சென்னை: ஆணுறுப்பின் முன் தோல் பகுதியில் சிலருக்கு புண் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் எதனால் உறவு கொள்ளும் போது ஆண்களுக்கு வலி ஏற்படுகிறது என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் கிளினிக்கில், வெளிநாட்டில் கடந்த பல வருடங்களாகப் பணி நிமித்தம் வாழும் சகோதரர் ஒருவர், தனது நீரிழிவு நோய்க்காக சந்தித்தார்.
ஒவ்வொரு முறை வரும் போதும் கட்டாயம் முழு உடல் பரிசோதனை (ரத்தப் பரிசோதனை; ஸ்கேன் ; ஈசிஜி ; எக்கோ ) என அனைத்தையும் மதுரை மாநகரில் எடுத்துக் கொண்டு வந்துவிடுவார்.
அவரது பரிசோதனை முடிவுகளில் ரத்த சர்க்கரை அளவுகள் சற்று கட்டுபாடற்று இருந்ததைக் காண முடிந்தது. அதற்குண்டான காரணத்தையும் அவரே விளக்கினார்.
கடந்த சில மாதங்களாக உணவு முறையில் கட்டுப்பாடு இல்லை, கூடவே அதிக மன அழுத்தம் இருப்பதையும் பகிர்ந்தார்.
அவருக்கான உணவுப் பரிந்துரையை எழுதி மருந்துகளில் மாற்றங்கள் செய்து விட்டேன். “மீண்டும் ஊருக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு ரத்த டெஸ்ட் எடுத்துட்டு வாங்க… பாத்துருவோம்..
அதுக்கேத்த மாதிரி டயட்டும் மாத்திரையும் எழுதித் தரேன்” என்றேன் “ஓகே சார். அப்படியே ஆகட்டும்” என்று விடை பெற்றார்.
அவர் வெளியே சென்ற சில மணித்துளிகளில் அவரை மீண்டும் உள்ளே அழைத்தேன். “மனைவியுடன் இணைவதில் ஏதும் பிரச்சனை இருக்கா சார்?”
அவரும் சற்று தயக்கத்துடன் “ஆமா சார்… நானும் உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். ஆனா ரொம்ப சங்கோஜமா இருந்துச்சு சார்.
நல்லவேளை நீங்களே கூப்ட்டு கேட்டுட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ் சார்” ” ஆமா சகோ.. சாப்பாடு – எக்சர்சைஸ் – மன அமைதி – மாதிரி இணையுடன் சேர்தலும் தேவைகள்ல ஒன்னுதான்.
அதுவும் பல மாதங்களுக்கு ஒரு முறை சில வாரங்கள் விடுப்பில் வரும் போது அதற்கான தேவை கண்டிப்பாக இருக்கும்.
இப்ப சொல்லுங்க என்ன பிரச்சனை?” “ஆணுறுப்பு முன் தோல்ல வெடிப்பு வெடிப்பா ஏற்பட்டு சேரும் போது வலிக்குது சார்.
அதைத்தான் எப்டி கேக்குறதுனு தெரியாம இருந்தேன்”. “இது ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது ஆண்களுக்கு வர்ற பிரச்சனை. பெலனோபோஸ்தைட்டிஸ் (BALANO POSTHITIS) எனும் பிரச்சனை.
ஆண்குறி முன் தோலில் வெடிப்பு போல புண்கள் ஏற்பட்டு உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் உராய்வின் காரணமாக ஆறாமல் இருக்கும்.
இதுக்கு சிகிச்சை இருக்கு. இந்த மாத்திரையும் களிம்பும் போடுங்க.. டயட் கண்ட்ரோல் பண்ணுங்க.. விரைப்புத் தன்மை ஓகேவா இருக்கா?” “விரைப்புத் தன்மை ஓகே வா இருக்கு சார்..
பிரச்சனை இல்லை” “சில நேரங்கள்ல நாள்பட்ட கண்ட்ரோல் இல்லாத நீரிழிவின் காரணமாக ஆண்குறியின் ரத்த நாளங்களில் சுருக்கம்/ அடைப்பு ஏற்பட்டு முறையான ரத்த ஓட்டம் இல்லாமல் போகலாம்.
அதனால் சரியான விரைப்பு கிடைக்காமல் போகலாம். இன்னும் சொல்லப்போனால், நீரிழிவு ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு போதுமான விரைப்பின்மை என்பது ரத்த நாள நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
பல நேரங்கள்ல பதட்டம்/ பயம்/ முறையாக விரைப்பு இருக்காதோ என்ற படபடப்பின் காரணமாக விரைப்பு இல்லாமல் போகலாம்.
இதை பெர்பார்மன்ஸ் ஆன்சைட்டி என்று கூறுவோம். உங்களுக்கு விரைப்பு சரியாக இருப்பது மகிழ்ச்சி… ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி டெஸ்ட் எடுத்துட்டு வாங்க பார்ப்போம்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

