அந்த அமைப்பில் காணப்படும் முக்கியமான ஷரத்து.
சீனாவுக்கோ, ரஷ்யாவுக்கோ இத்தகைய இராணுவ கட்டமைப்பு கிடையாது. ட்ரம்ப் ஐரோப்பாவுடன் மோதிக் கொண்டால் நேட்டோ பலவீனமடையும் என்பது ரஷ்யா, சீனாவின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இதனால்தான், எந்தவொரு நெருக்கடியானாலும் நேட்டோவை பலவீனமடையச் செய்யலாகாது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சட்டவரைவை தயாரித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
கிறீன்லாந்தை விலைகொடுத்து வாங்குவதற்கு ஏற்கனவே சில தடவைகள் அமெரிக்கா முயற்சி செய்திருக்கிறது. பலன் கிட்டவில்லை. தற்போது இன்னொரு முயற்சி.
ட்ரம்பின் பதவிக்காலம் முடிவடையும் வரை இது தொடரும். பின்னர் அமுங்கும். இன்னொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆரம்பிக்கவும் செய்யலாம்.
அருள் சத்தியநாதன்
