“ஐந்து அறிவு என்றாலும் நாய்களின் பாசம் என்பது நாம் பலரும் அறிந்ததே. அதனால்தான் பலரது வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள் போலவே வளர்ந்து வருகின்றன நாய்கள்.

இந்நிலையில் ஹிமாச்சல்பிரதேசத்தில் வளர்ப்பு நாய் ஒன்றின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து, மனதை உருக்கிவருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பார்மூரில் பிக்ஷித் ராணா மற்றும் பியூஷ் என்ற இளைஞர்கள் ஜன.23 அன்று பர்மணி கோயிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் கடும் பனிப்பொழிவில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். பின்னர் இருவரையும் தேடி, உள்ளூர்வாசிகளும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்தை (உடல்கள் இருந்த இடத்தை) அடைந்துள்ளனர்.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.அதிக பனிப்பொழிவால் பியூஷின் உடல் பனி அடுக்குகளுக்கு அடியில் புதைந்துள்ளது.

ஆனால் பியூஷ் உடலின் அருகிலேயே நான்கு நாட்களாக அவனது நாய் அமர்ந்திருந்துள்ளது. உறைபனி, காற்று, பனிப்புயல் என அனைத்தையும் தாண்டி, உணவு உண்ணாமல் பியூஷின் வளர்ப்பு நாயான பிட்புல் அவரின் உடலுக்கு அருகிலேயே இருந்துள்ளது.

மேலும் காட்டு விலங்குகளிடம் இருந்தும் உடலை காத்துள்ளது. அவர் மீண்டும் வருவார் என்ற எண்ணமோ, எதுவோ, எதுவாகினும் நான்கு நாட்களாக அங்கேயே இருந்துள்ளது.

மீட்புக் குழுவினர் சென்றபோதும் முதலில் உரிமையாளரின் உடலை அணுகவிடாமல் ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டுள்ளது.

பின்னர் உதவுவதற்காகத்தான் வந்துள்ளனர் என்பதை அறிந்து உடலை விட்டு சிறிதுதூரம் விலகிச்சென்று மீட்புக்குழுவினரை அவர்களின் கடைமையை செய்ய அனுமதித்துள்ளது.

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.விலங்குகளால் மட்டுமே மரணத்தையும் தாண்டிய விசுவாசத்தையும், அன்பையும் காட்ட முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply