மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில், புனாணை 126 ஆம் மைல் கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய மீன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிதென்னையைச் சேர்ந்த சம்சுதீன் முஹம்மது நவாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று இரவு 7.00 மணியளவில், பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக சிறிய மீன் லொறியும், ஓட்டமாவடியிலிருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் புனாணை பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் லொறிச் சாரதியை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply