அஸ்கிரிய, மல்வத்த, அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது சாதாரணமான ஒரு விடயம் அல்ல. மகாநாயக்கர்கள் எப்போதாவது சில பிரச்சினைகளை முன் நிறுத்தி, அரசாங்கத்திற்கு அல்லது ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது வழமை.
மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களும் கூட்டாக கடிதம் எழுதுவது அசாதாரணமானது.
பாரதூரமான விடயங்கள் அல்லது பிரச்சினைகள் குறித்தே அவர்கள் கூட்டாக கடிதங்களை எழுதுவார்கள்.
இலங்கையில் பௌத்த பாரம்பரியம் மற்றும் பௌத்த பீடங்களின் அரசியல் செல்வாக்கு தொடர்பாக அறிந்திருப்பவர்களுக்கு, மகாநாயக்கர்களின் இந்தக் கடிதம் எந்தளவுக்கு பாரதூரமானது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல..
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே மகாநாயக்கர்கள் தற்பொழுது கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
41 ஆவது கணக்காய்வாளர் நாயகம், 2025 ஏப்ரல் 08ஆம் நாள் ஓய்வுபெற்ற பின்னர், அந்தப் பதவி வெற்றிடமாக உள்ளது.
2025 ஏப்ரல் 09ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 05ஆம் திகதி வரை பதில் கடமைகளை நிறைவேற்ற, தர்மபால கம்மன்பில நியமிக்கப்பட்டிருந்தார்.
அதற்குப் பின்னர், அந்தப் பதவிக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை, பதில் கடமை ஆற்றுபவரும் நியமிக்கப்படவில்லை.
நாட்டின் முக்கியமான ஒரு பதவி நிரப்பப்படாமல் இருப்பது குறித்து கவலை தெரிவித்து, மகாநாயக்கர்கள் இப்போது கடிதம் எழுதவில்லை.
அந்தப் பதவிக்கு யாரையேனும் ஒருவரை நியமிக்குமாறு கூறியும் கடிதம் எழுதவில்லை.
அவர்கள், 2025 ஏப்ரல் 09ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 05ஆம் திகதி வரை பதில் கடமைகளை நிறைவேற்றிய கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின், மிகவும் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை, கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க வலியுறுத்தியே கடிதம் எழுதியுள்ளார்கள்.
வேறு திணைக்களங்களில் இருந்து அல்லது வெளியில் இருந்து ஒருவரை கொண்டு வருவதை விட கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்துக்குள் உள்ள மூத்த அதிகாரியை நியமிப்பது தான் சிறந்தது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இது அரச நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேட்டை தடுப்பதற்கு பௌத்த பீடங்கள் தலையிட முற்படுவதை காட்டுகிறது.
அரச நிர்வாகத்தில் பௌத்த பீடங்களின் செல்வாக்கை அல்லது தலையீட்டை இது மீண்டும் நிரூபிப்பதாக உள்ளது.
அதேவேளை, அரசாங்கத்தின் மீதான பௌத்த பீடங்களின் தலையீடுகள் தொடர்பாக, புதிய சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் அரசியலமைப்பு என ஒன்று இருந்தாலும்,அதனை விட மேலான ஒரு சக்தியாக இருப்பது பௌத்த பீடங்கள்தான்.
பௌத்த பீடங்களே அரசியலை தீர்மானிக்கின்றன. அரசியல்வாதிகளின் செல்நெறிகளை வகுக்கின்றன.
அவர்கள் தடுமாறுகின்ற போது அல்லது தடம் மாறுகின்ற போது, அவர்களை சரியான வழிக்கு கொண்டு வருவதில் அல்லது அவர்களை மாற்றுவதிலும் பௌத்த பீடங்களே முக்கிய பங்காற்றுகின்றன.
ஆட்சியாளர்கள் தவறான வழியில் செல்லுகின்ற போது அதனை தடுத்து சரியான வழிக்கு கொண்டு வருவதற்கு மகா சங்கத்திற்கு பொறுப்பும் அதிகாரமும் உள்ளதாக பௌத்த பீடங்கள் நம்புகின்றன.
அவ்வாறான அதிகாரம் பௌத்த பீடங்களுக்கு உள்ளதாக சிங்கள பௌத்தர்களை நம்ப வைப்பதிலும் அவை வெற்றி பெற்றிருக்கின்றன.
மகா சங்கம் அல்லது பௌத்த பீடங்கள் அரசியலில் அல்லது அரச நிர்வாகத்தில் தலையிடுகின்ற பொழுது அது நியாயமானது என்று நம்புகின்ற நிலையிலே சிங்கள பௌத்தர்கள் இருக்கிறார்கள்.
அது நியாயமற்றதாக இருந்தாலும் கூட, பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களால் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
தற்போதைய அரசாங்கமும் பௌத்த பீடங்களுடன் நெருக்கமான உறவையே பேணி வந்தது.
ஜே.வி.பி. அல்லது தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பௌத்த பீடங்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததில்லை.
ஆனால், அதிகாரத்துக்கு வந்த பின்னர், அதனை தக்க வைத்துக் கொள்வதற்கு பௌத்த பீடங்களின் தயவு தேவை என்பதை உணர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மகாநாயக்க தேரர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்தி வந்திருக்கிறார்.
புத்தாண்டு தினத்தன்று கூட அவர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.
அந்த சமயத்திலும் கூட, கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நிரந்தரமாக எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.
தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த தர்மபால கம்மன்பிலவின் பதவிக்கு காலம் கூட நீடிக்கப்பட்டிருக்கவில்லை.
அந்த சமயத்தில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் அந்த விடயத்தை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டியிருக்கலாம். பொருத்தமானவரை நியமிக்குமாறு வலியுறுத்தியிருக்கலாம்.
இப்போது வெளிப்படையாக எழுதிய கடிதத்தின் ஊடாக, அவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைந்திருக்கிறார்கள்.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தமக்கு நெருக்கமான ஒருவரை நியமிப்பதன் ஊடாக, அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க முற்படுகிறது என்ற குற்றச்சாட்டு இப்பொழுது வலுவாக எழுந்திருக்கிறது.
கடந்த கால அரசாங்கங்களை மோசமாக விமர்சித்த தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இப்பொழுது முறைகேடுகள், மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் வரத் தொடங்கி இருக்கின்றன.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி குறித்த குற்றச்சாட்டு, தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டு, கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு என மூத்த அமைச்சர்களுடன் தொடர்புபட்ட பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்மை அல்லது பொய் என நிரூபிப்பதற்கு கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் கணக்கு ஆய்வு அறிக்கைகள் முக்கியமானவை.
ஆனால், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஒருவர் இல்லாத சூழலில் இந்த முறைகேடுகள் தொடர்பான விடயங்கள் வெளிவருவது தடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல இந்த பதவிக்கு தமக்கு நெருக்கமான ஒருவரை கொண்டு வருவதன் ஊடாக, எதிர்காலத்தில் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் வருகின்ற பொழுது, அதனை மறைப்பதற்கு அல்லது பாதுகாத்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
அதன் அடிப்படையிலேயே கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
பொருத்தமற்றவர்கள் முன்மொழியப்பட்ட போது, அரசியலமைப்பு பேரவை அவற்றை நிராகரித்தது.
இந்த சூழலில் அரசியலமைப்பு பேரவையில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ள சூழலில், அரசாங்கம் கணக்காய்வாளர் நியமனத்திற்கு யாரை முன்மொழியப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த சூழலில் தான், மகாநாயக்க தேரர்கள் இவரைத்தான் நியமிக்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றனர்.
இது அரச நிர்வாகத்தில் பௌத்த பீடங்களின் முக்கியமான தலையீடுகளில் ஒன்று.
அவர்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தில் தலையீடு செய்ய முனைகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதனை பௌத்த பீடங்களின் கடமையாக அவர்கள். குறிப்பிடுகிறார்கள்
கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் பதவியில் இருந்த போது, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் அமைச்சரவையை கலைப்பது, இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பது உள்ளிட்ட ஆறு பரிந்துரைகளை முன்வைத்து கோட்டாபாய ராஜபக் ஷவுக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் எழுதினார்கள். அதனை கோட்டாபய ராஜபக் ஷ செவிமடுக்கவில்லை.
அதன் பின்னர் அவர்கள் மீண்டும் நான்கு பரிந்துரைகளை முன்வைத்து கடிதம் எழுதினார்கள்.
அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் சங்க சபாவை கூட்டுவோம் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.
அதன் பின்னர் ஏப்ரல் மாதம் சங்க சபா கூட்டப்பட்டதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பதவி விலக வேண்டும் என்றும் அனைத்து கட்சி அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் மே மாதம் 9ஆம் திகதி நெருக்கடி இன்னும் தீவிரமடைந்த நிலையில், மகாநாயக்கர்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில், பாராளுமன்றத்தை கலைத்து இடைக்கால அரசு ஒன்றை நிர்வகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறாக காலத்துக்கு காலம் மகாசங்கங்கள் அல்லது பௌத்த பீடங்கள் அரசியலில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கின்றன.
தற்போதைய அரசாங்கம் அவ்வாறான தலையீட்டுக்கு இடமளிக்காத வகையில் மகாநாயக்கர்களுடன் தொடர்பை பேண முயன்றது.
ஆனால், அரசாங்கத்தின் போக்கில் பௌத்த பீடங்கள் திருப்தி அடையவில்லை.
அது தவறிழைக்கிறது அல்லது தவறு இழைக்க முனைகிறது அல்லது தவறை மறைக்க முற்படுகிறது என்ற சந்தேகம் மகாநாயக்கர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் தான் குறிப்பிட்ட ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு வலியுறுத்தும் கடிதத்தை கூட்டாக அவர்கள் அனுப்பியுள்ளனர்.
இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சந்திக்கின்ற ஒரு முக்கியமான ஒரு சவால்.
தர்மபால கம்மன்பிலவை நியமிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் அழுத்தம் கொடுத்துள்ள நிலையில், மற்றொருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க முற்படுவது, அரசாங்கத்துக்கும் பௌத்த பீடங்களுக்கும் இடையில் விரிசலை தோற்றுவிக்கும்.
அதேவேளை பௌத்த பீடங்களின் இந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்தால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீதான இமேஜ் சரிந்து விடும்.
கணக்காய்வாளர் நாயகம் நியமனம் விடயத்தில் அரசாங்கம் கையாண்ட தவறோ அணுகுமுறை அதனை நெருக்கடிக்குள் சிக்க வைத்திருக்கிறது.
இதேநிலை சட்ட மா அதிபர் விவகாரத்திலும் கூட ஏற்படலாம்.
-சத்ரியன்-

