இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சவா­லான கால­கட்டம் ஒன்­றுக்குள் காலடி எடுத்து வைத்­தி­ருக்­கி­றது.

அந்த கட்சி தன்னை மீள­மைத்துக் கொள்­வதில் அல்­லது வலுப்­ப­டுத்திக் கொள்­வதில் அக்­கறை செலுத்­து­வதை விடுத்து, உள்­ளக முரண்­பா­டு­களை கூர்­மைப்­ப­டுத்­து­வ­தி­லேயே கவனம் செலுத்தி வரு­கி­றது.

அண்­மையில் அடுத்­த­டுத்து நடந்த அர­சியல் குழுக் கூட்­டங்­களில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள், அவ­ச­ர­மா­ன­வை­யாக இருந்­த­னவே தவிர, அவ­சி­ய­மா­ன­வை­யாக இருக்­க­வில்லை.

தமிழ் அரசுக் கட்­சிக்கு வெளியே இருப்­ப­வர்கள், பிற கட்­சி­களில் உள்­ள­வர்கள் கூட, இந்த நிலை­மைக்­காக அனு­தா­பப்­ப­டு­கின்ற சூழல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

தமிழ் அரசுக் கட்­சிக்கு வாக்­க­ளிக்­காத, அதனை ஆத­ரிக்­காத- அத­னுடன் இணைந்து செயல்­ப­டா­த­வர்கள் கூட, தமிழ் அரசுக் கட்­சியின் இப்­போ­தைய செயல்­பா­டுகள் விட­யத்தில் அதிர்ச்சி அடைந்­தி­ருக்­கி­றார்கள்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­த­ர­னுக்கு எதி­ராக தமிழ் அரசுக் கட்சி எடுக்க முனையும் தீர்­மானம் தான், இப்­போ­தைய சர்ச்­சை­க­ளுக்கு காரணம்.

அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் உறுப்­பி­ன­ராக இருக்கும் சிறி­தரன், அரச தரப்­புடன் இணைந்து வாக்­க­ளித்து வரு­கிறார் என்ற குற்­றச்­சாட்டை முன்­னி­றுத்தி, அவரை அந்தப் பத­வியில் இருந்து வில­கு­மாறு அர­சியல் குழுவில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அளிக்­கப்­பட்ட கால­அ­வ­கா­சத்­துக்குள் அவர் பதவி விலக மறுத்த நிலையில், அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது தமிழ் அரசுக் கட்சி.

கடை­சி­யாக திரு­கோ­ண­ம­லையில் நடந்த தமிழ் அரசுக் கட்­சியின் அர­சியல் குழுக் கூட்­டத்தில் தாம் பதவி விலகப் போவ­தில்லை என சிறி­தரன் தெளி­வாக கூறி­யி­ருக்­கிறார்.

இது தமிழ் அரசுக் கட்­சி­யினால் தரப்­பட்ட பத­வி­யல்ல என்றும், அதனால் அதனை மீளப் பெறு­மாறு கட்­சியால் கூற முடி­யாது என்றும், அந்த முடிவை தானே எடுக்க முடியும் எனவும் சிறி­தரன் வாதிட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதை­ய­டுத்து, அவரை அர­சியல் குழு எப்­படி தமிழ் அரசு கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழு தலை­வ­ராக நிய­மித்­ததோ, அது­போ­லவே அந்தப் பத­வியில் இருந்து அவரை நீக்­கு­வ­தற்கும் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக சுமந்­திரன் கூறி­யி­ருக்­கிறார். இந்த தகவல் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

மட்­டக்­க­ளப்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த போது, கட்­சியின் பதில் பொதுச்­செ­ய­லா­ள­ரான எம்.ஏ.சுமந்­திரன் இதனை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

ஆனால், அதே நேரத்தில் கட்சி இன்­னமும் அவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுக்­க­வில்லை என, கட்­சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவ­ஞானம் ஊட­கங்­க­ளுக்கு கூறி­யி­ருந்தார். சிறி­தரன் பதவி வில­கு­வ­தற்கு ஒரு வார கால­அவ­காசம் கொடுக்கும் வகையில் தான், இது பற்றி அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்றும் கூறப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும், சிறி­த­ர­னுக்கு எதி­ரான நட­வ­டிக்கை விட­யத்தில், தமிழ் அரசுக் கட்­சியின் அர­சியல் குழு கிட்­டத்­தட்ட ஒரு­மித்த நிலையில் உள்­ள­தாகத் தெரி­கி­றது.

அதி­லுள்­ள­வர்கள் அனை­வரும், இந்த நட­வ­டிக்கை விட­யத்தில், எம்.ஏ. சுமந்­தி­ரனின் வழி­காட்­ட­லையும் தீர்­மா­னங்­க­ளையும் ஏற்றுச் செயல்­ப­டு­கின்­ற­வர்கள்.

தமிழ் அரசுக் கட்சி இப்­பொ­ழுது முற்று முழு­தாக சுமந்­தி­ரனின் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்து விட்­டது.

இவ்­வா­றான நிலையில், இந்த நிலைமை ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல.

சிறி­தரன் மீது எடுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள், கட்­சியை மேல் மட்­டத்தில் உடைக்­காது, ஆனால், கீழ் மட்­டத்தில் அது அரித்து, பல­வீ­னப்­ப­டுத்தும்.

உயர் மட்­டத்தில் உள்­ள­வர்கள் சுமந்­தி­ரனின் செயற்­பா­டு­களை எதிர்க்கத் திரா­ணி­யற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.

அவ­ரது தயவை நம்பி இருப்­ப­வர்கள், அவரை எதிர்க்­காமல் இருப்­பதால், அவரால் உயர் மட்­டத்தில் தான் விரும்­பு­கின்ற தீர்­மா­னங்­களை எடுக்க முடி­கி­றது.

ஆனால், அடுத்­த­டுத்த கட்­டங்­களில் உள்­ள­வர்கள் இந்த தீர்­மா­னத்தை ஆத­ரிக்­கி­றார்­களா என்ற கேள்வி இருக்­கி­றது. அதை­விட கட்­சிக்கு வாக்­க­ளிக்­கின்­ற­வர்கள் இதனை ஏற்றுக் கொள்­வார்­களா என்ற மிகப் பெரிய சந்­தே­கமும் உள்­ளது.

சிறி­தரன் தமிழ் அரசுக் கட்­சியை பொறுத்­த­வ­ரையில் முக்­கி­ய­மா­ன­தொரு தலைவர். ஜன­நா­யக ரீதி­யாக அந்தக் கட்­சியின் தலை­வ­ராக கூட தெரிவு செய்­யப்­பட்­டவர்.

அவரால் அந்தப் பத­வியை கைப்­பற்ற முடி­யா­த­படி தடுக்­கப்­பட்­ட­துடன் இன்று கட்­சிக்­குள்­ளேயே ஓரங்­கட்­டப்­படும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார்.

இந்தச் சூழலில் தான், அவ­ருக்கு எதி­ரான நகர்­வுகள் தீவிரம் பெற்­றி­ருக்­கின்­றன.

இது தமிழ் அரசுக் கட்­சிக்கு ஏற்­படக் கூடிய பாதிப்பு மாத்­திரம் அல்ல, அதற்கு அப்பால் தமிழ் தேசிய அர­சி­யலில் தாக்கம் செலுத்தக் கூடி­யது.

அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்டார், இரா­ணுவ பின்­னணி கொண்­ட­வர்­களை ஆத­ரித்தார் என்ற குற்­றச்­சாட்­டு­களை கூறக்­கூ­டிய தார்­மீக உரிமை சுமந்­தி­ர­னுக்கு இருப்­ப­தாக யாரும் கூற­மாட்­டார்கள்.

ஏனென்றால், அவர் கடந்த காலங்­களில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துடன் எப்­படி இணைந்து செயற்­பட்டார் என்­பது உல­க­றிந்த உண்மை.

தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் முடி­வு­களை ஆத­ரித்து விட்டார் என்று சிறி­தரன் மீது பழி போடு­கின்ற இதே சுமந்­திரன், ஜே.வி.பி.யை வடக்­கிற்கு கொண்டு வந்து சேர்ப்­பதில் முக்­கிய பங்கு வகித்­தி­ருந்தார்.

யாழ்ப்­பா­ணத்தில் ஜே.வி.பி.யின் மே தின பேர­ணியில் சுமந்­திரன் முன்­னிலை வகித்துச் சென்­றதை யாரும் மறந்­தி­ருக்­க­மாட்­டார்கள். அப்­ப­டிப்­பட்­டவர் இன்று சிறி­த­ரனை அர­ச­த­ரப்­புக்கு ஆத­ர­வா­னவர் என அடை­யா­ளப்­ப­டுத்தி, தமிழ் தேசிய அர­சி­யலில் இருந்து வெளி­யேற்ற முனை­வது அபத்­த­மான செயற்­பாடு.

சிறி­த­ரனை தமிழ் அரசுக் கட்­சியில் இருந்து அகற்­று­வ­தற்கு எடுக்­கப்­ப­டு­கின்ற முயற்சி, அந்தக் கட்­சிக்குள் முரண்­பா­டு­களை இன்னும் தீவி­ரப்­ப­டுத்தும்.

ஏனென்றால், சிறி­தரன் வெளி­யே­றி­னாலோ, அல்­லது வெளி­யேற்­றப்­பட்­டாலோ, அது வடக்கில் தமிழ் அரசுக் கட்­சியின் வாக்கு வங்­கியில் பெரும் உடைமை ஏற்­ப­டுத்தும்.

அத்­த­கைய ஒரு சூழலை உரு­வாக்­கு­வதை நோக்­க­மாகக் கொண்டு, அந்த கட்­சியின் தலை­மைத்­துவம் செயற்­ப­டு­கி­றது என்றால், அது நிச்­ச­ய­மாக தமிழ்த் தேசிய அர­சி­ய­லுக்கு பொருத்­த­மற்­றது.

ஏனென்றால், தமிழ்த் தேசிய அர­சி­யலை வலுப்­ப­டுத்­துதல், இன்­றைய முக்­கி­ய­மான தேவை­யான இருக்­கி­றது.


சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அர­சியல் தமிழ் மக்கள் மத்­தியில் ஊடு­ரு­வு­கின்ற சூழலில், தமிழ் அரசுக் கட்­சியை சிதைக்கும் வகையில் முடி­வு­களை எடுப்­பது எந்த வகை­யிலும் தமிழ்த் தேசிய அர­சியல் தலை­மைக்­கு­ரிய பண்­பாக இருக்க முடி­யாது.

சிறி­த­ர­னுக்கு எதி­ரான முயற்­சிகள் தீவிரம் அடைந்­துள்ள சூழலில், அவர் மீது தமிழ் அரசுக் கட்சி எடுக்கப் போகும் எந்த நட­வ­டிக்­கையும் ஆபத்­தான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தும்.

இதனை சுட்­டிக்­காட்­டு­ப­வர்கள் மீதும் சுமந்­திரன் கடும் வெறுப்பை வெளிப்­ப­டுத்­து­கிறார்.

மட்­டக்­க­ளப்பில் நடந்த நிகழ்வில், அவர் சமூக ஊட­கங்­களை கடுமையாக விமர்­சித்­தி­ருந்தார்.

சிறி­தரன் விவ­கா­ரத்தில் தமிழ் அரசுக் கட்சி உள்­ளக நட­வ­டிக்­கை­களை எடுப்­பதை விட்­டு­விட்டு, அதனை வெளிச்சம் போட்டு பிர­சா­ரப்­ப­டுத்தி மோச­மாக்­கு­வ­தி­லேயே கவனம் செலுத்­து­கி­றது.

இது கட்­சிக்குள் எடுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்கை அல்ல.

தமிழ் தேசிய அர­சியல் பரப்பில் சிறி­த­ரனை குறி வைத்து நகர்த்­தப்­படும் நட­வ­டிக்கை.

இந்த நட­வ­டிக்கை சிறி­த­ர­னி­ட­மி­ருந்து பாரா­ளு­மன்ற குழு தலைவர் பதவி, அர­சி­ய­ல­மைப்பு பேரவை உறுப்­பினர் பத­வி­களைப் பறிப்­பதை மாத்­தி­ர­மல்ல, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியைக் கூட பறிக்கும் நோக்கம் கொண்­டது. அதன் ஊடாக நேரடி ஆதாயம் அடையக் கூடி­யவர் சுமந்­திரன் என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை. சிறி­த­ரனின் பாரா­ளு­மன்ற ஆசனம் வெறி­தானால், அதன் நேரடி பலன் சுமந்­தி­ர­னுக்கு கிடைக்கும்.

அவரே பட்­டி­யலில் அடுத்த இடத்தில் இருப்­பவர். ஆக தனிப்­பட்ட அர­சியல் நலன்கள் அடை­வ­தற்­காக முன்­நகர்க்­கப்­படும் காய் நகர்த்­தல்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்­சியை முட்டு சந்­தியில் கொண்டு வந்து நிறுத்தப் போகிறது.

அத்தகைய ஒரு மோசமான நிகழ்ச்சி நிழலுக்குள் தமிழ் அரசுக் கட்சி சிக்கிப் போய் இருக்கிறது.

தமிழ் அரசுக் கட்சியின் இந்தப் பலவீனம், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலையும் சிதைக்கும்.

ஏனென்றால் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் அரசுக் கட்சி தான் தமிழ்த் தேசிய அரசியலின் முகமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதனை சிதைத்து சின்னாபின்னம் ஆக்கும் ஒரு நடவடிக்கையாகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டது.

இப்பொழுது அதனை ஒட்ட வைக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் கூட, அது சுய இலாப நோக்குடையது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சியை உடைத்து சிறிதரனை வெளியேற்றுவது அல்லது அதற்கு ஈடான ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது, தமிழ் தேசிய அரசியலை மேலும் பலவீனப்படுத்தும்.

இத்தகைய ஒரு நிலையை எதிர்பார்த்தே இந்தக் காய்கள் நகர்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் இப்போது வலுவடைந்திருக்கிறது.

-கபில்-

Share.
Leave A Reply